Friday, March 21, 2025

கலவரத்தை தூண்டும் காவி சினிமாக்கள்

 


சங்கிகள் இப்போதெல்லாம் சினிமாக்கள் எடுக்கத் தொடங்கி விட்டனர். கொஞ்சம் உண்மை, நிறைய பொய், முழுக்க முழுக்க வன்மம், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரம் என்பதுதான் அவர்கள் திரைப்படங்களின் செய்திகள்.

இதற்கு முன்பாக எடுத்த காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி ஆகியவை அவ்வளவாக எடுபடவில்லை.

ஆனால் இப்போது வந்துள்ள "சாவா" என்ற படம் அவர்கள் விரும்பிய விளைவை கொடுத்து விட்டது.

சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி பற்றிய படத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பற்றி வெறுப்பேற்றும் வகையில் காட்சிப்படுத்த மகாராஷ்டிர சங்கிகள் தங்கள் வேலையை தொடங்கி விட்டனர். மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள ஔரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்று கிளம்பி விட்டார்கள். காவிக்கூட்ட தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் கலவரம் வெடிக்க அங்கே 144 உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஔரங்க்சீப் பற்றி நாம் பள்ளியில் படிக்கும் போதே ஒரு மோசமான தோற்றத்தை உருவாக்கும் வகையில்தான் பாடமே அமைந்திருந்தது. அது காட்சியாக திரையில் தோன்றுகிறபோது காவிக்கண்ணாடி அணிந்த சங்கிகளுக்கு கலவரத்தை தூண்ட காரணமாக அமைந்து விட்டது.

சமாதியை அகற்றலாம், காங்கிரஸ் கொண்டு வந்த தொல்லியல் சட்டத்தால்தான் அது முடியாமல் போய் விட்டது என்று பிரச்சினையை இன்னும் விசிறி விடுகிறார் முதலமைச்சர் பட்னாவிஸ். சட்டம் என்ன செய்யும் என்று ஆணவமாக பேசுகிறார் முதல்வராக இருந்து துணை முதல்வராக பதவி இறக்கம் பெற்ற ஏக்நாத் ஷிண்டே.

அவர்களைப் பொறுத்தவரை ஔரங்கசீப் என்பது வெறும் சாக்கு. மதவெறியை தீ போல பரப்புவதுதான் நோக்கம்.

அந்த வெறி அவ்வளவு சீக்கிரம் அடங்காது என்பதுதான் துயரமான யதார்த்தம்.

பிகு : அடுத்த பதிவு - சாம்பாஜியை தூற்றும் சங்கி மூலவர்கள். . .


No comments:

Post a Comment