Thursday, April 21, 2022

அந்த திருவையாறு சம்பவம்.

 


இளையராஜா குறித்த பதிவில் திருவையாறு சம்பவம் என்று ஒன்றை குறிப்பிட்டிருந்தேன். அதென்ன சம்பவம் என்று பின்னூட்டத்திலும் நேரிலும் கேட்டவர்களுக்காக இந்த பதிவு.

புதிதாக டேப் ரிகார்டர் வாங்கி அதில் கர்னாடக இசையை வெறி பிடித்தது போல கேட்டுக் கொண்டிருந்த காலம் அது.

எல்லா பெரிய வித்வான்களின் கச்சேரியையும் கேட்பதற்கான நல்ல வாய்ப்பு என்று திருவையாறு தியாக உற்சவத்திற்கு சில வருடங்கள் சென்றுள்ளேன்.  15, 20 நிமிட கச்சேரியில் அவ்வளவு பிரமாதன அனுபவம் கிடைக்காடு என்ற போதிலும் ஒரு மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக சென்றுள்ளேன். அக்கா வீடு திருக்காட்டுப்பள்ளியில்  இருந்தது வசதியாக இருந்தது.

நான் சென்ற மூன்று வருடங்களிலும் தவறாமல்  பார்த்த காட்சி அது.

மணக்கால் ரங்கராஜன் என்றொரு முதியவர், அவர் மனைவி உடன்பாடுவார். மகள் வயலின், மகன் மிருதங்கம் என குடும்பமாக மேடைக்கு வருவார்கள். அவர் இளமைக்காலத்தில் எப்படி பாடினார் என்று தெரியாது. ஆனால் அந்த காலத்தில் அவர் குரலும் ஒத்துழைக்கவில்லை. முழுக்க முழுக்க சுருதி பேதம். அவர் பாட அவர் மகனும் மகளும் அவர்கள் பாட்டுக்கு ஏதோ வாசித்துக் கொண்டிருப்பார்கள். சுப்புடு இருந்தால் கிழி கிழி என்று கிழித்திருப்பார்.

அவர் பாடும் போது மடியில் நன்றாக தாளம் (அது பெரும்பாலும் தப்புத்தாளம்) போட்டு ரசிக்கும் ஒரு கும்பல், அவர் பாடி முடித்ததும் வேகமாக வேகமாக எழுந்து வெளியேறுவார்கள். அடுத்த கச்சேரியைக் கேட்டால் அவர்களை ஏதோ பேய்  வந்து பிடித்துக் கொள்ளும் என்பது போல வேகம் அவர்களின் நடையில் இருக்கும். அதே நேரம் அடுத்த கச்சேரிக்கு கூட்டம் குமியும்.

அப்படி வரும் கூட்டத்தை சபித்துக் கொண்டே, திட்டிக் கொண்டே இவர்கள் வெளியேறுவார்கள்.

அப்படி என்ன சொல்லி திட்டுவார்கள்?

“கிறிஸ்துவன் கச்சேரியை கேட்கறதுக்கு இப்படி வராங்களே என்பதோடு தஞ்சை மாவட்டத்து வசைச் சொற்களும் இணைந்தே வரும். பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

அப்படி அவர்களை நோகடித்த அடுத்த கச்சேரி யாருடையது?

கே.ஜே.யேசுதாஸ் அவர்களுடையது.

அவர் மீதுதான் அவ்வளவு வெறுப்பு.

தியாகராஜரின் “ஷீர சாகர சயனா” என்றொரு கீர்த்தனை. பாற்கடலிலே உறங்குபவனே என்று அர்த்தம். அதிலே ஒரு இடத்தில் “தாரக ராமா” என்று அவர் உருகி பாடுவதைக் கேட்டு இதிகாச ராமன் சிலிர்த்துப் போவானா என்று தெரியாது, இந்த ராமன் சிலிர்த்துப் போவேன். அவரைத்தான் இவர்கள் கிறிஸ்துவன் என்று புறந்தள்ளிப் போவார்கள்.

ஐயப்பன் மீதும் குருவாயூரப்பன் மீதும்  அவரளவு பாடியவர்கள் கிடையாது. கிருஷ்ண லீலா தரங்கிணி என்றி இரண்டு பாகம் உள்ள காஸெட்டுகள் வைத்திருந்தேன். ஆனால் அவருக்கு இன்று வரை குருவாயூர் கோயிலில் அனுமதி கிடையாது.

என்னத்தான் கடவுள் பக்தியில் ஊறிப் போனவராக இருந்தாலும் அவர்களை ஜாதிய வெறி மேலோங்கியவர்கள் தங்கள் கோட்டைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.  மோடியை அண்ணல் அம்பேத்கரோடு ஒப்பிடத்தான் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதுவே இளையராஜா அவராகவே மோடியை ஆதி சங்கரரோடோ, ஏன் அவர் கூட அவசியமில்லை, ஜயேந்திர சரஸ்வதியோடோ ஒப்பிட்டிருந்தால் அப்போது அவர்களின் சுயரூபம் தெரிந்திருக்கும்.

இளையராஜா இந்த யதார்த்ததை உணரவில்லையே என்பதுதான் என் ஆதங்கம்.

No comments:

Post a Comment