Saturday, October 1, 2016

காஷ்மீரை சதுரங்கப் பலகையாக்காதீர்!



முகம்மது யூசுப் தாரிகாமி
மத்தியக் குழு உறுப்பினர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

ஸ்ரீநகர், செப். 30-
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் காஷ்மீரை சதுரங்கப் பலகையாக்காதீர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும்,குல்காம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான முகம்மது யூசுப் தாரிகாமி ஸ்ரீநகரில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறினார்.

காஷ்மீர் பிரச்சனை குறித்து நீண்ட தாமதத்திற்குப் பிறகே அனைத்து கட்சிபிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப் பட்டது. காஷ்மீரில் வன் முறை நடந்த பகுதிகளை பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்கப்பட்டன. எனினும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரும் அடங்கிய குழுவின் பரிந்துரைகள் ஏதாவது நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றுநினைத்த மக்களுக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமேமிஞ்சியிருக்கிறது. மத்திய பாஜக அரசு காஷ்மீர் பிரச்சனையை மிகச் சரியான கோணத்தில் கையாளவில்லை. காஷ்மீர் மக்கள் மத்தியில் மத்திய - மாநில அரசுகள் அந்நியப்பட்டு நிற்கின்றன. 

காஷ்மீர் பிரச்சனை குறித்த அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் ரகசியமான ஒன்றாக மூடி மறைக்கப்படுகின்றது என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.மத்திய அரசின் அணுகுமுறை பரந்த அளவிலான பேச்சுவார்த்தை என்று வெளித்தோற்றத்தில் ஒரு நம்பிக்கை உருவாக்க முயற்சித்துக் கொண்டது. காஷ்மீர் பள்ளத்தாக் கில் பெல்லட் வகை துப்பாக்கிகளுக்கு தடை விதித்ததாக கூறியது. ஆனால் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மீண்டும் மீண்டும் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வாக முன்வைப்பது அனைவருடனுமான பரந்த பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்பதுதான்.தற்போதைய அமைதியின்மை என்ற பிரச்சனையை கிடப்பில் போட முடியாது. நிபந்தனையற்ற அரசியல் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். கடந்த கால அனுபவங்களை கணக்கில் கொண்டு மத்திய அரசின் செயல்பாடு இருக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் இதுநாள் வரை மிக கடு மையான ஏமாற்றங்களையே சந்தித்துள்ளனர்.மத்திய - மாநில அரசுகள் விரைந்து அமைதியை உருவாக்கிட செயலாற்ற வேண்டும். மக்கள் மத்தியில் முதலில் நம்பிக்கை உருவாக வேண்டுமென்றால் உடனடியாக பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கண்மூடித்தனமாக கைது செய்யப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி இளைஞர்கள் சரியான காரணங்கள் இல்லாமல் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கண்மூடித்தனமாக எவ்விதவிசாரணையுமின்றி அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்படுவது தொடர்கிறது.பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மிகப் பெருமளவில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் கடும் சேதங்களும், இழப்பீடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஏராளமான உடமைகளை மக்கள் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உயிர் களை இழந்துள்ள குடும்பங்களுக்கும் உரியஇழப்பீடுகளையும் மறுவாழ்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் உறுப்புகளை இழந்தும், பார்வை இழந்தும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய இழப்பீடுகளையும், சிகிச்சையையும் அரசு வழங்கிட வேண்டும். காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு; 

ஆனால் துரதிருஷ்டவசமாக நடைபெற்ற உரி தாக்குதல் சம்பவத்தையொட்டி போர் பதற்றத்தை உருவாக்குவதன் மூலம் இந்த பிராந்தியமே பதற்றத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் காஷ்மீர் சதுரங்கப் பலகையாக நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு தாரிகாமி கூறினார்.

நன்றி- தீக்கதிர் 01.10.2016

No comments:

Post a Comment