Monday, July 8, 2013

எங்களுக்கானது மட்டுமல்ல இது

இந்தியாவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான
தோழர் ஜோதிபாசு அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்கத்தை
ஒட்டி எங்கள் சங்கத்து உறுப்பினர்களுக்கு வெளியிட்ட சுற்றறிக்கை
இது.

இது எங்கள் உறுப்பினர்களுக்கு மட்டுமானது அல்ல,
அனைவருக்குமானது.
அதனால் இங்கே
 



காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
வேலூர் கோட்டம்
சுற்றறிக்கை எண் 34/13                                                                                         08.07.2013
அனைத்து உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழர்களே,
             
ஒரு மாமனிதரின் நூற்றாண்டு விழா
நேர்மையான அரசியலுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவரும், சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் பொதுவுடமைவாதியும் மேற்கு வங்கத்தின் சாதனை முதல்வரும், இயந்திரமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகிய பிரச்சினைகளின் போது நடைபெற்ற போராட்டங்களில் எல்.ஐ.சி ஊழியர்களுக்கு துணை நின்றவருமான மாமனிதர் தோழர் ஜோதிபாசு அவர்களின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது.

வரலாற்றில் தன்னுடைய தடத்தை மிக அழுத்தமாக பதித்தவர் தோழர் ஜோதி பாசு. செல்வக் குடும்பத்தில் பிறந்தாலும் அவர் சிந்தனை ஏழை மக்களின் துயரத்தை துடைப்பதில்தான் இருந்தது. இங்கிலாந்து சென்று சட்டப்படிப்பு படித்தாலும் அந்த ஞானத்தை தனது பொருளாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சுதந்திரப் போராட்டத்திலும் அதன் பின் தொழிலாளர்களுக்கான போராட்டத்திலும் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதிலும் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ரயில்வே தொழிலாளர்களுக்கான தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மார்க்சியம் அவரை வழி நடத்தியது. மக்களுக்கான இயக்கங்களை மேற்கு வங்கத்தில் நடத்தியதன் மூலம் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். அறுபதில் நடைபெற்ற தேர்தல்களில் அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களை சட்டமன்றத்தில் பெற்ற போதும் மாற்று அரசு அமைக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிக்கட்சியின் அஜய் முகர்ஜிக்கு முதல்வராகும் வாய்ப்பை அளித்தவர். அவர் துணை முதல்வராக இருந்த போதுதான்  இயந்திரமயமாக்கலுக்கு எதிரான நமது போராட்டத்திற்கு துணை நின்று எல்.ஐ.சி நிர்வாகத்தின் சதிகளை முறியடித்தவர். மல்ஹோத்ரா குழு அறிக்கைக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவை  தீர்மானம் இயற்றியது.

இப்போது மம்தா நடத்துவது போல 1972 முதல் 1977 வரையிலும்  கூட காங்கிரஸ் கட்சியின் சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் ஒரு காட்டாட்சி நடந்தது. அந்த காட்டாட்சியை வீழ்த்தி இடது முன்னணி ஆட்சியை மேற்கு வங்க மக்கள் மலர வைத்தார்கள். தோழர் ஜோதிபாசு முதல் முறையாக முதல்வரானார். அதன் பின்பு இருபத்தி மூன்று ஆண்டுகள் அந்தப் பொறுப்பை செம்மையாக நிறைவேற்றினார்.

நிலச் சீர்திருத்தமும் உள்ளாட்சி அமைப்புக்களில் அதிகார பரவலும் மேற்கு வங்கத்தை மின்மிகு மாநிலமாக மாற்றியதும் எப்போதும் அவரது புகழை சொல்லிக் கொண்டிருக்கும். எளிமைக்கு எடுத்துக்காட்டாய், உழைப்புக்கு உதாரணமாய் திகழும் மக்கள் தலைவர் தோழர் ஜோதிபாசு அவர்களின் நினைவுகளைப் போற்றுவோம். அவர் வழி நடந்திடுவோம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒப்பம் எஸ்.ராமன்
பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment