Sunday, July 28, 2013

500 கோடி ரூபாய் சொத்துள்ள கலைஞரைப் பற்றிப் பேச உனக்கென்ன அருகதை உள்ளது?

எங்கள் சங்கத்தின் தென் மண்டல மாநாடு வரும் 03.08.2013
முதல் 06.08.2013 வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
மாநாட்டையொட்டி கேரள மாநிலம் கையூரில் 05.07.2013
அன்று தொடங்கிய " எல்.ஐ.சி காப்போம், தேசம் காப்போம்"
என்ற வேன் பிரச்சாரப் பயணம், கேரள மாநிலம் மற்றும்
தமிழகத்தில்  விரிவாக பிரச்சாரம் செய்து நேற்று
சென்னையில் நிறைவடைந்தது.

எங்களது வேலூர் கோட்டத்தில் இரண்டு நாள், சென்னைக்
கோட்டத்தில் இரண்டு நாள் என நான்கு  நாட்கள் இந்த
பிரச்சாரத்தில் பங்கேற்று இன்று அதிகாலையில்தான்
திரும்பினேன்.

ஆட்சியாளர்களின் மோசமான கொள்கைகளைப் பற்றி
மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடந்த
இந்த பிரச்சாரப் பயணத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை
மக்கள் உன்னிப்பாக கவனித்தனர் என்பது மனதிற்கு
நிறைவாக இருந்தது.

கண்டது, கேட்டது, காதில் விழுந்தது என்று பதிவுகளாய்
பகிர்ந்து கொள்ள ஏராளமாய் உள்ளது. நேரம் கிடைக்கும்
போதெல்லாம் அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் பதிவு இப்போது

மதுராங்கம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் பற்றி
விமர்சித்துக் கொண்டிருந்தேன். யாருடைய பெயரையும்
குறிப்பிடாவிட்டாலும் இரண்டு கண்கள் பிரச்சாரக் குழுவில்
இருந்தவர்களையே முறைத்துக் கொண்டிருந்ததையும்
கவனித்துக் கொண்டிருந்தேன்.

பேசி முடிந்ததும் அந்த கண்களுக்குரிய உருவம்
அருகில் வந்தது.

மிகவும் அழுக்கேறிய வெள்ளை வேட்டி, வாங்கியபோது
வெள்ளைக் கலரில்தான் அந்த சட்டை இருந்தது என்பதை
சூடமேற்றி சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது, பரட்டைத்
தலை, வெள்ளைத் தாடி, டாஸ்மாக் வாசம் இத்தனையோடும்
அருகே வந்த அந்த முதியவர் சத்தம் போட ஆரம்பித்தார்.

" எங்க தலைவர் கலைஞருக்கு ஐநூறு கோடி ரூபாய் சொத்து
இருக்கு.. உனக்கு என்ன இருக்கு?  ஒன்னுமே இல்லாத 
உனக்கு அவரப் பத்திப் பேச என்ன அருகதை இருக்கு?"

என்று சண்டைக்கு வந்து விட்டார். யார் என்ன சொன்னாலும்
அதைக் கேட்கும் நிலையில் அவர் உள்ளே போன சரக்கு
அவரை அனுமதிக்கவில்லை.

ஐநூறு கோடி ரூபாய் சொத்துள்ள தனது தலைவரை யாரும்
எதுவும் பேசக்கூடாது என்பது மட்டும்தான் அவர் மீண்டும்
மீண்டும் வலியுறுத்திய ஒரே விஷயம்.

ஐநூறு கோடி ரூபாய்க்கு மேலும் அவரது தலைவருக்கு
சொத்து உண்டு என்று பாவம் அவருக்கு தெரியவில்லை.

அவ்வளவு சொத்து சேர்க்க முடிந்த அவரது தலைவர்
எத்தனையோ வருடம் ஆட்சியில் இருந்தாலும் தனது
நிலைமை கிட்டத்தட்ட பிச்சைக்கார நிலைமையில்தான்
உள்ளது என்பதை அந்த மனிதன் யோசிக்காமலேயே
தலைமை மீது விசுவாசமாக இருப்பதுதான் கலைஞர், ஜெ
உள்ளிட்ட தலைவர்களுக்கு பலம்.

அவர்கள் யோசிக்க தொடங்கினால் இவர்களின் பிழைப்புதான்
திண்டாட்டமாகி விடும்.
 

2 comments:

  1. தனிநபர் துதிபாடும்,வழிபாடும்,
    சமூகத்தில் இருந்து மறையும் நாளே-
    முன்னேன்றபாதைக்கு அழைத்துசெல்லும்
    நாளாகும்.

    ReplyDelete
  2. தனிநபர் துதிபாடும்,வழிபாடும்,
    சமூகத்தில் இருந்து மறையும் நாளே-
    முன்னேன்றபாதைக்கு அழைத்துசெல்லும்
    நாளாகும்.

    ReplyDelete