Tuesday, March 4, 2025

கவிஞர் நந்தலாலாவிற்கு செவ்வணக்கம்

 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவரும் சிறப்பான உரை வீச்சால் பல மேடைகளை தன் வசப்படுத்தியவருமான தோழர் கவிஞர் நந்தலாலா இன்று இயற்கை எய்தியது மிகவும் வருத்தமளிக்கிறது.

அவரை முதலில் பார்த்தது 1998 ம் வருடம் இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு வேலூரில் நடைபெற்ற போதுதான். நெடுஞ்செழியன் என்ற பெயரில் வங்கி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் நந்தலாலா என்று தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் துவக்க மாநாட்டின் போது அறிவித்தார்.

அன்று மாலை வேலூர் கோட்டை மைதானத்தில் கலை இரவு நிகழ்ச்சி நடந்தது. அதிலே ஞான.ராஜசேகரன் இயக்கிய "ஒரு கண், ஒரு பார்வை" குறும்படம் திரையிடப்பட்டது. ஆசிரியர் ஒருவரின் ஜாதிய வெறியால் கண் பார்வையை இழந்த சேலம் தனம் என்ற சிறுமியின் கதை அது.

குறும்படத்தை தொடர்ந்து பேச வந்தார் தோழர் நந்தலாலா. ஒரு புதிய அனுபவமாக இருந்தது அவரது உரை. அவரை தொடர்ந்து பேசிய பாரதி கிருஷ்ணகுமாரின் உரை வீச்சும் அசத்தலாக இருக்க, எங்கள் கோட்டச்சங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் ஒரு புதிய திறப்பு.

அந்த வருடம்தான் வேலூரைத்தாண்டி எங்கள் மாநாடு முதல் முறையாக புதுவையில் நடைபெற இருந்தது. பொது வெளியில் "மக்கள் ஒற்றுமை கலை விழா"  அப்போதிலிருந்து தொடங்கியது. அந்த நிகழ்வில் உரை வீச்சு நிகழ்த்திய தோழர் நந்தலாலா, அதன் பின்னும் பல வருடங்கள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருக்கோயிலூர், குடியாத்தம் என பல வருடங்கள் மக்கள் ஒற்றுமை கலை விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

குடியாத்தம் மாநாட்டிற்குப் பிறகு நீண்ட இடைவெளி. கடந்த 2024 ம் வருடம் திண்டிவனத்தில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை கலை விழாவில் கலந்து கொண்டு "நடந்த கதை மறந்து விட்டாய், கேளடா கண்ணா" என்ற தலைப்பில் உரை வீச்சு நிகழ்த்தி சிரிக்க, சிந்திக்க வைத்தார்.




முன்னதாகவே வந்திருந்து எங்கள் தோழர்கள் வழங்கிய "மாட்டிக் கொண்ட மகாராஜா" நாடகத்தையும் ரசித்து பார்த்து தோழர்களையும் பாராட்டினார்.

அந்த மாநாடே எங்கள் கோட்டத்தில்  அவர் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சி என்று எதிர்பார்க்கவில்லை.

ஒரு திறமையான, அர்த்தபூர்வமாக பேசுகிற, சிந்தனைகளை தூண்டுகிற சிறந்த பேச்சாளரை தமிழ்நாடு இழந்து விட்டது.

செவ்வணக்கம் தோழர் கவிஞர் நந்தலாலா . . .

No comments:

Post a Comment