Wednesday, October 19, 2016

அறிந்தும் அறியாமலும் உலவும் பொய்கள்



நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.


மேலே உள்ள படத்தைப் பார்த்தீர்கள் அல்லவா?

2015 ம் ஆண்டில் ஜூலை மாதம் 25 ம் தேதியன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் மகன் திரு வாலேஸ்வரன் மறைந்து போனார்.

அவர் இறந்து போய் ஒரு வருடமே முடிந்த பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுற்றுக்கு வந்தது இந்த படம். அவர் இறந்து போன சமயத்தில் நான் வாங்குகிற தீக்கதிர் மற்றும் The Hindu இரண்டு பத்திரிக்கைகளிலுமே செய்தி வெளியிட்டிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ஆர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.

ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து போனவரை நேற்றுதான் இறந்து போனதாக ஒரு பத்து நாட்கள் வரை பலரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இது தவறு என்று சுட்டிக்காட்டினால் அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் தங்களின் காபி, பேஸ்ட் கலாச்சாரத்தில் மூழ்கிப் போய் விட்டார்கள்.

அப்துல் கலாம் அவர்கள் இறந்து போன போது இந்த வாட்ஸப், முகநூல் வதந்தி பரப்பாளர்கள் அடித்த கூத்து கொஞ்சம் நஞ்சமில்லை. இப்போது கூட பார்த்தால் அப்துல் கலாம் சொன்னாங்க, புத்தர் சொன்னாங்க, விவேகானந்தர் சொன்னாங்க என்று ஏராளமான கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய கொடுமை பிப்ரவரி மாதம் வந்தால் தொடங்கி விடும்.

பிப்ரவரி 17 அன்று காதலர் தினம் கொண்டாடுகிறீர்களே, இந்த நாளில்தான் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப் பட்டனர் என்பது உங்களுக்கு தெரியுமா என்று தேச பக்தி பொங்க கேட்பார்கள்.

“அடேய் அப்ரசண்டிகளா, உங்களுக்குத்தான் அவர்கள் என்று தூக்கிலிடப்பட்டனர்னு தெரியல. அவர்கள் தூக்கு மேடை ஏறிய நாள் மார்ச் 23 என்று நாம் தலையில் அடித்துக் கொண்டு பதில் சொன்னால் கூட கொஞ்சமும் கூச்சப்படாமல் முகத்தில் வழிகிற அசடை துடைக்கக் கூட செய்யாமல் அடுத்து வேறு யாராவது போட்ட பதிவை காபி,பேஸ்ட் செய்வது என்று மும்முரமாக களமாடச் (களவாடச்) சென்று விடுவார்கள்.இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி சில அப்பாவிகள் வேறு அவற்றை அப்படியே பரப்புவார்கள்.

இவர்கள் அறிந்தும் அறியாமலும் உலவ விடுகிற பொய்களை எல்லாம் படிக்கிற போது ஏற்படுகிற கடுப்பு இருக்கே, வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமென்றால்

முடியல . . . .

2 comments:

  1. உங்களது ஆதங்கம் புரிகிறது. என்ன செய்து அந்த அளவிற்கு சமூகம் சென்றுகொண்டிருக்கிறது. வேதனையே.

    ReplyDelete