Sunday, July 28, 2013

துரத்துகிறது, துரத்திக் கொண்டே இருக்கிறது

விடாது கறுப்பு என்பதைப் போல்  
என்னை "விடாது முள்ளங்கி" போலும்.

பொதுவாகவே எனக்கு முள்ளங்கி பிடிக்காது.
ஒரு காலகட்டத்தில் தினமும் முள்ளங்கி சாப்பிட
வேண்டிய கட்டாயத்தால் அதன் மீது வெறுப்பே
வந்து விட்டது.

நான் எந்த அளவு முள்ளங்கியை வெறுக்கிறேன்
என்று புரிய வைக்க ஒரு சம்பவத்தை சொல்வது
சரியாக இருக்கும்.

நான் முள்ளங்கியிடம் சிக்கித் தவித்த அந்தக்காலத்தில்
அலுவலக வேலையாக நெய்வேலியில் இருந்து 
வேலூருக்கு வந்திருந்தேன். மதியமே வந்த பணி
முடிந்து விட்டது. ஆபீசர்ஸ் லைனில் இருந்த கோட்ட
அலுவலகத்திலிருந்து கொஞ்சம் தூரம் நடந்து வந்து
ஆரிய பவன் ஹோட்டலுக்குள் நுழைவதற்கு முன்பு
போர்டைப் பார்த்தால் முள்ளங்கி சாம்பார் என்று 
எழுதி வைத்திருந்தார்கள்.

அப்படியே மீண்டும் நடந்து வந்து கோட்ட அலுவலகத்திற்கு
அப்பால் இருந்த கண்ணா ஹோட்டலுக்குச் சென்று அங்கே
முள்ளங்கி அன்றைய சமையலில் கிடையாது என்பதை
ஒரு தடவைக்கு இரு தடவை உறுதிப் படுத்திக் கொண்டே
உள்ளே சென்றேன்.

நீங்கள் கூட கேட்கலாம், ஆரிய பவன் ஹோட்டலிலேயே
வேறு ஏதாவது சாப்பிட்டிருக்கலாமே, சாம்பார் சாப்பிடாமல்
இருந்திருக்கலாமே.

முள்ளங்கி சாம்பார் என்பதை போர்டில் பார்த்ததும், 
அந்த எழுத்துக்கள் ஏதோ என்னை கிண்டல் செய்வது போலவே
இருந்ததால் கோபம் வந்து வேறு ஹோட்டல் சென்று
விட்டேன்.

அந்த அளவிற்கு முள்ளங்கி மேல் வெறுப்பு.

தொடர்ந்து நான்கு நாட்கள் இப்போது பிரச்சாரப் பயணத்தில்
தினசரி ஹோட்டலில்தான் சாப்பிட வேண்டியிருந்தது.

வியாழக் கிழமை- ராணிப்பேட்டை
வெள்ளிக்கிழமை -காஞ்சிபுரம்
சனிக்கிழமை - சென்னை.

அது என்னமோ மூன்று நாட்களிலும் மூன்று ஹோட்டல்களிலும்
சொல்லி வைத்தது போல முள்ள்ங்கி சாம்பாரே போட்டார்கள்.

சாம்பாரைத் தொடாமல் காரக்குழம்பு, ரசம், மோர் ஆகியவற்றை
வைத்து சமாளித்து விட்டாலும்

ஒரே ஒரு கேள்விதான்

ஏன்?

முள்ளங்கி ஏன் என்னைதுரத்திக்   
கொண்டே இருக்கிறது?

இன்னும் ஒரு கேள்வி

இந்த மூன்று நாட்களும் இரவில் ஏன்
ஆனியன் ரவா தோசை மட்டும் 
விரும்பி சாப்பிட்டேன்?
                                                                                                                                       

1 comment:

  1. நீங்கள் ஏன் முள்ளங்கியை விட்டு ஒதுங்கிபோகிறீர்கள்.
    அதே காரணுத்துக்காகத்தான் முள்ளங்கி உங்களை துரத்துகிறது.

    ReplyDelete