Friday, April 1, 2016

இன்றல்ல, நேற்றே முட்டாள்கள் தினம்




இந்திய ஜனநாயகத்தை முட்டாளாக்கியுள்ள மோடி அரசின் அராஜகம் பற்றிய தீக்கதிர் செய்தியை படியுங்கள்

பட்ஜெட் கூட்டத் தொடர் அராஜகமாக ஒத்திவைப்பு
 
புதுதில்லி, மார்ச் 31-
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், அடுத்தஅமர்வுக்குச் செல்லாமலே, மத்திய அரசால் திடீரென்று தன்னிச்சையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதனன்று இரவு கூடிய மத்தியஅமைச்சரவைக் குழு எடுத்த முடிவினை ஒட்டி இவ்வாறு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.தற்போது பிரதமர் மோடி பிரஸ்ஸல்ஸில் இருப்பதால், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய அமைச்சரவை இதற்கான முடிவினை எடுத்துள்ளது.இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இத் தகவலைத் தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநில சட்டமன்றம் பட்ஜெட்டை நிறைவேற்றவில்லை. நிதியாண்டு மார்ச் 31உடன் முடிவிற்கு வரவிருப்பதாலும், தற்போது அம்மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெறுவதாலும் அவசரச் சட்டம் பிறப்பித்துத்தான் அதனை நிறைவேற்றிட முடியும். நாடாளுமன்றத்தின் பட்ஜெட்கூட்டத்தொடருக்கு இடைவேளைதான் விடப்பட்டிருந்தது. 

அது மீண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி கூடி மே 13ம் தேதிவரை நடைபெறுவதாக இருந்தது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சட்டப்படி ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க முடியாது. எனவே,நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒத்தி வைத்திட அமைச்சரவை, மக்களவை சபாநாயகரைக் கோர, அதன் அடிப்படையில் அவர்மக்களவையின் பட்ஜெட் கூட்டத் தொடரை ஒத்தி வைத்தார்.அதைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவரும் பட்ஜெட் கூட்டத்தொடரை ஒத்தி வைத்தார். 

அதன் பிறகு, இரு அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநில பட்ஜெட்டை நிறைவேற்றும் விதத்தில் ஓர் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் உத்தர்கண்ட் மாநில அரசு தன் செலவினங்களை ஏப்ரல் 1க்குப்பின்னரும் மேற்கொள்ள முடியும். 40 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்துவந்த, எதிரி சொத்து சட்டமுன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் தற்போது நிலுவையில் உள்ளது. மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்படுவதால் அச்சட்டமுன்வடிவு ஏப்ரல் முதல்வாரத்தில் காலாவதியாகிவிடும். எனவே அது தொடர்பாக மீண்டும் ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேற்குவங்க, கேரள, தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், “மார்ச் மாதத்திலேயே பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்துக்கொள்ளுங்கள், எங்கள் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியநிலையிலிருக்கிறோம்,’’ என்று மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 

அப்போதெல்லாம் மறுத்துவந்த மத்திய அரசு இப்போது உத்தரகாண்ட் அரசை தான்தோன்றித்தனமாக கலைத்துவிட்டு, சட்ட நெருக்கடியில் சிக்கிக்கொண்டதன் பின்னணியில் பட்ஜெட் கூட்டத்தொடரை ஒத்தி வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment