இந்தியாவை போர் மேகம் சூழ்ந்துள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய
ராணுவம் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்களை அழித்ததாக அரசு வெளியிட்டுள்ள செய்தி
இந்திய மக்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இச்சூழலில் போர் முனையில் ஒரு
பரிமாற்றம் என்ற ஒரு பதிவை எழுதினேன். மிகக் கடுமையான எதிர்வினைகள் நிச்சயம் வரும்
என்று தெரிந்தே எழுதிய பதிவு அது. நான் எதிர்பார்த்தது போலவே கடுமையான
தாக்குதல்களும் வந்தது.
ராஜகோபால் கோபால் என்றொருவர் தேசத்துரோகி கம்யூனிஸ்ட் என்று ஒருமையில்
சாடினார். நான் மிகவும் மதிக்கிற எங்கள் ஓய்வு பெற்ற தோழர் சாய் ஜெயராமன் தேச
விரோத நக்கல் என்று நாசூக்காகச் சொன்னார். சீனப் போரை வலுக்கட்டாயமாக இழுத்து
கம்யூனிஸ்டுகளை போலி தேச பக்தர்கள் என்றும் சொன்னார் அவர். மோடி மாயைக்கு உட்பட்ட
இரண்டு பேர் கடுமையாக சாடினார்கள். கண்ணையா குமார் கட்சி என்று காவிப்படை அவருக்கு
கொடுத்த தேசத்துரோக முத்திரையை அளித்தார்கள். ரசனைக்குறைவானது என்று இன்னொரு
பெரியவர் சொன்னார்.
உணர்ச்சிகள் மேலோங்கியிருக்கும் போது அறிவு கொஞ்சம் மங்கி விடும் என்று
எப்போதோ படித்தது இப்போதைய சூழலுக்கு மிகவும் பொருந்தி வருகிறது.
சமீபத்தில் அரக்கோணத்தில் நடைபெற்ற எங்கள் கோட்டச்சங்க மாநாட்டிற்காக சில
அட்டைகள் தயாரித்தேன். மேலே உள்ளது அவற்றில் ஒன்று. ஆனால் இப்பொன்மொழி எனக்கு
உடனடியாக கைகொடுக்கும் என்று இதை தயாரித்த போது நினைத்துப் பார்க்கவே இல்லை.
“அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர். போர் என்பது ரத்தம் சிந்தும்
அரசியல்”
எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் மாவோ?
இதை புரிந்து கொண்டால் மிகப் பெரிய விளக்கம் எல்லாம் அவசியமே இல்லை! ஆனால்
சுருக்கமாகச் சொன்னால் புரிந்து கொள்ள முடியாத உணர்வு நிலையில் பலர் இருக்கையில்
வேறு வழியில்லை, விரிவாகத்தான் எழுத வேண்டியுள்ளது. நேற்று போட்ட படத்தில் “போர்
என்பது இரு நாட்டு மக்களுக்கிடையிலான பிரச்சினை அல்ல, இரு நாட்டு
ஆட்சியாளர்களுக்கு இடையிலான பிரச்சினை மட்டுமே” என்ற செய்தியை விமர்சித்த யாரும்
உள்வாங்கிக் கொண்டார்களா என்று தெரியவில்லை. அதையே புரிந்து கொள்ள முடியாதவர்களால்
“போர் முனையில் உள்ள வீரர்கள் கூட பகையுணர்வு இல்லாமல் இருந்தனர்” என்று அந்த
நகைச்சுவைக் கதை சொன்ன செய்தியை புரிந்து கொண்டிருக்க வாய்ப்பே கிடையாது.
இன்னொரு விளக்கமும் கொடுக்க வேண்டியுள்ளது. சமீபத்திய நிலவரத்தின்படி
திமுகவை விமர்சித்தால் அதிமுகக்காரன் என்றும் அதிமுகவை விமர்சித்தால் திமுகக்காரன்
என்றும் பார்க்கப்படுவது எவ்வளவு பெரிய அபத்தமோ, அது போலவே இந்திய ஆட்சியாளர்களின்
தவறை விமர்சித்தால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது என்று சொல்வது அதை விட மிகப்
பெரிய அபத்தம். இப்படி தேசத்துரோகி, பாகிஸ்தான் கைகூலி என்றெல்லாம்
வசைபாடுவர்களுக்கு ஒரு மிகப் பெரிய ஆதாயம் இருக்கிறது. ஆட்சியாளர்களின்
தவறுகளுக்கு பதில் சொல்ல முடியாத கையாலாகததனத்திலிருந்து தப்பித்துக் கொள்ள
முடிகிறது அல்லவா?
பாகிஸ்தான் அத்து மீறவில்லையா? அதை தடுக்க வேண்டாமா?
பாகிஸ்தான் கண்டிப்பாக இந்திய எல்லைக்குள் ஊடுறுவல் நிகழ்த்திக் கொண்டுதான்
இருக்கிறது. அவ்வப்போது எல்லையில் துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருக்கிறது.
அன்னிய நாட்டுப் படையை உள்ளே நுழைய அனுமதிக்க முடியாது. இதில் எந்த மாற்றுக்
கருத்தும் கிடையாது. இருக்கவும் முடியாது. பதான் கோட்டில் நிகழ்ந்த தாக்குதலும்
ஊரியிலும் நிகழ்ந்த தாக்குதலும் கண்டிப்பாக கண்டனத்துக்கு உரியது. இந்திய எல்லையை
பாதுகாப்பாக இந்திய அரசு வைத்திருக்கிறதா? நான் இக்கேள்வியை ராணுவத்திடம்
கேட்கவில்லை. ஊடுறுவல்கள் குறித்து உளவுத்துறை விழிப்பாக இருக்கிறதா? அப்படி
உளவுத்துறை திரட்டும் தகவல்களை உள்துறை ராணுவத்திற்கு ஒழுங்காகத் தெரிவிக்கிறதா?
இந்தியா பெரும்பாலும் கோட்டை விடுவது இங்கேதான். ஊரியில் தாக்குதல் நடக்கப் போவது
குறித்து முன் கூட்டியே நாங்கள் எச்சரித்தோம் என்று உளவுத்துறை சொன்னதான
தகவல்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. தாக்குதல் நடக்கட்டும் என்று
இந்திய அரசு அலட்சியமாக இருந்ததா? அப்படியென்றால் இந்திய வீரர்களின் மரணத்திற்கு
பாகிஸ்தான் அனுப்பிய தீவிரவாதிகள் மட்டும்தான் காரணமா? இந்திய அரசுக்கு பொறுப்பே
கிடையாதா? வீரர்களை பலி வாங்கிய பழியிலிருந்து மோடி அரசு தப்பி விட முடியுமா?
கார்கில் போரை யாரும் மறந்திட முடியாது. ஊடுறுவல் நிகழ்ந்த போது உறங்கிக்
கொண்டிருந்தது யார்? வாஜ்பாய் அரசின் தோல்விதானே கார்கில் போருக்கு இட்டுச்
சென்றது? தேச பக்தி என்ற போர்வையில் வாஜ்பாய் அரசின் தூக்கம் மூடப்பட்டு விட்டது.
இப்போதும் மோடி அரசின் கையாலாகததனத்தை தேச பக்தி என்ற போர்வையில் மூடி மறைக்கப்
பார்க்கிறார்கள்.
காவிகள் தேச பக்தர்கள் கிடையாது என்பதை எவ்வளவோ முறை எழுதியாகி விட்டது.
அதனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாத ஒரே அமைப்பு காவிக் கூட்டம்
மட்டுமே. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் காரர்களை காட்டிக்
கொடுத்து கோர்ட்டில் சாட்சியம் சொன்னது “பாரத ரத்னா” வாஜ்பாய். ஃப்ரண்ட்லைன்
பத்திரிக்கை அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது. அதை இதுநாள் வரை மறுக்கும் திராணி
காவிகளுக்குக் கிடையாது. அந்தமான் சிறையிலிருந்து விடுதலை பெற “பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்திற்கு விசுவாசமாக இருப்பேன்” என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக்
கொடுத்தவர் மகாத்மா காந்தி கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த வீர(!) சாவர்க்கர்.
தேச பக்தி என்பது வெறும் நாட்டின் எல்லை மட்டும்தானா? பொருளாதாரம்
கிடையாதா? பொருளாதாரத்தை பன்னாட்டு மூல தனத்தின் காலடியில் சரணடைய வைத்தவர்களுக்கு
தேச பக்தி பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? இந்தியாவின் செல்வாதாரங்களை, இயற்கை
வளங்களை பன்னாட்டு கம்பெனிகளிடம் ஒப்படைப்பவர்கள் தேசத் துரோகிகளா? இல்லை அதற்கு
எதிராக போராடும் இடதுசாரிகள் தேசத் துரோகிகளா?
ராணுவ வீரர்களின் தியாகம் விலைமதிப்பற்றது. அவை போற்றப்பட வேண்டும்.
கார்கில் போரில் சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் செய்தவர்கள் வீரர்களின்
தியாகத்தை மதித்தார்களா? அல்லது மிதித்தார்களா? பாதுகாப்புத்துறையில் அன்னிய மூலதனத்திற்கு
நூறு சதவிகித அனுமதி கொடுத்தது வீரர்களின் பாதுகாப்புக்கா இல்லை பாதுகாப்பை
கேள்விக் குறியாக்கவா? நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் பத்தாயிரம் பக்கங்களின்
அம்பலமாகிறதே! இந்த நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றப் போகும் கடற்படை வீரர்களுக்கு
பாதுகாப்பு இருக்கிறதா? விமானப் படைக்கான எத்தனை பயிற்சி விமானங்கள் நொறுங்கி
விழுந்து பைலட்டுகள் இறந்திருக்கிறார்களே! அவர்களுக்கான பாதுகாப்பிற்கு என்ன
உத்தரவாதம் செய்திருக்கிறது இந்த அரசு? சொல்லப் போனால் வீரர்களின் உயிர்களோடு
விளையாடுகிறது மோடி அரசு. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதற்காக உற்சாகமாக குரல்
கொடுப்பவர்களில் எத்தனை பேருக்கு இந்த உண்மைகள் தெரியும்?
நான் ஆட்சிக்கு வந்தால் “ஒரு பதவி, ஒரு பென்ஷன்” திட்டத்தில்தான்
கையெழுத்துப் போடுவேன் என்று சொல்லி இழுத்தடித்து இப்போதும் ஒரு அரைவேக்காட்டு
அறிவிப்பின் மூலம் முன்னாள் ராணுவ வீரர்களை இழிவு படுத்தியது மோடி என்பதும்
தாங்கள் பெற்ற பதக்கங்களை எல்லாம் திருப்பித் தர வைத்த மோசமான சூழ்நிலையை
உருவாக்கியதும் இந்த அரசுதான் என்பது நினைவில் உள்ளதா?
இப்போது போருக்கான தேவை என்ன?
மோடியின் பிரச்சினை மோடியேதான்.
நான் பிரதமராக இருந்தால் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் ஊடுறுவ முடியாது.
அவர்களை சமாளிக்க என்னைப் போல ஐம்பத்தி ஆறு இஞ்ச் மார்புள்ளவனால் மட்டுமே
முடியும். காதல் கடிதம் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன், நவாஸ் ஷெரிபீன் தலையை
பிரியாணி செய்து சாப்பிடுவேன் (மாட்டுக்கறியை விட மனிதக்கறிக்கு சுவை அதிகம் போல)
என்றெல்லாம் வசனம் பேசினார் மோடி. அதையே அவரது எடுபிடிகளும் பேசினார்கள்.
பல்லாயிரக் கணக்கான குஜராத்திகளை உத்தர்கண்ட் வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய
ராம்போ என்பதையே நம்பிய மக்கள் இதையும் நம்பினார்கள். ஓட்டு போட்டார்கள். ஜெயிக்க
வைத்தார்கள்.
ஆனால் தேர்தலுக்குப் பின்பு நவாஸ் ஷெரீபோடு கை குலுக்க வேண்டிய அவசியத்தை
இவரது நண்பரும் பிரச்சாரத்துக்கு விமானம் கொடுத்த முதலாளியான அதானியும்
உருவாக்கினார். அதானி தயாரிக்கும் மின்சாரத்தை பாகிஸ்தான் வாங்க வேண்டும்
என்பதற்காக நவாஸ் ஷெரிபிற்கு பிரியாணி விருந்து வைத்தார். ஜிண்டால் கம்பெனிக்காரன்
பாகிஸ்தானில் அலுமினியத் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்பதற்காக பாகிஸ்தானுக்குப்
போய் நவாஸ் ஷெரிப் பெண் திருமணத்தில் பிரியாணி சாப்பிட்டு விட்டு வந்தார்.
பதான்கோட் தாக்குதலுக்குப் பிறகே மக்கள் ஐம்பத்தி ஆறு இஞ்ச் மார்பரை தேடத்
தொடங்கினார்கள். ஊரிக்குப் பிறகு அந்த தேடல் இன்னும் அதிகமாகி விட்டது. இரண்டாண்டு
கால நாடக ஆட்சியினால் ஏற்கனவே நரேந்திர மோடியின் மானம் கப்பலேறி விட்டது. எதைச்
செய்தாவது தன் பிம்பத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதில்
காஷ்மீர் பற்றி வேறு பேச வேண்டும்.
மூன்று மாதத்திற்கு மேல் காஷ்மீர் பற்றி எரிகிறது. அப்பிரச்சினையை
தீர்க்கும் எண்ணமே மோடிக்குக் கிடையாது.
புதிதாக அரசியல் பேச வந்தவர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும்.
இந்தியா விடுதலை பெற்ற போது காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரிசிங்கிற்கு இந்தியாவுடன்
இணைய வேண்டும் என்ற விருப்பம் கிடையாது. அன்று மக்கள் தலைவராக இருந்த தேசிய
மாநாட்டுக் கட்சியின் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவே காஷ்மீர் இந்தியாவுடன்
இணையக் காரணம். இந்தியாவோடு இணையக் கூடாது என அப்போது ஹரிசிங்கோடு கரம் கோர்த்து
கலவரம் செய்த அமைப்பு. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காஷ்மீர் கிளளைக்கான பெயர். ஆக
காவிகள் காஷ்மீர் இந்தியாவோடு இணைவதற்கு எதிராக நின்றவர்கள். ஹரிசிங் கொடுத்த
ஆயுதங்களை மக்களுக்கு எதிராக பிரயோகித்தவர்கள் காஷ்மீர் கா(லி)விகள்.
அப்சல் குருவை போற்றியதாக ஒரு கற்பனைக் குற்றச்சாட்டைக் கூறித்தான் ஜேஎன்யு
வில் கண்ணையா குமாரை தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்தார்கள். கண்ணையா
குமார் பிரச்சினையை கடைசியில் எழுதுகிறேன். அப்சல் குருவை தூக்கிலிட்டதை கடுமையாக
கண்டித்தது காஷ்மீரில் உள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி. மிகவும் ஆக்ரோஷமாக பேசியவர் மெஹபூபா
முப்தி முகமது. அவர் இன்றைக்கு காஷ்மீர் முதல்வர். அவரோடு இணைந்து காஷ்மீர்
ஆட்சியை பங்கு போட்டிருப்பது பாஜக.
காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின் தலையீடு இருக்கிறது. ஆம் உண்மைதான்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி
“பிணங்கள் கிடக்கும் போது வல்லூறுகள் வரத்தான் செய்யும். பிணங்கள் விழாமல்
அரசுதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று மிக அழகாகச் சொன்னார். வல்லூறுகளுக்கு
வரவேற்பு கொடுப்பதே இவர்கள்தானே!
சீனாவைப் பற்றியும் கருத்துக்கள் வந்தது. சீனப் போர் தொடர்பாக மார்க்சிஸ்டுகள்
மீது ஒரு பொய்ப்பிரச்சாரம் நீண்ட காலமாக செய்யப்பட்டு வருகிறது. அது தொடர்பாக
விரிவாக தனியே ஒரு பதிவு விரைவில் எழுதுகிறேன். இந்தியாவில் அமர்ந்து கொண்டு
சீனாவுக்கு எதிரான நச்சு அரசியல் செய்யும் தலாய் லாமாவை வெளியேற்றினாலேயே இந்திய
சீன உறவு மேம்படும். இந்திய மண்ணில் அரசியல் செய்யக் கூடாது என்ற நிபந்தனையின்
பெயரில்தான் நேரு தலாய் லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்தார். அதை மீறுகிற அவரை
வெளியேற்றுவதால் எந்த தார்மீக உறுத்தலும் அரசுக்கு வர வேண்டிய அவசியம் கிடையாது.
சீனப் பொருட்கள் இந்தியாவுக்குள் நுழைந்து இந்திய உள்நாட்டு உற்பத்தியை
பாதிக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது சீனாவின் குற்றமா? இந்தியாவின் குற்றமா?
சீனப் பொருட்கள் கள்ளக்கடத்தல் மூலம் வருவதில்லை. சட்டபூர்வமாகவே வருகிறது.
சிறுதொழிலை பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை
இறக்குமதி செய்ய தடை இருந்தது. அத்தடையை தகர்த்த புண்ணியவான் வாஜ்பாய் என்பது எவ்வளவு
பேருக்கு நினைவிருக்கிறது? இந்திய சிறுதொழிலை சீரழித்த சிறந்த தேச பக்தர்
வாஜ்பாய். அதை தொடர்ந்தவர் மன்மோகன்சிங். இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்று சொன்ன கம்யூனிஸ்டுகள் தேசத் துரோகிகளாம். மன சாட்சி
என்று எதுவுமே கிடையாது போல.
கண்ணையா குமார் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர்
விடுதலை வேண்டும் என்று பேசினார். ஆம் விடுதலை, ஆஸாதி வேண்டும் என்றுதான்
பேசினார். இந்தியாவிலிருந்து விடுதலை கேட்கவில்லை. இந்தியாவிற்குள் விடுதலை
வேண்டும் என்று பேசினார். வறுமையிலிருந்து விடுதலை வேண்டும், நிலப்
பிரபுத்துவத்திலிருந்து விடுதலை வேண்டும்,, முதலாளித்துவத்திலிருந்து விடுதலை வேண்டும்,,
சுரண்டலிலிருந்து விடுதலை வேண்டும்,, ஜாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை வேண்டும்,
இவையெல்லாம்தான் வேண்டும் என்று கேட்டார். இதனை தேசத்துரோகம் என்று சொல்பவர்களை
கடைந்தெடுத்த பாசிஸ்ட் என்றுதான் சொல்வேன்.
அரசை விமர்சனம் செய்வதெல்லாம் தேசத்துரோகம் கிடையாது என்று கண்ணையா குமார் வழக்கிலும் அவதூறு கிடையாது என்று விஜயகாந்த் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் கூறியதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
மோடியின் அரசியல் தேவையே போர் மேகம் இந்தியாவை சூழ காரணமாக இருக்கிறது
என்பது மறுக்க முடியாத உண்மை. மோடியின் அரசியல் ஆதாயத்துக்காக இந்திய வீரர்களை
பலியிடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். மோடியின் ஆட்சியின் தோல்வியை மூடி மறைக்க
இந்திய ராணுவ வீரர்களின் உயிர்களோடு விளையாட வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
போரில் எப்போதும் ஆதாயம் ஆட்சியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும்
மட்டும்தான். போரின் சுமைகள் என்னவோ மக்களின் முதுகுகளுக்குத்தான் மாற்றப்படும்.
ஆயுதம் விற்பவர்களும் அவர்கள்தான். பின்பு சேதமடைந்ததை சீரமைப்பது என்று ஒப்பந்தம்
பெறுவதும் அவர்கள்தான்.
பங்குச் சந்தை சரிந்ததாக செய்திகள் வருகிறது. முதலாளிகள் லாபம் அடைய போர்
குறுக்கே வந்தால் அப்போது அவர்கள் போரை நிறுத்தச் சொல்லி கட்டளையிடுவார்கள்.
அரசும் உடனே அதை செவி மடுக்கும். போருக்காக சொல்லப்படுகிற காரணிகள் எல்லாம்
அப்போது மாயமாக மறைந்தும் போய் விடும்.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். சரிந்து போன பங்குச் சந்தையை நிமிர்த்த
ஆட்சியாளர்களுக்கு உடனடியாக தேவைப்படுவது எல்.ஐ.சி ஆக மட்டுமே இருக்க முடியும்.
எல்.ஐ.சி யினால் ஆதாயமடைந்து கொண்டே எல்.ஐ.சி யை சீர் குலைக்கவும்
முயற்சிப்பார்கள். இதைக் கண்டித்தால் அதையும் தேசத்துரோகம் என்று சொல்வார்கள்.
தோல்வியின் விளிம்பில் நிற்கும் ஆட்சியாளர்களுக்கு வேண்டுமானால் போர் உதவலாமே
தவிர பிரச்சினைக்கு தீர்வு தராது. கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் கற்க
வேண்டிய படிப்பினையும் இதுதான்.
எல்லைகளுக்கான சிறந்த பாதுகாப்பு அமைதியும் நல்லுறவும்தான். போரின் மூலம்
அமைதி வராது. பேச்சு வார்த்தைகள் மூலம்தான் அமைதி உருவாகும். இதுதான் இந்தியாவிற்கும்
நல்லது. பாகிஸ்தானுக்கும் நல்லது.
தேசம் என்பது வெறும் மண் மட்டுமல்ல. மக்கள் இல்லாமல் தேசம் கிடையாது. போர்
அவசியமற்றது என்றும் அரசியலுக்கான போரில் வீரர்களையும் மக்களையும் துயரத்திற்கு
உள்ளாக்காதீர்கள் என்று மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்வதில் எனக்கு எந்த
தயக்கமும் இல்லை.
சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து இன்று இந்தியாவை விற்பனை
செய்து கொண்டிருக்கிற காவிகளுக்கோ, சுதந்திரத்தை பன்னாட்டுக் கம்பெனிகளிடமும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும் அடகு வைக்க தொடங்கிய காங்கிரஸ் கட்சிக்கோ
கம்யூனிஸ்டுகளை தேசத் துரோகி என்று மனதால் நினைக்கக் கூட தகுதி கிடையாது.
இருப்பினும்
என்னை தேசத்துரோகி என்று அழைத்தாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை.
“கேளாக் காதினருக்காக” என்று சொல்லி நாடாளுமன்றத்திலே வெடி குண்டு வீசி
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிர வைத்த பகத்சிங்கை அவர்கள் துரோகி என்றுதான்
அழைத்தார்கள். தூக்கு மேடையிலேற்றி கொல்லவும் செய்தார்கள்.
துப்பாக்கியின் தோட்டாக்கள் துரத்தியபோதும் கொடி மரத்தில் ஏறி யூனியன் ஜாக்
கொடியை கீழிறக்கி மூவர்ணக் கொடியை பறக்க விட்ட பத்து வயது சிறுவன் தோழர் ஹர்கிஷன்
சிங்கையும் பிரிட்டிஷ் அரசு தேசத்துரோகி என்றுதான் சொன்னது.
அந்த பாரம்பரியத்தினைச் சேர்ந்தவன் என்ற பெருமையோடு சொல்வேன்.
மக்களுக்கும் தேசத்திற்கும் எது நல்லது என்பதை “நாமோர்க்கும் குடியல்லோம்,
நமனை அஞ்சோம்” என்ற தைரியத்தோடு சொல்வதை தேசத்துரோகம் என்று வசை பாடுவதில்
யாருக்காவது அற்ப மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அடைந்து கொள்ளுங்கள். ஆனால் மோடியின் அற்ப அரசியலுக்கு துணை போன
குற்ற உணர்ச்சி எதிர்காலத்தில் உங்கள் மன சாட்சியை உறுத்தும், அவரை நம்பி
வாக்களித்து இன்று சிலர் வருந்துகிறார்களே, அவர்களைப் போல.
பின் குறிப்பு : டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.கணேஷ் அவர்களின் பதிவு கீழே உள்ளது.
மற்றொரு "துல்லியமான தாக்குதல்"
அனைவரும் அரசைக் கைதட்டிப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, மற்றொரு துல்லியமான தாக்குதலை உள்நாட்டில் அரசு மேற்கொண்டுள்ளது.
சாதாரண மக்களின் பி.எப். பணத்தை பங்குச்சந்தையில் போடுவதற்கான வரம்பை இரட்டிப்பாக அதிகரித்துள்ளார்கள்.
மோடி டா...
இந்த தாக்குதலைக் கண்டிப்பவர்களும் தேசத் துரோகிகள்தானா?
அருமையான கட்டுரை தோழர் ...
ReplyDeleteமிகவும் சரியான தகவல்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉண்மையை நான் சொன்னதும் நரிங்க எல்லாம் பதுங்கிட்டீங்களே!!!!
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteகொண்டையை மறைக்க முடியாம அசிங்கப்படறதே உன் பொழைப்பா போயிடுச்சு. உன்னோட தில்லாலங்கடி வேலை இன்னும் எத்தனை நாள் நடக்குதுன்னு பாத்துடுவோம். வாழ்க்கையில் உன்னால் நேர்மையாக நடந்து கொள்ளவே முடியாதா? உன்னையும் சில பேர் நல்லவன்னு நினைக்கிறாங்களே, அவங்களை நினைச்சாதான் பாவமா இருக்கு
Deleteஇந்தியாவின் சர்ஜிக்கல் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு சில சேதாரங்கள் , 2 வீரர்கள் உயிரிழப்பு என செய்திகள் கூறுகின்றன . இன்னமும் ஆதாரத்தை இந்தியா சமர்ப்பிக்கவில்லை . ஆகவே மனம் தளர வேண்டியது இல்லை . மேலும் பாகிஸ்தான் ஒன்றும் பூ பறித்து கொண்டு இருக்காது . ஏகப்பட்ட போராளிகள் நிச்சயம் எல்லையில் காத்து கொண்டிருக்க கூடும் . போராளிகள் தாக்கினால் இந்தியாவிற்கு நஷ்டம் கடுமையாக இருக்கும் . குறுகிய கால நடவடிக்கையாக போராளிகள் தாக்குதலும் , நீண்ட கால திட்டமாக சீனா பாகிஸ்தான் அணைந்து முறையான போர் நடத்தவும் திட்டம் இருக்கலாம் . அப்படி ஓர் போர் நடந்தால் இந்தியாவில் பாட்டாளி மக்கள் அரசாங்கம் அமைய வாய்ப்பு வர கூடும் .
ReplyDeleteAS FAR AS TAMILNADU IS CONCERNED MODY IS NOBODY. THAT HAS BEEN PROVED IN PARLIAMENT ELECTIONS
ReplyDeleteAND ASSEMBLY ELECTIONS. TAMILNADU WILL NOT FORGIVE A BETRAYER WHO IS AGAINST THE FORMATION
OF KAVERY MANAGEMENT BOARD. SO NO VOTES FOR BJP, OR CONGRESS NOR DMK (FOR ALLYING WITH CONG)
IN THE COMING LOCAL BODY ELECTIONS.
Surely a war is needed before the end of Modi's term in office to bolster his image. For one reason or other it will be forced onto us. Let us wait and see!
ReplyDelete