Saturday, October 29, 2016

டாட்டா குடும்பத்து குத்து வெட்டு

  
எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதிய கட்டுரையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

டாடாவின் அதிர் வேட்டு

                                                                           பொருளியல் அரங்கம் 
                                                                                                                            -க.சுவாமிநாதன்

சைரஸ் மிஸ்ட்ரிக்கு டாட்டா வைத்த வெடி கார்ப்பரேட் உலகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. டாட்டா குழுமத்தின் நம்பர் 1 தலைமை நிர்வாகி சைரஸ் மிஸ்டரியை முன்னறிவிப்பு எதுவுமின்றி தூக்கிக் கடாசி இருப்பதே காரணம். 

ஊசலாடும் உறவுகள் 

2016 ன் பெரிய ஜோக் எதுவெனில், இப்படி அறிவிப்பு இல்லாமல் விளக்கம் எதுவும் கோராமல் ஒருவரை நீக்கலாமா என்று சில வணிக இதழ்கள் விவாதிப்பதுதான். இந்தியாவின் கோடிக்கணக்கான தொழிலாளிகளின் பணிப் பாதுகாப்பு பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள், வேலைக்கு எடுப்பதும் வீட்டுக்கு அனுப்புவதுமான (HIRE & FIRE) “சுதந்திரம்” வேண்டுமெனக் கேட்பவர்கள் சைரஸ் மிஸ்திரி விஷயத்தில் நியாயம் பேசுவதற்கு காரணம் என்ன? தானாடாவிட்டாலும் சதையாடுகிற மூலதனத்தின் சென்டிமென்ட் இது. 

2011 ல் ரத்தன் டாட்டா தனது ஒன்றுவிட்ட பங்காளி நோயல் டாட்டாவை தெரிவு செய்யாமல் சைரஸ் மிஸ்திரியை டிக் செய்தார். சைரஸ் மிஸ்திரியின் சகோதரி ஆலு, நோயல் டாட்டாவின் மனைவி. புரிகிறதா ? எல்லாம் ஒன்னுக்குள் ஒன்னு. இதனால்தான் கார்ப்பரேட் உறவுகள் ஊசலாடுகின்றன. அப்போதே இந்தப் பதவிக்கு பெப்சி சி.இ.ஓ இந்திரா நூயி போன்ற பலர் போட்டியிட்டனர்.சண்டை வந்தவுடன் சைரஸ் மிஸ்திரி, டாட்டா பாரம்பரியத்தில் வராதவர் என்று ரத்தன் டாட்டா தரப்பு கைகழுவுகிறது. டாட்டா குழும வரலாற்றில் இரண்டு முறைதான் வெளியாள் தலைமை இருந்துள்ளதாம். 1932 லிருந்து 1938 வரை இருந்த சர் நௌரோஜி சக்லத்வாலா. அதற்குப் பிறகு மிஸ்திரிதான்.

இது தேசப் பிரச்சனையா?

ஆர்.பி.ஜி குழும சி.இ.ஓ ஹர்ஷ் கோயங்காவின் கமெண்ட் இது.“ சைரஸ் மிஸ்திரியின் வெளியேற்றம் கார்ப்பரேட் உலகத்தின் வேர்களையே அசைத்திருக்கிறது. ரத்தன் டாட்டா இந்தக் கவிழ்ப்பை செய்வதற்கு ஏதாவது காரணம் இருக்கும். ஆனாலும் மதிப்புமிக்க ஓர் தொழில் குழுமத்தின் இந்நிகழ்வுகள் தேசத்திற்கு நல்லதல்ல”. இந்தியத் தொழிலதிபர்களுக்கு ஆபத்து என்றால் அவர்கள் தேசத்திற்கு ஆபத்து என்று கூவ ஆரம்பித்து விடுவார்கள். உண்மையில் தேசத்திற்கா ஆபத்து? இவர்களை நம்பி டாட்டா குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பவர்களின் கதி என்ன? என்றுதானே ஹர்ஷ் கோயங்கா கண்ணீர் சிந்தியிருக்கவேண்டும்.

டாட்டா குழுமத்தின் இன்றைய சந்தை மூலதனம் எட்டரை லட்சம் கோடி ரூபாய். இதில் முதலீடு செய்திருப்பவர்கள் 41 லட்சம் பேராம். என்ன ஜனநாயகம் பாருங்கள் ? இவ்வளவு லட்சம் பேர் பணத்தை வைத்து தொழில் பண்ணிவிட்டு இவ்வளவு பெரிய முடிவை இவ்வளவு சாதாரணமாக எடுக்கிறார்கள். கேட்டால் இயக்குநரவை ஒப்புதல் கொடுத்தது என்பார்கள். ஆனால் முதலீட்டாளர்களின் மனநிலையை பங்குச் சந்தை காட்டிக் கொடுத்துவிட்டது. டாட்டா மோட்டார்ஸ், டாட்டா காபி, டாட்டா ஸ்டீல் , டாட்டா பீவரேஜஸ், டாட்டா ஸ்பான்ஜ் அயர்ன் ... என டாட்டா குழுமத்தின் எல்லா நிறுவனங்களின் பங்கு விலைகளும் மூன்று நாட்களாக விழுந்தவண்ணம் உள்ளன.

மிஸ்திரி போட்ட டபிள் ஷாட் 

மிஸ்திரி போட்ட பதில் குண்டுதான் பங்குச் சந்தை சரிவுக்கு காரணம். அது டாட்டாவின் நம்பகத் தன்மைக்கு ஒரு வேட்டு , பங்குச் சந்தை மதிப்பிற்கு இன்னொரு வேட்டு என்று முதலீட்டாளர்களின் செவிப்பறையில் எதிரொலித்துவிட்டது. ரூ.1,08,000 கோடி மதிப்புள்ள தொகையை சில காலங்களுக்குள்ளாக ஈடுகட்ட வேண்டிய நெருக்கடி டாட்டா குழுமத்தின் ஐந்து நிறுவனங்களுக்கு ஏற்படும் என்று அவர் வெளியிட்ட தகவலே அது. எவ்வளவு தொகை பாருங்கள்! லட்சம் லட்சம் கோடிகள் எப்படி கணக்குகளுக்குள் பதுங்குகின்றன என்பது இப்படி உள்குத்து வரும்போதுதான் கொஞ்சமாவது வெளியே வருகிறது. 

இதற்குள் இரண்டு கட்சிகளாக நிறுவன உலகம் பிரிந்து யார் திறமையானவர் என்று பட்டிமன்றம் நடத்துகின்றன. 1991 லிருந்து 2012 வரை ரத்தன் டாட்டா தலைவராக இருந்தார். அவர் பதவி ஏற்கும் போது ரூ. 8000 கோடிகளாக இருந்த டாட்டா குழுமத்தின் சந்தை மூலதனம் 2012 ல் ரூ. 4.62 லட்சம் கோடிகளாக உயர்ந்தது. இது 57 மடங்குகளாம். மிஸ்திரி காலத்தில் (2012- 2016) 4.62 லட்சத்தில் இருந்து 8.5 லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. இது இரண்டு மடங்குதானாம். இவர்கள் தரும் தகவல்கள் எல்லாம் யார் திறமையானவர்கள் என்று நமக்கு நிரூபிக்கிறதோ இல்லையோ எவ்வளவு லாபம் இவர்களுக்கு கொழிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காண்பிக்கிறது. 

இது எங்க டயலாக்குடா !

டாட்டா மிஸ்திரி திரியில் வைக்கிற நெருப்பு வெடிக்காது... அது புஸ் ஆகிவிடும் என்று ரத்தன் டாட்டா தரப்பு சொல்கிறது. டாட்டா மோட்டார்ஸ் உள்பட 5 நிறுவனங்களின் கணக்குகள் ஸ்கேனருக்குள் வரலாம் என்ற செய்திகள் மிஸ்திரி தரப்பில் உலவவிடப்படுகின்றன. டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் 18 சதவீத பங்குகள் மட்டுமே மிஸ்திரிக்கு இருப்பதால் சமாளித்துவிடுவோம் என்கிறது முதல் தரப்பு. பிரச்சனையை கிளப்ப அவ்வளவு பங்குகள் போதாதா என்று தொடையைத் தட்டுகிறது இரண்டாவது தரப்பு. நாங்கள் சட்டப் போராட்டத்திற்கு தயாராகிவிட்டோம், கரஞ்சன்வாலா & கோ மற்றும் சர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் சட்ட நிறுவனங்களை அமர்த்திவிட்டோம் என்று கொக்கரிக்கிறது ரத்தன் முகாம். 

ஆனால் நிறுவன விதிகளின் அமலாக்கம் சட்டத்தின் முன் செல்லுபடியாகாது என்கிறது மிஸ்திரி முகாம். இதில் யார் கடைசியில் ஏமாறப்போகிறார்கள் ? என்று வணிக ஊடகங்கள் பரபரப்பான திரைக்கதையை நகர்த்த ஆரம்பித்து விட்டன. வழக்கம் போல உயர் நடுத்தர வர்க்கமும் நிறுவன ஒழுங்கு பற்றிய நளினமான விவாதங்களை நுனி நாக்கு ஆங்கிலத்தில் குளு குளு ஓட்டல் அறைகளின் நுரை பொங்கும் பானங்களின் மயக்கத்தோடு பேசிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் லாபத்திற்கு இரையான கோடானு கோடி நுகர்வோரும், அப்பாவி முதலீட்டாளர்களும் “இது எங்க டயலாக்குடா!” என்று சொல்வது காதில் விழவா போகிறது?

நன்றி தீக்கதிர் 29.10.2016

No comments:

Post a Comment