Saturday, October 22, 2016

எப்போதும் எங்களோடு இருப்பாய். . .

நேற்றைய தினம் ஒரு துயரச் செய்தியோடு தொடங்கியது. எங்களது அன்புத்தோழர் சி.வெங்கடேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்பது செவிகளில் இடியாய் இறங்கியது. 

அற்புதமான செயல் வீரர் அவர். என் மீது பேரன்பு கொண்டவர். எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பு. சிதம்பரம் என்றால் சி.வி தான் எங்களுக்கு.

சுனாமி தான் அவரது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை, சக மனிதர்கள் மீதான நேயத்தை வெளிப்படுத்தியது. சுனாமி வந்த செய்தி கேட்டவுடன் கட்டிய கைலியோடு பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி ஓடியவர். ஒரு வார காலம் அங்கேயே தங்கி இருந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டவர்கள். சடலங்களை அகற்றி அடக்கம் செய்வதில் தொடங்கி வருகிற நிவாரணப் பொருட்களை பாதிக்கப் பட்ட மக்களுக்கு முறையாகக் கொண்டு சேர்ப்பது வரை அவர் ஆற்றிய பணி மகத்தானது. 

ஆரவாரம் இல்லாமல் அமைதியாய் செயல்பட்ட அற்புதமான தோழரை இழந்து விட்டோம். அவரது உடலை நோய் உருக்குலைத்த
போதும் உள்ளத்து உறுதி இறுதி வரை நீடித்தது. இம்மாத துவக்கத்தில் அவரை சந்தித்த போது கைகளைப் பற்றிக் கொண்டார். பேசுவதற்கு சிரமப்பட்ட போதும் அவர் கேட்ட கேள்வி "வெங்கடேஷ் ஆத்ரேயா கூட்டம் நன்றாக நடந்ததா?"

தன்னலமற்ற ஒரு களப் போராளி மண்ணிலிருந்து மறைந்து விட்டார். ஆனால் அவர் நினைவுகள் எப்போதும் எங்கள் இதயங்களில் நீடிக்கும்.

எங்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பைச்சொல்லும். 

அருமைத் தோழர் சி.வி க்கு செவ்வணக்கம்

நம் வேலூர் கோட்டச்சங்கத்தின் இணைச்செயலாளராக பல ஆண்டுகள் மிகச் சிறப்பாக செயல்பட்ட. அனைவராலும் சி.வி என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் சி.வெங்கடேசன், 21.10.2016 அன்று இயற்கை எய்தினார் என்பதை சொல்லவொண்ணா துயரத்துடன் தெரிவிக்கிறோம்.

1993 ம் ஆண்டு சிதம்பரம் கிளையில் உதவியாளராக பணியில் சேர்ந்த தோழர் சி.வி, தன்னை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் இணைத்துக் கொண்டு விரைவிலேயே முன்னணி செயல் வீரராகவும் திகழ்ந்தார். 1999 ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற கோட்டச்சங்க மாநாட்டில் கோட்டத்தின் இணைச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைவரோடும் அன்பாக பழகக் கூடிய தோழர் சி.வி ஒரு அற்புதமான செயல்வீரர். அவரது பணிகள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் எல்லைகளையும் கடந்து விரிந்தது. முற்போக்கு இயக்கங்களிலும் சிதம்பரம் நகரத்தின் தொழிற்சங்கக் கூட்டு இயக்கங்களிலும் தன்னலமற்ற பணிகள் மூலமாக முத்திரை பதித்தார்.

சுனாமி தாக்கிய சமயத்தில் தோழர் சி.வி ஆற்றிய பணிகள் அனைவருக்கும் முன்னுதாரணமானது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி உடனடியாக விரைந்த தோழர் சிவி பல நாட்கள் அங்கேயே தங்கி இருந்து சடலங்களை அப்புறப்படுத்தும் பணி உட்பட துயருற்ற மக்களுக்கு தோள் கொடுத்தார். நமது சங்கத்தின் சார்பில் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிள்ளை பகுதியில் சமூக நலக் கூடம் கட்டப்பட்டது என்றால் அதற்கு தோழர் சி.வி அவர்களின் அயறாத உழைப்புதான் முக்கியக் காரணம். எண்ணற்ற சவால்களும் நெருக்கடியும் அப்பணியை முடிப்பதில் தோன்றினாலும் அர்ப்பணிப்பு உணர்வோடும் நிதானத்தோடும் சந்தித்தார்.தோழர் சி.வி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளராக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயல் வீரராக  கடலூர் மாவட்டத்தில் தடம் பதித்திருக்கிறார். தமிழ்மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுடெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர் தோழர் சி.வி. அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்தில் முன்னணிப்பாத்திரம் வகித்தவர். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் கே.பாலகிருஷணன் அவர்களின் கடமைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தவர்.

குறைந்த எண்ணிக்கையிலான தோழர்கள் இருந்த போதும் கோட்டச்சங்கத்தின் பொது மாநாடு சிதம்பரத்தில் வெற்றிகரமாக நடைபெற தோழர் சி.வி அவர்களின் துல்லியமான திட்டமிடலும் சிதம்பரம் நகரில் அவர் உருவாக்கியிருந்த தோழமை சக்திகளுமே காரணம் என்பதை நம்மால் மறக்க இயலாது.

கோட்ட மாநாடுகள் தொடங்கி அகில இந்திய மாநாடுகள் வரை உணர்வுபூர்வமான பங்களிப்பை வழங்கியவர். 1996 ல் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிலிருந்து 2014 ல் நாக்பூரில் நடைபெற்ற மாநாடு வரை அகில இந்திய மாநாடுகளில் கலந்து கொண்டவர். குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்துபவர். இனிய கிராமத்து பாடல்கள் மூலம் எல்லோரையும் ஈர்த்தவர்.

எப்போதும் புன்னகை தவழும் முகத்தோடு எல்லோருக்கும் உதவிகள் செய்யும் இனிய தோழர், உடல் நலன் குன்றிய போதும் சங்கத்தின் இயக்கங்கள் மீது அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தவர். கடந்தாண்டு பெரு வெள்ளத்தின் போது தன் சிரமங்களை பொருட்படுத்தாமல் நிவாரணப்பணிகளில் முன்னின்றார். தஞ்சையில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டுப் பேரணியிலும் கூட தன் உடல் நிலையை பொருட்படுத்தாமல் பங்கேற்றார்.

01.09.2016 அன்று சிதம்பரம் கிளைச்சங்கத்தின் வைர விழா ஆண்டு விழா நடைபெற்றபோது “அவசியம் செல்ல வேண்டுமா?” என்று கேட்டதற்கு “சங்கத்திற்கு நான் என்ன செய்கிறேன் என்பதுதான் முக்கியம்” என்று பதிலளித்ததாக தோழர் சி.வி அவர்களின் மனைவி பகிர்ந்து கொண்ட செய்தி அவரது சங்க உணர்விற்கோர் அடையாளம்.

தனது உடல் நிலை காரணமாக இணைச்செயலாளர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு தோழர் சி.வி கோரியபோது அதனை அரக்கோணத்தில் நடைபெற்ற  29 வது கோட்டச்சங்க மாநாடு கனத்த இதயத்தோடு ஏற்றுக் கொண்டது. அவர் முழுமையான நலன் பெற்று மீண்டும் எப்போதும் போல செயல்படுவார் என்ற நம் எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போனது மிகப் பெரிய துயரம்.

அனைவரையும் நேசித்த, அனைவராலும் நேசிக்கப்பட்ட தோழர் சி.வெங்கடேசன் அவர்களின் மறைவு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும் மாபெரும் இழப்பு.

ஏ.ஐ.ஐ.இ.ஏ வின் முன்னாள் இணைச்செயலாளர் தோழர் ஆர்.கோவிந்தராஜன், தோழர் சி.வியின் இரங்கல் கூட்டத்திலே

“மரணத்திற்கு வயதில்லை என்பார்கள். தோழர் வெங்கடேசனுக்கு மரணத்தை தழுவும் வயதில்லை” என்று குறிப்பிட்டார்.

ஆம். இளைய வயதிலேயே, நம்மை விட்டு தோழர் சி.வி பிரிந்தாலும் அவரது நினைவுக்ள் நம்மை விட்டு பிரியாது. தன் வாழ்நாள் முழுதும் அவர் உயர்த்திப் பிடித்த லட்சியத்தை பின்பற்றுவோம்.

தோழர் சி.வெங்கடேசன் அவர்களுக்கு செவ்வணக்கம்
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
வேலூர் கோட்டம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. IT GIVES ME MUCH PAIN IN MY DEEP HEART. WE HAVE LOST A DEDICATED AIIEA MEMBER WHO INHALED HIS DEEP BREATH OF AIIEA AND CPM. I HAVE NO WORDS TO EXPRESS MY FEELING FOR THE LOSS TO THE ORGANISATION. CHIDAMBARAM IS THE PLACE WHERE SOCIAL AWARENESS IS HIGHLY APPRECIATED. SO IT IS THE LOSS TO CHIDAMBARAM PEOPLE AND THE BRANCH. WITH TEARS FROM MY HEART I PRAY FOR HIS SOUL REST IN PEACE.

    ReplyDelete