Tuesday, July 16, 2013

இயேசுவை சாத்தான் போல சித்தரித்த உமாசங்கர்




நேற்று நான் எழுதிய பதிவின் தொடர்ச்சி இது.

பழைய யாகவா முனிவர் பாணியில் உமாசங்கர் கூறியதைப் படிக்கும்போது கோபமும் சிரிப்பும் இணைந்தே வந்தது. என்ன இந்த மனிதன் மெண்டல் போல பிதற்றியுள்ளாரே என்று சிரிப்பும். இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டியுள்ள பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி, இப்படி பொறுப்பில்லாமல் உள்ளாரே என்று கோபமும் வந்தது.

ஆனால் கொஞ்சம் நிதானமாக யோசிக்கிறபோது உமாசங்கரின் கூற்று எதிர்மறை விளைவுகளை உருவாக்கி கிறிஸ்துவர்களுக்கு தர்ம சங்கடத்தையே உருவாக்கி விட்டது என்பதை உணர முடிந்தது.

உமாசங்கர் தான் இயேசுவோடு நெருக்கமாக உள்ளதாக ஒரு பிம்பத்தை உருவாக்க நினைத்து இயேசுவிற்கும் கிறிஸ்துவ மதத்திற்கும் இழிவை ஏற்படுத்தியுள்ளார்.

தனது அபத்தமான சிந்தனை மூலம் உமாசங்கர் சொல்ல முயன்றது என்ன?

“ வெள்ளத்தை உருவாக்குமளவு இயேசு வல்லமை படைத்தவர்.

அவர் நினைத்தால் இந்துக்களை சுலபமாக பழி வாங்கி விடுவார். அந்தளவிற்கு இயேசுவிற்கு இந்துக்கள் மூலம் கோபமுள்ளது.

எனவே இயேசு மீண்டும் கோபித்துக் கொள்வதற்கு முன்பாக இந்துக்களே நீங்கள் மதம் மாறி விடுங்கள்.”

ஆனால் நடந்தது என்ன?

அமைதியானவர், அன்பே உருவானவர், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காண்பிக்கச் சொல்லும் பொறுமைசாலி, பாவிகளை ரட்சிக்கும் புண்ணியவான், இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்பவர், செவிடர்களை கேட்க வைப்பவர், ஊமைகளை பேச வைப்பவர், குருடர்களை பார்க்க வைப்பவர் என்பதுதானே இயேசுவைப் பற்றி இதுவரை உருவாக்கப்பட்டுள்ள தோற்றம்.

ஆனால் அப்படியெல்லாம் இல்லை,

இயேசு மாற்று மதத்தை பழி வாங்கும் சிந்தனை உடையவர்.
மோசமான அழிவுகளை உண்டாக்கக் கூடிய ஒரு அழிவு சக்தி

போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இயேசுவை சாத்தானின் ரேஞ்சிற்கு கொண்டு வந்து விட்டார் உமாசங்கர்.

அது மட்டுமா

வேளாங்கன்னியில் சுனாமியில் கிறிஸ்துவர்கள் இறந்தார்களே, அது யாரால் வந்தது? இயேசுவால் அதை ஏன் தடுக்க முடியவில்லை என்று பதில் சொல்ல முடியாத கேள்விகளையும் உமாசங்கர் உருவாக்கி விட்டார். இவர் செய்த அபத்தத்தால் ஏராளமானவர்கள் இன்று தலை குனிந்து நிற்கின்றனர்.

அதே போல் இது பற்றி பேசும் போது ஒரு தோழர் இன்னொரு தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

உமாசங்கர் சொன்னதே பைபிளுக்கு எதிரான ஒரு கருத்து.

முன்பு உலகை பிரளயத்தில் மூழ்கச்செய்த போது “ நான் இனி இது போன்ற வெள்ளத்தை உருவாக்க மாட்டேன் “ என்று இயேசு சொல்வதாக உள்ளது. அதற்கு முரணாக இவர் பேசியுள்ளார் என்று அத்தோழர் கருத்து தெரிவித்தார்.

இதிலே ஒரு நல்ல விஷயமும் வெளிப்பட்டது. உமாசங்கரின் கூற்றை பல கிறிஸ்துவர்களே நிராகரித்தார்கள், கண்டித்துள்ளார்கள். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

மதங்களுக்கு அப்பாற்பட்டு அரசுகளும் அரசை நடத்துபவர்களும் இருந்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது.

எந்த ஒரு மதமும் அடுத்த மதத்தையோ, அதை பின்பற்றுபவர்களையோ இழிவு படுத்தச் சொல்வதில்லை. சாதாரண மக்களுக்கு மதத்தை விட அவன் வாழ்வாதாரம்தான் முக்கியமானது.

ஆனால் மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் மத அடிப்படைவாதிகள் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். அவர்கள் தானும் வெறி பிடித்து அடுத்தவர்களுக்கும் வெறியேற்றி அதிலே குளிர் காய்கிறார்கள். தன் மதத்தினுடைய சிறப்புகளை சொல்வதற்கு பதிலாக அடுத்த மதத்தை குறை சொல்வதில் அதிக அக்கறை செலுத்தி மோதல்களை உருவாக்கும் காரணிகளாக இருக்கிறார்கள்.

மத அடிப்படைவாதிகள் தங்கள் மதத்திற்கும் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவமானத்தையும் இழுக்கையும் பிரச்சினைகளையும் தேடித்தருகின்றனர். மத மோதல்களுக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் மத அடிப்படைவாதிகளே காரணமாக உள்ளனர். ஆனால் இவர்கள் சுகபோக வாழ்வு நடத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்கின்றனர். ஆனால் பாதிக்கப்படுவது என்னமோ சாதாரண மக்கள்தான்.

மத அடிப்படைவாதிகளை ஒதுக்கி வைத்தாலே உலகில் உள்ள பிரச்சினைகளில் பாதியாவது தீர்ந்து விடும்.

2 comments:

  1. //மத அடிப்படைவாதிகளை ஒதுக்கி வைத்தாலே உலகில் உள்ள பிரச்சினைகளில் பாதியாவது தீர்ந்து விடும்//.
    een pathi entru sollirinkal muluvathum thirnthuvidum

    ReplyDelete
  2. You Are Correct. Umashankar had insulted Jesus

    ReplyDelete