Friday, July 5, 2013

யாருப்பா அது? இந்தியா திறந்த வீடு இல்லையா?



இவர்களை அனுமதிக்க மட்டும் இந்தியா திறந்த வீடா?

உலக நாடுகள் மீது அமெரிக்கா செய்த உளவு நடவடிக்கைகளை அம்பலப் படுத்திய அமெரிக்க முன்னாள் உளவுத்துறை ஊழியர் எட்வர்ட் ஸ்னோடன்  இப்போது அமெரிக்க அரசால் வேட்டையாடப்படுகிறார். மாஸ்கோ விமான நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ள எட்வர்ட் ஸ்னோடன்  இந்தியா உள்ளிட்ட 21 நாடுகளுக்கு அடைக்கலம் கேட்டு மனு அளித்துள்ளார்.

அமெரிக்கர்களை விட மிகச் சிறந்த அமெரிக்க விசுவாசி என்ற விருதைப் பெறும் போட்டி இந்திய அமைச்சரவை உறுப்பினர்கள் மத்தியில் நிலவுவதால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சலமான் குர்ஷித் அந்த வேண்டுகோளை நிராகரித்தது மட்டுமல்ல, யார் வேண்டுமானால் நுழைய இந்தியா என்ன திறந்த வீடா என்று கேட்டுள்ளார். இந்தியாவின் ஜனநாயக மரபிற்கு எதிரான முடிவு என்பது மட்டுமல்ல, அதை நாகரீகமற்ற முறையிலும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தூதரகத்தை உளவு பார்த்த அமெரிக்கா மீது வராத  கோபம், அதை அம்பலப்படுத்தியவர் மீது வருவது ஒரு மிகப் பெரிய வினோதம்.

இவர்களெல்லாம் அனுமதிக்கப்பட்டபோதோ இல்லை அனுமதிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறபோதோ இந்தியா திறந்த வீடல்ல என்ற உணர்வு இந்திய அமைச்சர் பெருமக்களுக்கு எப்போதாவது தோன்றியதுண்டா?

எந்த ஒரு அரசியல் நடவடிக்கையும் செய்யக் கூடாது என்ற நிபந்தனையோடு இந்தியாவில் அகதியாக அனுமதிக்கப்பட்டாலும் சுகபோக வாழ்வு நடத்திக் கொண்டு சீன எதிர்ப்பு அரசியலை இந்திய மண்ணில் செய்து கொண்டிருக்கும் தலாய் லாமா,

லாப வெறியோடு இந்திய பங்குச்சந்தையில் நுழைந்து இந்திய முதலீட்டாளர்களின் சேமிப்பை கொள்ளையடித்துச் செல்லும் சர்வதேச நிதி மூலதனம்.

இன்சூரன்ஸ், வங்கி, தொலை தொடர்பு என்று பல்வேறு துறைகளில் நுழைந்துள்ள பன்னாட்டுக் கம்பெனிகள்,

காலாவதியாகிப் போன உபகரணங்களைக் கொண்டு இந்தியாவில் அணு உலை துவக்க ஆசைப்படும் அமெரிக்க நிறுவனங்கள்

இந்திய வணிகர்களின் வாழ்வைச் சூறையாடி இந்தியாவில் கால் பதிக்க ஆசைப்படும் வால்மார்ட் போன்ற பகாசுர நிறுவனங்கள்.

இது மட்டுமா உணவு, உடை, பண்பாடு, கலாச்சாரம் என்று அனைத்திலும் நிகழ்ந்துள்ள படையெடுப்புக்கள்.

இந்தியாவை நாசம் செய்து, இந்திய மக்களை நடுத்தெருவில் நிறுத்தும் இவற்றையெல்லாம் அனுமதிக்க மட்டும் இந்தியா திறந்த வீடு என்று நினைப்பு இந்திய ஆட்சியாளர்களுக்கு உள்ளது போல.

No comments:

Post a Comment