Sunday, April 3, 2022

மதுரை போர்க்கள நினைவுகள்

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ.பாக்கியம் அவர்கள் இன்று காலை முகநூலில் பதிவு செய்திருந்த நெகிழ்ச்சியான, பெருமிதமான ஓர் வரலாற்றுப் பதிவை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னும், ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னும் அங்கே இடதுசாரிகளின் போராட்டம் இருக்கிறது.

அந்த வெற்றியின் பலனை அனுபவிப்பவர்கள் பலருக்கு அதற்காக அடிபட்டு உதை பட்டு ரத்தம் சிந்தியவர்கள் யார் என்று தெரியாது.

வரலாற்றை விரிவாக எடுத்துச் செல்வது முக்கியம் என்பதை இப்பதிவு சொல்கிறது.

உண்மை வரலாற்றை நாம் சொல்லாவிட்டால் மோடிகளின் பொய்கள்தான் நாளை வரலாறாக போதிக்கப்படும்.

பிகு" மேலே உள்ள படத்தில் தாடி வைத்துள்ளவர்தான் தோழர் பாக்கியம். 

கண்காட்சிகளால் மட்டுமல்ல ........

கல்வெட்டுகளாலும் ..........மதுரை ராஜாஜி அரசு பொதுமருத்துவமனையும் DYFI போராட்டமும்.

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபத்தி 23 வது மாநாடு கலந்து கொண்டு மதுரை மாநகரில் கோரிப்பாளையத்தில் குறுக்கும் நெடுக்குமாக பல நேரங்களில் கடந்து செல்ல நேரிட்டது.

முதல்தடவை கடக்கும் பொழுது ஒரு சில நினைவுகள். மீண்டும் மீண்டும் அந்த இடத்தை கடந்து செல்கிற பொழுது கோரிப்பாளையம் சதுக்கத்தில் ஒவ்வொரு அடியிலும் நகர்ந்த நிகழ்வுகள் நிழலாடியது.

1995 ம் ஆண்டு மே.25 ராஜாஜி மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும் என்ற போராட்டத்தை மதுரை மாநகர் வாலிபர் சங்க மாவட்ட குழு நடத்தியது.

அதையொட்டி நடைபெற்ற காவல்துறையின் கடுமையான தாக்குதலும் நினைவுக்கு வந்தது.

நான் வாலிபர் சங்கத்தின் மாநில தலைவராக செயல்பட்டேன். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கோரிப்பாளையத்தின் சதுககம் முழுவதும் நிரம்பி வழிந்தனர்.

நானும் நன்மாறனும் அப்போதைய வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விக்ரமன்,அண்ணாதுரை, விஜயராஜன், மா.கணேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அந்த ஊர்வலம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள். நான் ஊர்வலத்தை துவக்கி வைத்திட சென்றிருந்தேன்.

காவல்துறை ஊர்வல அனுமதி மறுத்து கொடூரமான முறையில் தாக்குதலை நடத்தியது. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.
காவல்துறை தடியடி நடத்தியதை விட சுற்று வட்டாரத்தில் இருந்த கற்களால் வீசி தாக்கியது அதிகமாக இருந்தது.

நூற்றுக்கணக்கான காவல்துறை சதுக்கத்தின் கொதிக்கும் தார் சாலைகளில் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். உடல் முழுவதும் கற்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தது.

கோரிப்பாளையம் சதுக்கம் போர்க்களமாக காட்சியளித்தது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவல்துறைக்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த போர்க்களத்தின் இடையே அன்றைய மதுரை மாநகர மாவட்ட செயலாளர் தோழர் மோகன் சைக்கிளில் வந்தார்.

சைக்கிளை நிறுத்திவிட்டு சைக்கிள் சாவியை என்னிடம் கொடுத்து நீங்கள் உடனடியாக அலுவலகத்திற்கு சென்று சைக்கிளை நிறுத்திவிட்டு மாநிலத் தலைமைக்கு தகவல் சொல்லிவிட்டு ரயில் பிடித்து சென்னை செல்லுங்கள் என்று கொடுத்தார்.

நான் முடியாது இந்த இடத்தை விட்டு செல்ல முடியாது என்று காவல்துறையினர் தடியடி நிலை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தோம்.

நன்மாறன்னை உடனடியாக அலுவலகத்திற்கு மோகன் அனுப்பி வைத்தார். வன்னியன் என்று சொல்லக்கூடிய வாலிபர் சங்க தோழரை பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தங்களுடைய குண்டாந்தடியால் அரண் அமைத்து தாக்கிக் கொண்டிருந்தார்கள்.
லீலாவதி உட்பட பல பெண்கள் காவல்துறையினர் அரணைஉடைத்து உள்ளே நுழைந்து வன்னியன் மேலே படுத்து காவல்துறையின் வெறிகொண்ட தாக்குதலை நிறுத்தியதில் பல பெண்கள் காயமடைந்தனர்.
அந்த காட்சி என் கண் முன்னால் இருந்து இன்றுவரை அகலவில்லை. தோழர்கள் செல்வகுமார், சிவகுமார் என்ற இது தோழர்கள் கடுமையான காயம் ஏற்பட்டது. தோழர் விக்ரமன் அவர்களுக்கு மண்டை உடைந்து 18 தையல் போடப்பட்டு இருந்தது.

அந்த இடத்தில் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்த எங்கள் மீதும் கற்கள் காவல்துறையின் தடியடி களும் விழுந்துகொண்டே இருந்தது.
2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 45 பேர்கள் கைது செய்யப்பட்டு நானும் மோகனும் உட்பட மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம்.

மதுரை மத்திய சிறையில் 11 நாட்கள் மாவட்ட நிர்வாகி உட்பட சிறையிலிருந்து இருந்து பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார் விடுவிக்கப்பட்டோம்.

சிறைச்சாலை அனுபவம் தனியானது. தோழர் மோகன் சிறைச்சாலைக்குள் இருந்தவர்களுக்கு மதுரை சிறையில் நமது தியாகிகள் சிறைப்பட்ட வரலாறையும், அடிபட்ட தழும்புகளையும் வர்க்கப் போராட்டத்தின் வழிநின்று அனைவருக்கும் எளிய முறையில் எடுத்துரைத்தார்.

அதுவே சிறையில் இருந்த பல தோழர்களுக்கு அடி உரமாக இருந்து.எத்தனை நாட்களாக இருந்தாலும் சிறையில் இருக்க தயார் என்று நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தது.

அன்றைய தினம் இந்த செய்தி அனைத்து பத்திரிக்கைகளின் பேனர் செய்திகளாக மாறியது. ஓசூர் முதல் தேனி வரையிலும் குமரி முதல் சென்னை வரையிலும் பல மாவட்டங்களில் பேருந்துகளில் கையெழுத்து போஸ்டர்களை ஒட்டி வாலிபர் சங்க தோழர்கள் மறியலில் ஈடுபட்டார்கள். தோழர் ரவீந்திரன் வெளியிலிருந்து அனைத்து பணிகளையும் கவனித்துக் கொண்டார்.

நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு மதுரை மண்ணில் வாலிபர் சங்கத்தின் அந்த மாபெரும் போராட்டம் முத்திரை பதித்த போராட்டமாக அமைந்தது. தமிழகம் முழுவதும் அந்தப் போராட்டத்தின் தாக்கம் இளைஞர்களை ஈர்த்தது.

அதன் பிறகு ராஜாஜி மருத்துவமனைக்கு நிதிகள் அதிகமாக ஒதுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது மதுரை மக்கள் மறக்கமுடியாத நிகழ்வாக மாறியது.

கடைசிவரை கட்சியின் மாநில குழு உறுப்பினராக மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிய தோழர் மோகன் அவருடன் அந்த போராட்ட களத்தில் நானும் இருந்து சிறைச்சாலையில் 11 நாட்கள் இருந்து அவரின் பணிகளை எத்தனை முகநூல் பக்கத்தில் எழுதினாலும் அது நிறைவடையாது. முகநூல் வழியாக கட்டமைக்க படாத மக்களின் நேரடி தொடர்புகளால் கட்டமைக்கப்பட்ட தலைவராக பொழுது மோகன் அறியப்பட்டார்.

கோரிப்பாளையத்தில் கடந்து செல்கிற பொழுது அந்த சதுக்கத்தில் ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற அந்த இரண்டு மணி நேர சம்பவங்கள் அன்றைய நாள் முழுவதும் அங்கு நடைபெற்ற கடையடைப்பு கள் அனைத்தும் நினைவுகளில் ஓடிக்கொண்டே இருந்தது.

இந்த நிகழ்வு கண்காட்சிக்காக மட்டுமல்ல கல்வெட்டுகளால் பொறித்து வைக்கப்பட வேண்டிய போராட்டங்களில் ஒன்று.


2 comments:

  1. மோடிகளின் பொய்கள், தாடி வைத்திருப்பவரின் உண்மை.

    உண்மை எடுத்து சொல்வது முக்கியம், அதை சொல்வது பாக்கியம்.

    சூப்பர், எழுதியது எஸ்ஆரா (அ ) டிஆரா

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டம்தான் டி.ஆர் ஸ்டைலில் உள்ளது தோழர் கங்காதரன்

      Delete