Thursday, April 28, 2022

எப்படி இருந்த ட்ரெய்ன்?

 


“இந்திய ரயில்வேயின் வரலாற்றில் அன்றைய தினம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். திருப்பாதிரிபுலியூர் பாசஞ்சர் அன்று சரியான நேரத்தில் பெங்களூர் ஸ்டேஷனுக்குள் நுழைந்து கொண்டிருந்தது”

குங்குமத்தில் வெளி வந்த “வசந்தகால குற்றங்கள்” என்ற சுஜாதாவின் தொடர்கதை மேற்கண்ட வரிகளோடுதான் தொடங்கும்.

திருப்பாதிரிபுலீயூர் பாசஞ்சரை விட பிரசித்தி பெற்ற ஒரு தொடர்வண்டி “நவ ஜீவன் எக்ஸ்பிரஸ்” சென்னையிலிருந்து அகமதாபாத் வரை செல்லும் ட்ரெயின் அது. எட்டு மணி நேரம் முதல் இருபத்தி நான்கு மணி நேரம் வரை தாமதமாக வரும் வண்டி அது. சரியான நேரத்தில் அது வந்ததாக சரித்திரமே கிடையாது என்பார்கள்.

1994 ல் எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு அகமதாபாத் நகரில் நடைபெற்றது. “எந்த ஒரு கோட்டமும்  நவஜீவன் எக்ஸ்பிரஸில் முன் பதிவு செய்ய வேண்டாம்” என்று அப்போது அகில இந்திய தலைமை எல்லா கோட்டங்களுக்கும் கடிதமே எழுதியிருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அதன் சிறப்பை.

கடந்த 22.04.2022 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த போது நவ ஜீவன் எக்ஸ்பிரஸ் காலை 5 மணிக்கு வந்து சேரும் என்று முன்னே இருந்த தகவல் பலகை சொன்னது. எத்தனை மணிக்கு வர வேண்டிய வண்டி என்று விசாரித்துப் பார்த்தால் வர வேண்டிய நேரமே 5 மணிதான் என்பது தெரிந்தது. அது போலவே சரியாக 5 மணிக்கு வந்து விட்டது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாகவே சரியாக வந்து விடுகிறது என்று ரயில் நிலையத்தில் சொன்னார்கள்.

எப்படி இருந்த ட்ரெயின் இப்படி ஆயிடுச்சே . . .

No comments:

Post a Comment