Thursday, October 6, 2016

மதிகெட்ட மனிதரின் நெறிகெட்ட கருத்து

தின மணி மதியின் வக்கிர கார்ட்டூனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் ஆற்றிய எதிர் வினை.

நன்றி - இன்றைய தீக்கதிர் நாளிதழ்

 

தினமணி பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நிலைகெட்ட மனிதரென்றும், தீவிரவாத பிரச்சனை தீரும் வரை அண்டை நாட்டிலேயே இருக்கட்டும் என்றும் தினமணியில் கார்ட்டூன் என்கிற பெயரில் ஒரு நாலாந்திர தாக்குதலை தொடுத்துள்ளார். இதேபோன்று வேறுசிலரும் கூட இத்தகைய பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த சொன்னதற்காகத்தான் இத்தனை வன்மத்தோடும், அநாகரிகத்தோடும் இப்படி எழுதுகின்றனர்.

பாஜக உடைத்தால் மண் சட்டி

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு முன்னர் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததேயில்லையா? இன்னும் சொல்லப்போனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பாஜக பாகிஸ்தானுடன் போர் தொடுப்பதன் மூலம் தான் அதற்கு புத்தி கற்றுக் கொடுக்க முடியும் என்று பேசி வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பேச்சுவார்த்தை என்பதை அவர்கள் தங்களது கொள்கை என அறிவித்தார்கள். ஒருகட்டத்தில் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கே போய் வந்தார் வாஜ்பாய். ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்டு எல்லா பிரச்சனை பற்றியும் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்தார்கள். 2004ஆம் ஆண்டில் முஷாரப்போடு ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்தி கிட்டத்தட்ட ஒரு ஒப்பந்தம் வரும் நிலையில் இருந்தது. வாஜ்பாய் காலத்தில் ‘ஆபரேசன் பராக்கிரமா’ என்று சொல்லி ஏறத்தாழ ஓராண்டிற்கு எல்லை முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு போதும் போர் நடைபெறவில்லை.கார்கில் போருக்கு பின்னரும் கூட இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதையெல்லாம் இவர்கள் ராஜதந்திரம் என்று பேசிக் கொண்டார்கள். எனவே எந்தவொரு அரசாங்கத்தின் முதல் முன்னுரிமையாகவும், கடைசி முன்னுரிமையாகவும் பேச்சுவார்த்தை என்பதுதான் இருந்திருக்கிறது. 

ஆனால், பாஜக ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவதையும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. பாஜகவின் ஆதரவாளர்களுக்கும் இது பொருந்தும். பாஜக பேச்சுவார்த்தை நடத்தினால் அது ராஜதந்திரம், தேசபக்தி. அதே விஷயத்தை மற்றவர்கள் முன்மொழிந்தால் அது தேசத் துரோகம். இது தான் அவர்களின் வரையறையாக உள்ளது. 

 ‘சேலை டிப்ளமசி’
 
முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. 2014ல் மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தனது முடிசூட்டு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமரை அழைத்திருந்தார். இதற்கு முன் யாரும் செய்யாதது இது என்றும், இது பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்றும் பாஜக ஆதரவாளர்கள் பீற்றிக் கொண்டு அலைந்தார்கள்.2015 ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் போயிருந்த மோடி ஏதோ அடுத்த வீட்டை எட்டிப்பார்ப்பதைப்போல திடீரென பாகிஸ்தானுக்கு சென்றார். நவாஸ் ஷெரீப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போனதாக பத்திரிகைகள் கொண்டாடின. இவர் அவரைக் கட்டிப்பிடிக்க, அவர் இவருடைய தாயாருக்கு சேலை பரிசளிக்க, இந்தியாவின் ஊடகங்கள் காஷ்மீர் பிரச்சனை, எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாத பிரச்சனை, பயங்கரவாத பிரச்சனை அத்தனையும் முடிவுக்கு வந்துவிடும் என்பது போல எழுதித்தள்ளினார்கள்.

பாகிஸ்தானுக்கு இந்தியப் பிரதமர் போவதற்கு முன்பாக 2014ம் ஆண்டு ஜூலை தொடங்கி 2015 டிசம்பர் வரை எல்லையில் தீவிரவாதிகளாலும், பாகிஸ்தான் படையினராலும் 32 ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் பிறகு தான், பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வாழ்த்துச் சொல்வதற்காக ஆப்கானிஸ்தானிலிருந்து அப்படியே பறந்து சென்று கட்டிப்பிடித்து வந்தார். நவாஸ் ஷெரீப், மோடியின் தாயாருக்கு சேலை பரிசாக கொடுத்தனுப்பியதை இந்திய பத்திரிகைகள் கொண்டாடி மகிழ்ந்தன. அந்த சேலைதான் சமாதானக் கொடி என்பது போல மதி போன்றவர்கள் பீற்றினார்கள்.

 அப்போ நாடாளுமன்றம் இப்போ உரி..!
 
கடந்த காலத்தில் மும்பை நகரத்தின் மீது தாக்குதல் நடந்த போது ‘இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாத அரசு’ என்று காங்கிரஸ் கூட்டணி அரசை பாஜக, சங் பரிவார் அமைப்புகள் கடுமையாக குற்றம்சாட்டினர்.ஆனால் வாஜ்பாய் ஆட்சிப்பொறுப்பில் இருந்த போதுதான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது; மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பதான்கோட் ராணுவ முகாம் மீதும், உரி ராணுவ முகாம் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஆனால் பாஜக இதுகுறித்து வரும் விமர்சனங்களைப் புறந்தள்ளுகிறது. 

‘‘நம்முடைய வீரர்கள் இறந்திருக்கிறார்கள்; இந்த நேரத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பது தேச விரோதச்செயல்’’ என்று கட்டளை இடுகிறது.2008ம் ஆண்டு மும்பை தாக்குதலின்போது இப்படி அரசை விமர்சித்தவர்களை தேச விரோதிகள் என்று சொல்லலாமா? அப்படி ஒரு தேச விரோதியையா இந்தியாவின் பிரதமராக வைத்திருக்கிறோம்? எந்தவித நியாயமுமற்ற நிலையில், இந்தியாவுக்கு போர் வெறியை உருவாக்குவதன் மூலம் உள்நாட்டிற்குள் ஏற்பட்டிருக்கும் அதிருப்திகளை சமாளிப்பதற்காக இந்தியாவின் பெருமைகளையும், கவுரவத்தையும், பாதுகாப்பையும் அடமானம் வைக்கிற அரசாங்கமாக மோடி அரசாங்கம் இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை கொன்று விட்டதாகவும், இதற்கு முன்பு இப்படி எல்லாம் நடந்தது இல்லை என்றும் இவர்கள் கூறித் திரிகிறார்கள். 

இதெல்லாம் பாஜகவுக்கு சகஜமப்பா...!

மன்மோகன் சிங் காலத்தில் இதேபோன்று 3 முறை நடந்ததாக அப்போது ராணுவத்தில் இருந்த அதிகாரிகள் சொல்கிறார்கள். எல்லைக்கு அப்பால் இருந்து தாக்குதல் அதிகமாகிற இதுபோன்ற காலங்களில் இந்திய ராணுவம் கடந்த காலத்திலும் இத்தகைய பதிலடியை கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் அத்தகைய பதிலடி கொடுக்கப்பட்டதா என்பதே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.5-10-2016 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எல்லைப்பகுதியில் போய் விசாரித்ததாகவும், லேசான தாக்குதல் நடந்தது என்றும், அரசாங்கம் சொல்வது போல அழிக்கப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை அத்தனை அதிகமாக இருக்காது என்றும் இதை பார்த்தவர்கள் சொன்னதாகவும் எழுதியுள்ளது. ஆனால், அரசாங்கம் இந்த தாக்குதல் பற்றிய எந்த ஒரு காணொலி காட்சியையும் வெளியிடவில்லை. ஐ.நா. பொதுச்செயலாளரின் ஊடக உதவியாளரும் இத்தகைய தாக்குதல் நடந்திருக்காது என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளார். 

 பொய்யும், புரட்டும்
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் ‘‘எல்லை தாண்டி எதிரிகளை அழித்த மாவீரன் மோடிக்கு வாக்களியுங்கள்’’ என்று வாசகங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கவுரவமும், பெருமையும், பாதுகாப்பும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; உத்தரப்பிரதேச தேர்தல் ஒன்றே தனது நோக்கமென்று மோடி அரசாங்கம் செயல்படுகிறது.தேசத்தின் பாதுகாப்பு நெருக்கடியில் இருக்கிறது. எனவே அரசு குறித்த எந்த விமர்சனத்தையும் வைக்காதீர்கள் என்று சொல்பவர் யாரும் தேசப் பாதுகாப்பு பிரச்சனையை வாக்குகளை பெறுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று சொல்லவில்லை. உண்மையில், எல்லைக்கு அப்பால் பயங்கரவாதிகள் முகாமின் மீது இத்தகைய தாக்குதல் நடந்ததா? என்று கூட தெரியாத நிலையில் அத்தகைய தாக்குதல் நடந்து விட்டதாகவும், அதனாலேயே தீவிரவாதிகள் முறியடிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே மோடி பெரிய வீரர் என்றும், அதற்காகவே உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் சொல்வது வெட்கக்கேடானது. 

ராணுவத்தின் தியாகத்தை தங்களுடைய குறுகிய தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்துகிற மிகக் கேவலமான செயல்.இந்தப் பின்னணியில்தான் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சரிதான்; ஆனால் அதேசமயம் இதை ஒரு போராக மாற்றிவிடக்கூடாது என்று சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். இந்த காலத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தன்னோடு தொடர்பு கொண்டதாகவும் இரண்டு தரப்பும் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார். 

இந்திய பாதுகாப்பு அமைச்சகமோ பிரதமர் அலுவலகமோ பாதுகாப்பு ஆலோசகரோ இந்த செய்தியை இந்த நிமிடம் வரை மறுக்கவுமில்லை, ஒப்புக்கொள்ளவுமில்லை.ஒருபக்கம் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவதும், இன்னொரு பக்கம்அதைப்பற்றிய விவரங்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருப்பதும், அதேசமயம் இத்தகைய பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று சொல்லும்போது, சொல்பவர்களை தேசத்துரோகிகளைப் போல சித்தரிப்பதும், நேர்மையற்ற அணுகுமுறை. இத்தகைய அணுகுமுறையை ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் தங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர். மதி ஏன் அதை கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கச் சொல்கிறது. அதனால் யெச்சூரி நிலைகெட்ட மனிதர்; அவர் வெளிநாடு போக வேண்டும், என்றெல்லாம் பேசுவது தேசநலனுக்கு உதவாது. வேண்டுமானால் மதிகள் ஆதரிக்கும் மோடிகளின் தேர்தல் வெற்றிக்கு அது உதவக்கூடும். 

ஆனால் இந்தியாவுக்கோ, இந்திய மக்களுக்கோ எந்த நன்மைகளையும் விளைவித்து விடாது.2008ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு முன்பு வரை பாரம்பரிய போர் முறையில் பாகிஸ்தான் இந்தியாவோடு மோத முடியாத நிலையிலேஇருந்தது. ஆனால் பொக்ரான் அணு சோதனைக்கு பிறகு பாகிஸ்தானும் தன் கையில் அணுகுண்டுகளை வைத்திருக்கிறது. இது 2008க்கு முன்னர் இந்தியாவுக்கு இருந்த போர் வலிமையை இல்லாமல் செய்துவிட்டது என்பதே உண்மை. மதி போன்றவர்கள் வாக்குகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கூட்டத்துக்கு துணை போவதன் மூலம் இந்தியாவுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை. அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சேவை செய்து விட்டுப் போகட்டும், மாறாக, இந்திய மக்களின் வாழ்வோடும், இந்தியாவின் பாதுகாப்போடும் இந்திய மக்களின் உயிரோடும் விளையாடாமல் இருக்கட்டும்!




4 comments:

  1. Replies
    1. If you see modi and his coterie alone as India, We are anti indians only and proud to be so

      Delete
  2. எல்லாம் நூல் பாசம்

    ReplyDelete
  3. hi mr anony... NOOL prevails in all parties
    some of the greatest communists like ramamoorthy ramani rangarajan gopu all belong to nool only
    the great freedom fighters eminent teachers great scientists novelists poets doctors enginerrs bankers auditors sportsmen prime ministers presidentof india... software companies founders...the list is endless man....
    vadivel solramathiri PULLAKUTTIGALAI PADIKKA VAIKKIRA VAZHIYI PARUNGAPPA

    ReplyDelete