புதிய கல்விக் கொள்கை உருவாக்கும் பாதிப்புக்களைப் பற்றி தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் எழுதியுள்ள அருமையானதொரு கட்டுரையை பகிர்ந்து கொண்டுள்ளேன். அவசியம் படிக்கவும். மோடி அரசின் மோசமான முயற்சிக்கு எதிராக குரல் கொடுப்பீர்.
இனி கறுப்பாய் இருப்பாளா சரஸ்வதி?
- மதுக்கூர் இராமலிங்கம்
செய்யும் தொழிலே தெய்வம் - அதில்
திறமைதான் நமது செல்வம்
என்று
பாடினார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இந்த நம்பிக்கையின்
அடிப்படையில்தான் ஆயுத பூஜை விழாவை எளிய மக்கள் கொண்டாடுகிறார்கள். ஒர்க்
ஷாப்புகள், கடைகள் மற்றும்ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை சுத்தப்படுத்திஅடுத்த
ஓராண்டுக்கு தயார் செய்ய இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்
கொள்கிறார்கள்.மக்கள் தனிப்பட்ட முறையில் இந்த விழாக்களை கொண்டாடுவது
அவரவர் விருப்பம்.
ஆனால் அரசு அலுவலகங்களான காவல்நிலையங்களில்
துப்பாக்கிகளை கழுவி பொட்டு வைத்து பூவைக்கிற நிகழ்ச்சிகளும்
நடக்கத்தான்செய்கின்றன. இது குறித்து தந்தை பெரியார் பல ஆண்டுகளுக்கு
முன்பே, காவலர்கள் தங்கள் ஆயுதங்களை தயார் செய்வது போல களவாணிகள் தங்கள்
ஆயுதங்களான கன்னங்கோல், கத்தி, பிளேடு போன்றவற்றையும் கழுவி பொட்டு
வைப்பார்களா என்று கேள்வி எழுப்பினார்.
ஆயுத பூஜையோடு சேர்த்து சரஸ்வதி
பூஜையும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள்
கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு உரியதுஎன்று பிரித்து சரஸ்வதி பூஜைக்கு அடுத்த
நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு கடவுளின் தோற்றம் குறித்தும்
புராணங் களை படித்தால் தலைசுற்றும். எல்லோரையும் படைத்தது போல பிரம்மன்
சரஸ்வதியையும் படைத்தாராம். ஆனால் சரஸ்வதியின் அழகில் மயங்கி பிரம்மனே அவரை
மணம்செய்து கொள்ள விரும்பினாராம். படைத்ததால் பிரம்மன் தமக்கு தந்தை
நிலையில் இருப்பதாகக் கூறி சரஸ்வதி மறுத்தாராம். இருந்தாலும் வம்படியாக
பிரம்மன் சரஸ்வதியை மணந்து கொண்டார் என்று போகிறது புராணக் கதை.
சிவ
பெருமானை அலட்சியப்படுத்திவிட்டு, தட்சன் நடத்திய யாகத்தை பிரம்மன்
நடத்திக் கொடுக்க இதனால் ஆத்திரமடைந்த சிவன், பிரம்மாவை தண்டித்ததோடு,
அவரது மனைவியான சரஸ்வதியின் மூக்கையும் பிடித்து அறுத்துவிட்டாராம்.
பிரம்மன் செய்தது தவறு என்றால், அவரை தண்டிக்கட்டும். சம்பந்தமில்லாமல்
சரஸ்வதியின் மூக்கை அறுக்க வேண்டிய அவசியம் என்ன?சூர்ப்பனகை மூக்கை
லட்சுமணன் அறுத்ததாக படித்திருக்கிறோம்.
அவள் அரக்கி.
சரஸ்வதி தேவதை. பெண்கள்அரக்கியாக இருந்தாலும், தெய்வமாகவே இருந்தாலும்
ஆண்களின் கொடுமைக்கு ஆளாக வேண்டியிருக்கும் போலிருக்கிறது. இந்த புராணக்
கதைகளின் தாக்கத்தில் தான் இன்றளவும் பெண்களுக்கு எதிரான ஆசிட் வீச்சுகள்
தொடர்கின்றன .
உண்மையில், கலைமகள் வழிபாடு என்பது சமண சமயத்தில்தான்
இருந்துள்ளது. வாக்தேவி அதாவது வாக்குக்கு தேவி என்று கலைவாணி
அழைக்கப்பட்டிருக்கிறாள். சோடஷ தேவி என பதினாறு வடிவங்களில் சரஸ்வதியை
வழிபட்டுள்ளனர். சமண சமயத்தை அழித்தவர்கள் சரஸ்வதியை மட்டும் இந்து
மதத்தில் சேர்த்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்க
வாய்ப்பு இருக்கிறது.பொதுவாக, சரஸ்வதி குறித்த துதிப்பாடல்களில் வெண்மை
நிறம் கொண்டவள், கைகளில் வீணை ஏந்தியவள், வெண் பட்டுடுத்தி வெள்ளைத்
தாமரையில் அமர்ந்திருப்பவள், வெள்ளையான அன்னத்தை வாகனமாக கொண்டவள்
என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
எந்தப் பாடலிலும் சரஸ்வதி கறுப்பு நிறம்
கொண்டவள், கைகளில் பறை வாத்தியம் வைத்திருப்பவள் என்று இல்லை. ஏனெனில்
வேதகாலம் என்று இன்றைய ஆட்சியாளர்களால் புகழப்படுகிற காலத்தில் சாதியின்
பெயரால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி
மறுக்கப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் உயர் சாதியை சேர்ந்தவர்களாக
இருந்தாலும் கூட, பெண்களுக்கும் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. சரஸ்வதி
வேண்டுமானால் பெண்ணாக இருக்கலாம். ஆனால் அவளுடைய அம்சமான பெண்கள் படிக்கக்
கூடாது. அடுப்பங்கரைகளில் வெந்து சாக வேண்டும் என்பதுதான் விதி.
சரஸ்வதி
பூஜை என்று வீட்டில் உள்ள பழைய ஓலைச்சுவடிகளை ஆற்றில் கொண்டு போய்
போட்டுவிட வேண் டும் என்று இடைக்காலத்தில் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.
அனல்வாதம், புனல்வாதம் என்கிற பெயரில் சமண, பௌத்த இலக்கியங்களை, அறிவியல்
நூல்களை அழித்தவர்கள் தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும்.
உ.வே.சாமிநாதய்யர் போன்றவர்கள் முயற்சி செய்திருக்காவிட்டால்
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சமண, பௌத்த இலக்கியங்கள் ஆற்று வெள்ளத்தில்
அழிந்து போயிருக்கும். சைவ சமய மடாதிபதியாக இருந்த போதிலும் இந்த மூடப்
பழக்கத்தை வன்மையாக கண்டித்தவர் குன்றக்குடி அடிகளார்.
நீண்ட நெடிய
போராட்டங்களுக்கு பிறகு இன்றைக்கு பெண்கள் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சங்ககாலத்திலேயே அவ்வையார், காக்கைப்பாடினியார் உள்படஏராளமான
பெண் புலவர்கள் இருந்துள்ளனர். சிவபெருமாள் குடும்பத்திற்கே பஞ்சாயத்து
செய்யும் அளவிற்கு புராண காலத்து அவ்வையாரும் இருந்திருக்கிறார். ஆனால்
பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட வேத காலத்தையும், பெண்கள் பேச அனுமதி
மறுக்கப்பட்ட சமஸ்கிருத மொழியையும்தான் உயர்த்திப் பிடிக்கிறது
மோடி அரசு
முன்மொழிந்துள்ள புதிய கல்விக் கொள்கை. இந்த கொள்கை நடைமுறைக்கு வருமானால்
இனி ஒருபோதும் சரஸ்வதி கறுப்பாய் இருக்க மாட்டாள். தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் பிறந்த சரஸ்வதிகள் குலத்
தொழில் என்ற பெயரில் இனி சாணி அள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.புதிய
கல்விக் கொள்கையின் படி இனிமேல் நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத்
தேர்ச்சி. அதன்பிறகு தேர்வுகளில் தேர்ச்சிப் பெறாதவர்களை தொழில் கல்விக்கு
அதாவது, அவர்களது குலத் தொழிலுக்கு அனுப்பி விடுவார்களாம். இது ஏழை வீட்டு
சரஸ்வதிகளை வஞ்சிக்கிற சதியன்றி வேறில்லை.குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட
அரசுப் பள்ளிகளை இணைத்து விடுவார்களாம்.
நீண்ட தூரம்
நடந்து சென்று உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்க முடியுமா? அருகமைப்
பள்ளிக்கு வேட்டு வைக்கிற திட்டம் இது. இனி தனியார் பள்ளிகளில் மட்டுமே
சரஸ்வதிகள் படிக்க முடியும். ஏழை வீட்டு சரஸ்வதிகள் பள்ளிக் கல்வியை
பாதியிலேயே முடித்துவிட்டு தீப்பெட்டி ஆலைக்கும், பீடிசுற்றவும் போக
வேண்டியதுதான்.பத்தாம் வகுப்பில் திறமை அடிப்படையில் மாணவ, மாணவிகளை
இரண்டாகப் பிரிப்பார்களாம். கருவிலேயே திருவுடையவர்கள் மேல் கல்விக்கு
செல்லலாம். கொஞ்சம்கஷ்டப்பட்டு படிப்பவர்களை தொழில் கல்விக்கு மடைமாற்றம்
செய்வார்களாம்.
அதாவது சரஸ்வதிகளை இரண்டாகப் பிரித்துவிடுவார்களாம். ஒரு
பிரிவினருக்கு ஐஐடி, இன்னொரு பிரிவினருக்கு ஐடிஐ.பிளஸ் டூ தேர்வு
முடித்தாலும் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு எழுதி தேறினால்தான் மேல்
கல்விக்கு செல்ல முடியுமாம். கல்வி உதவித் தொகை பெறவும் தேசிய தகுதித்
தேர்வுஉண்டாம். இனி சமூக நீதி அடிப்படையில் தாழ்த்தப் பட்ட,
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை இல்லை. தகுதி, திறமை
அடிப்படையில்தான் உதவித் தொகை என்று கொண்டுவரப் போகிறார்கள். இதை
அனுமதித்துவிட்டால் ஏழை வீட்டு சரஸ்வதிகள் வீணையை விட்டெறிந்து விட்டு,
விறகு பொறுக்க போக வேண்டியதுதான். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எல்லா
பள்ளிகளிலும் சரஸ்வதி வந்தனம் பாட வேண்டும் என்றார்கள். இப்போதுபுதிய
கொள்கை என்ற பெயரால் சரஸ்வதிக்கு மங்கலம் பாட துணிந்து விட்டார்கள்.
எதிர்த்தால் பிழைப்போம். இல்லையேல் இன்னும் சில நூற்றாண்டுகள் பின்னோக்கித்
தள்ளப்படுவோம்.
நன்றி = தீக்கதிர் 10/10/2016
No comments:
Post a Comment