Saturday, October 15, 2016

எரிகிற கொள்ளிகள் எல்லாமே . . . .

 அமெரிக்க தேர்தல் குறித்த ஒரு நேர்காணல். எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி, நல்ல கொள்ளி என்ற நிலையில் இருப்பது அமெரிக்கர்களின் துரதிர்ஷ்டம்தான்.




அமெரிக்கர்களின் துரதிர்ஷ்டம்
ஜான் கிரியக்கவ்



ஜான் கிரியக்கவ், அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏவில் ஒரு ஏஜெண்டாக பணிபுரிந்தவர். சிஐஏவின் கொடூரமான திட்டங்கள் கண்டு, மனம் கொதித்து அந்தப் பணியிலிருந்து வெளியேறி, சிஐஏவின் நாசகர திட்டங்களை அம்பலப்படுத்துவதிலேயே காலத்தை கழித்தவர். இதற்காக கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்தவர். ரஷ்யாவின் புகழ்பெற்ற ஏடும், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடுமான ‘பிராவ்தா’வுக்கு ஜான் கிரியக்கவ் அளித்த நேர்காணல் இது. சிரியாவில் நடக்கும் யுத்தம், ரஷ்யாவை ஓரம்கட்ட முயற்சிக்கும் அமெரிக்காவின் திட்டங்கள், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போலித்தன்மை என பல்வேறு விஷயங்களை விவரிக்கிறார் ஜான் கிரியக்கவ்.

ட அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை கணினிப் பொறிகளை ரஷ்யா திட்டமிட்டு ஹேக் செய்து தகவல்களை திருடிவிட்டதாகவும், தற்போது ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனின் சர்ச்சைக்குரிய இ-மெயில்களை ரஷ்யாதான் வெளியிட்டுவிட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறதே?

இது அமெரிக்காவில் தேர்தல் காலம். அவர்கள் ரஷ்யா மீது குற்றங்களை சுமத்துவதற்கான காலம். ரஷ்யா மீது குற்றம்சாட்டி பேசினால், அங்கு எடுபடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ரஷ்யா அதை வெளியிட்டதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை அவர்கள் வெளியிடவில்லை. உண்மையில் ரஷ்யா அந்த விபரங்களை ஹேக் செய்திருந்தால், அது மிகக் கடுமையான பிரச்சனைதான். ஆனால் அதற்கான ஆதாரம் எங்கே என்பதுதான் கேள்வி. ஆதாரம் இல்லாமல் பேசுவது வெற்றுப் பேச்சே.

ட ரஷ்யாவுடன் நிரந்தரமாகவே ஒரு பதற்றத்தை தொடர செய்ய வேண்டும் என அமெரிக்க அரசியல்வாதிகள் நினைக்கிறார்களா? ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை திறமையுடன் ரஷ்யாவால் ஒடுக்கிவிட முடியுமா? சிரியாவில் அமெரிக்காவுடன் அது சேர்ந்து செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா?

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான அர்த்தமுள்ள கொள்கையும் கிடையாது. ஆனால் ரஷ்யாவை பொறுத்தவரை சிரியாவில் தலையீடு செய்வதற்கு உரிமை பெற்றிருக்கிறது என்று சொல்ல முடியும். ஏனென்றால் சிரியாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள - உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் ரஷ்யாவின் ராணுவத்தை அழைக்கிறது; அந்த அழைப்பின் பேரில்தான் ரஷ்யா அங்கு சென்றுள்ளது. உண்மையில் அந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் சீரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை, சிரியாவில் வேறுவிதமான பலன்களை எதிர்பார்த்தே தலையிடுகிறது.

ட அப்படியானால் எப்போதுமே அமெரிக்கா, ரஷ்யாவை குற்றம் சாட்டி வருகிறது. மீண்டும் ரஷ்யாவுடன் ஒரு புதிய விதமான பனிப்போரை உருவாக்க வாஷிங்டன் முயற்சிக்கிறதா?

அப்படியொரு முயற்சியில் வாஷிங்டன் ஈடுபடும் என்று நான் நினைக்கவில்லை. மாறாக, அமெரிக்காவில் இப்போது தேர்தல் காலம். அங்கு ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் ஜனநாயகவாத கட்சியினருக்கு, அடித்து விளையாடுவதற்கு ஒரு ஆள் தேவை. அதனால்தான் அவர்கள் ரஷ்யாவை குற்றம்சாட்டி வருகிறார்கள். ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்காவில் வாக்குரிமை இல்லை அல்லவா...!

ட அமெரிக்க பாதுகாப்பிற்கு உண்மையிலேயே, சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தால் ஆபத்து இருக்கிறதா? ஏன் சிரியாவை அமெரிக்கா தாக்குகிறது?

அமெரிக்காவுக்கு எந்தவிதத்திலும் அசாத் ஆபத்தான ஆள் இல்லை. கடந்த காலத்திலும் அவர் ஒருபோதும் ஒரு அச்சுறுத்தலாக இருந்ததில்லை. ஆனாலும், 2009 ஆம் ஆண்டில் அசாத்தின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக, ஒரு ‘மிதவாத எதிர்க்கட்சியை’ ஆதரிப்பது என அமெரிக்கா முடிவு செய்தது. உண்மையில், அப்படியொரு எதிர்க்கட்சியே சிரியாவில் இல்லாத போதிலும், அமெரிக்கா அந்த முடிவை எடுத்தது. அதைத்தான் இப்போது செயல்படுத்தி, வெற்றி பெற முடியாமல் தத்தளிக்கிறது.ட 2013 ஆம் ஆண்டில் சிரியாவில் உள்நாட்டுப் போர் துவங்குவதற்கு முன்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் ஒரு கூட்டாளியாகத்தானே பஷார் அல் அசாத் இருந்தார், அப்படியானால் ஏன் இப்போது தாக்க வேண்டும்? 

சிரியாவில் சிஐஏ மேற்கொண்ட சதிகள் என்ன?வெளிப்படையாக சொல்வதானால், சிரியாவில் பயங்கரவாதிகளை ஒழிப்பதல்ல அமெரிக்காவின் நோக்கம். சிரியாவில் அமெரிக்காவின் கொள்கையும், நடவடிக்கைகளும் அப்பட்டமாக தோல்வியடைந்திருக்கிறது; ஏனென்றால் ஐஎஸ் பயங்கரவாதிகளை பற்றியோ, இதர பயங்கரவாதிகளை ஒழிப்பது பற்றியோ உண்மையில் அமெரிக்காவுக்கு எந்தக் கொள்கையும் இல்லை என்பதுதான். இன்றைக்கு அங்கு நடந்துக் கொண்டிருப்பதை பளிச்சென்று சொல்வதானால், அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சிஐஏவால் உருவாக்கப்பட்டு, வளர்த்துவிடப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வரும் ஒரு குழுவை, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வரும் ஒரு குழு எதிர்த்து போரிட்டு கொண்டிருக்கிறது என்பதுதான்.

ட லிபியாவிலும், இராக்கிலும் உள்ள பயங்கரவாதக்குழுக்கள், கொடூரமான ஐஎஸ் பயங்கரவாதக் குழுவோடு இணைந்து, பெரிய அளவிற்கு வளர்ந்து ஆப்கானிஸ்தானிலும் பெரிய தளத்தை அமைத்துவிட்டார்கள்; இவர்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறார்கள்; அதனால்தான் ராணுவ ரீதியாக தாக்குதல் தொடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறதே? 

அமெரிக்காவுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகளால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அவர்களை காரணம் காட்டி மேலும் மேலும் பல நாடுகளை அமெரிக்கா தாக்குவதால் அவர்களை தடுத்துவிடலாம் என்பது பொய். ஏனென்றால் அவர்களை உருவாக்கியதே அமெரிக்காதான். 

ட ராணுவத்தை பயன்படுத்தி தாக்குவதால் பயங்கரவாதத்தை தோற்கடித்துவிட முடியுமா? ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டுள்ளதா?

எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு போராட்டத்திலும் ராணுவப் படைகளை பயன்படுத்துவது என்பது ஒரு அம்சம்தான். ஆனாலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை வீழ்த்துவதற்கு பல அம்சங்களை ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. ராணுவப்படைகள் ஒருபுறம், ராஜீய நடவடிக்கை ஒருபுறம், பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சக்திகளின் அணிசேர்க்கை ஒருபுறம், ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாடும் பகுதிகளில் அவர்கள் கையில் ஆயுதங்கள் கிடைக்கவிடாமல் ஆயுதப் பேரத்திற்கு தடைவிதிப்பது ஒருபுறம் என அனைத்து செயல்களும் ஒன்றிணைய வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 15 ஆண்டுகளாக அமெரிக்கா தொடர்ந்து தவறிழைத்து வருகிறது. அனைத்து விதமான சர்வதேச சட்டங்களையும் மீறி வருகிறது. இது ஏகாதிபத்தியத்தின் நலன்களை பாதுகாப்பதற்கானதுதானே?

2001 செப்டம்பர் 11 தாக்குல்களுக்குப் பிறகு, பல நாடுகளின் மீது நடத்தப்பட்ட போர்களுக்கு அமெரிக்காவின் தலைவர்களே காரணம். அந்த முடிவுகளுக்காக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். இராக்கில் கொடூரமாக போர்த்தொடுத்தார்கள். அது வெறும் போரல்ல. ஆக்கிரமிப்பு யுத்தம். ஜார்ஜ் புஷ், ரிச்சர்டு செனய், டொனால்ட் ரம்ஸ்பெல்டு, கண்டோலிசா ரைஸ் உள்பட அந்த நாட்டின் ஒவ்வொரு தலைவரும் அவர்களது குற்றங்களுக்காக தி ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றப்பட வேண்டியவர்கள்

ட அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை அந்நாட்டு ஊடகங்கள் முன்னிறுத்துவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

டொனால்டு டிரம்ப்பிற்கு அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் அதீதமான விளம்பரத்தை அளித்து வருகின்றன. உண்மையில் அங்கு மாற்று வேட்பாளராக போட்டியிடும் கேரி ஜான்சனைப் பற்றியோ, ஜில் ஸ்டெயினைப் பற்றியோ எந்த ஊடகமும் செய்திகள் வெளியிடுவதில்லை. இரு கட்சி ஆட்சிமுறையின் சதி இது.

ட ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்காவின் ஒட்டுமொத்த சக்திவாய்ந்த ஊடகங்கள் அனைத்தும் நிதியையும் ஆதரவையும் வாரி வழங்கியுள்ளனவே, அப்படியிருக்கும்போது, ஹிலாரிக்கு எதிராக ஊடகங்கள் செயல்படுவது போன்ற ஒரு கருத்தினை அவரது கட்சியினர் கூறிக் கொண்டிருக்கிறார்களே, அது ஏன்?

ஹிலாரி கிளிண்டனுக்கு அவரே ஒரு பெரிய பிரச்சனைத்தான். பளிச்சென்று சொல்வதானால் ஹிலாரி மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. ஊடகங்கள் தூக்கிப்பிடிப்பதாலோ அல்லது தூற்றுவதாலோ மக்களிடையே உள்ள கருத்தை பெரிய அளவிற்கு மாற்றிவிட முடியாது.

ட இந்த தேர்தலில் என்ன நடக்கும்?

அமெரிக்க மக்களின் துரதிர்ஷ்டம், இரண்டு மிக மிக மோசமான, நம்பகத்தன்மையற்ற வேட்பாளர்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஹிலாரி கிளிண்டனை பொறுத்தவரை நம்பகத்தன்மையற்றவர்; அவர் ஒரு கிரிமினல் என்று சொல்வேன்; மோசமான ஊழல் பேர்வழியும் கூட. டொனால்டு டிரம்ப்பை பொறுத்தவரை வெறிபிடித்தவர்; காட்டுக் கூச்சல் போடுபவர்; இனவெறியை முன்வைத்து மக்களை திரட்டிவிடலாம் என்று நினைப்பவர். இரண்டு பெரிய தீமைகளில் பாதகம் சற்று குறைவான தீமை எதுவோ அதைத்தான் அமெரிக்கர்கள் தேர்வு செய்தாக வேண்டும். அந்த தீமை ஹிலாரி கிளிண்டன்தான்.

ஏன் டொனால்டு டிரம்ப்பைவிட ஹிலாரி கிளிண்டன், பாதகம் சற்று குறைவான தீமை என்று சொல்கிறீர்கள்?என்னை பொறுத்தவரை இரண்டு பேருமே கொடூரமான வேட்பாளர்கள்தான். ஒருவர் உள்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக, அகதிகளுக்கு எதிராக பேசுகிறார். ஒருவர் வெளிநாடுகளில் ஆட்சிகளை கவிழ்ப்பது, போர்களை நடத்துவது என்று கொடூரங்களில் ஊறிப்போன போர்வெறியர். இந்தக் காரணங்களுக்காக இருவருமே மோசமானவர்கள்தான். நான் யாருக்கு வாக்களிப்பேன் என்று கேட்டீர்களானால், விடுதலைக் கட்சியின் வேட்பாளரான கேரி ஜான்சனைத்தான் தேர்வு செய்வேன். ஆனால் பொதுவாக அமெரிக்க மக்களின் முன்பு ஹிலாரியும், டிரம்ப்பும்தான் முன்வைக்கப் பட்டிருக்கிறார்கள். ஹிலாரியைத்தான் அவர்கள் தேர்வு செய்வார்கள்.

ட ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும் ஜனநாயகக் கட்சியையும், குடியரசுக் கட்சியையும் தவிர அமெரிக்கர்களுக்கு நீண்டகாலமாகவே வேறு வாய்ப்பே முன்னிறுத்தப்படவில்லை. இதற்கு தீர்வே கிடையாதா?

அமெரிக்காவில் மூன்றாவது கட்சிகள் ஒரு உண்மையான மாற்றுச் சக்தியாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களித்தால் நம்முடைய வாக்குகள் வீணாகிவிடுமே என்ற சிந்தனையிலிருந்து அமெரிக்கர்கள் விடுபட வேண்டும். என்னைப் பொறுத்தவரை நீங்கள் நம்பிக்கை வைக்காத ஒருவருக்கு அளிக்கிற வாக்குத்தான் வீணாகும் வாக்கு; நினைவில் கொள்ளுங்கள் அமெரிக்கர்களே, இரண்டு தீமைகளில் குறைவான தீமை என்பதும் தீமைதான்.

- தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன் 

நன்றி தீக்கதிர் 13.10.2016

1 comment:

  1. just like we have dmk aiadmk...both parties are not good USA also faces uncertainity

    ReplyDelete