இன்றைக்கு உலக தாத்தா பாட்டி தினமாம். இரண்டு நாட்கள் முன்பாக உலக செல்லப்
பிராணிகள் தினம் என்று சொன்னார்கள். அதற்கு முன்பாக காபி தினம், அதற்கு ஒரு நாள்
முன்பாக வேறு ஏதோ தினம் என்று சொன்னார்கள். இப்படி வருடத்தில் முன்னூறுக்கும்
மேற்பட்ட நாட்களை ஏதோ ஒரு தினமாக சொல்கிறார்கள்.
நான் சின்னப்பையனாக இருந்த போது எனக்குத் தெரிந்த ஒரே ஒரு தினம், ஏப்ரல்
முதல் நாள் கொண்டாடப்படும் தினம் மட்டுமே.
வேலைக்கு வந்த பிறகு அனுசரிப்பது சர்வதேச மகளிர் தினம், உழைப்பாளர் தினம்
என்ற இரண்டு தினங்கள் மட்டுமே. ஜனவரி 19 ம் தேதியை எங்கள் சங்கத்தில் இன்சூரன்ஸ் தேசிய மய தினமாக அனுசரிப்போம்.
தமிழகத்து உழைப்பாளி மக்கள் டிசம்பர் 25 ஐ வெண்மணி தினமாக அனுசரிக்கிறோம்.
யார் இந்த தினங்களை எல்லாம் முடிவு செய்கிறார்கள் என்றால் பெரும்பாலும்
ஐக்கிய நாடுகள் சபைதான். உலக அமைதியை உருவாக்க வேண்டிய அடிப்படை வேலையை விட்டு
விட்டு இப்படி தினங்களை முடிவு செய்து கொண்டிருக்கிறது.
வேறு சில தினங்களை யாரோ தீர்மானிக்கிறார்கள். அவை பெரும்பாலும்
கார்ப்பரேட்டுகளின் விற்பனைத் தந்திரமாகவே இருக்கிறது. உலக நாய் தினம் உள்ளது, உலக எலி தினம், கழுதை தினமெல்லாம் கூட இருக்கிறது.
ஒவ்வொரு நாளையும் ஏதாவது ஒரு தினமாக அனுசரிப்பதோ, கொண்டாடுவதோ
சலிப்பைத்தான் தரும். அதன் நோக்கமும் நீர்த்துப் போய் விடும்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு தினமாக இருந்தால் எதிர்காலத்தில் “ஒன்னுமே இல்லாத” ஒரு தினம் கொண்டாடப்பட
வேண்டிய அவசியம் வந்து விடும்.
No comments:
Post a Comment