Saturday, March 22, 2014

கவிதை நியாயம் செய்யவில்லை.



சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி எங்களது மகளிர் துணைக்குழுவின் சார்பில் ஒவ்வொரு வருடமும் நிதி திரட்டி ஆதரவு தேவைப்படும் ஏதாவது ஒரு அமைப்பிற்கு உதவி செய்வது மரபு. கிளைவாரியாக இந்த பணி நடைபெறும். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட எண்பதாயிரத்தில் இருந்து தொன்னூறாயிரம் ரூபாய் மதிப்பில் உதவிகள் எங்கள் கோட்டத்தில் நடைபெறும்.

இந்த ஆண்டும் அது போன்ற பணிகள் நடந்தது. வேலூரைப் பொறுத்தவரை நான்கு கிளைகள் வசூலிக்கிற பணத்தை வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பணி நடக்கும். இந்த ஆண்டு விவேகானந்தர் முதியோர் இல்லம் என்ற அமைப்பிற்கு மொசைக் தரை போட நிதி அளிப்பது என்று முடிவு செய்து அந்த நிதியை அளிக்க அங்கே சென்றிருந்தோம். மூன்று மகளிர் தோழர்களும் வந்திருந்தனர்.

அங்கே இருந்த முதியவர்களுக்கு கோதுமை பிரெட் பாக்கெட்டும் வாங்கிச் சென்றிருந்தோம்.அங்கே இருந்த ஒவ்வொரு பாட்டியும் வந்திருந்த மகளிர் தோழர்கள் கன்னத்தை வருடி தலை மீது கை வைத்து மனதாற வாழ்த்து கூறியது நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபவமாக இருந்தது.

உதவி செய்ததை விட தங்களை வந்து பார்த்தது என்பதே அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட அவர்களின் இதயத்து வலியை நன்றாகவே உண்ர முடிந்தது. அங்கே பார்த்த நெகிழ்ந்த உணர்வை கவிதையில் முழுமையாக கொண்டு வர முடியவில்லை. 

முன் பின் பார்த்ததில்லை
முகமும் அறிந்ததில்லை,
நடுக்கத்தோடே
தள்ளாடிய கைகளை
தலை மேல் வைத்து
நன்றாக இரு என்று
பாசம் கலந்து
ஆசி தந்ததனர்.

என்றோ ஒரு நாள்
வந்தவர் மீதே
இத்தனை பாசமும்
வெள்ளந்தியாய் வெளிப்பட
எத்தனை ஏக்கம்
உள்ளே ஒளிந்திருக்கும்?

சின்ன உதவிக்கே
நெகிழ்ந்து போனது
தனிமையின் துயரத்தில்
தவிக்கும் நெஞ்சங்கள்.

ஏழ்மையின் கொடுமையால்
நிராகரிக்கப்பட்டாலும்
எதுவும் இல்லாதவர்கள்
இல்லை இவர்கள்,
உள்ளம் முழுக்க
நேசம் நிறைந்தவர்கள்.





1 comment:

  1. தோழா ! எதுவும் இல்லாதவர்கள் இல்லை ! நெஞ்சம் முழுக்க நிறந்தவர்கள் ! கவிதை நியாயம் செய்து விட்டது !---காஸ்யபன்.

    ReplyDelete