Tuesday, April 26, 2016

ஜெ போலவே அன்றோர் ராஜீவ் பொதுக்கூட்டத்தில்


மண்டையைப் பிளக்கும் வெயில் வேளையில் நடைபெறுகின்ற ஜெயலலிதாவின் பொதுக்கூட்டங்களில் மக்கள் மாண்டு போவதும் வெயில் தாளாமல் மயக்கமுற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படுவதும் தொடர்கதையாகி விட்டது. ஆனாலும் அம்மையாரின் பிரச்சாரத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. எவன் இருந்தால் என்ன, செத்தால் என்ன  என்ற அலட்சியத்தோடே அந்த அம்மையார் செயல்பட்டு வருகின்றார்.

ஜெயலலிதா கூட்டங்களில் மக்கள் என்ன அவதிப்படுவார்கள் என்று என்னால் யூகிக்க முடியும். ஏனென்றால் அப்படிப்பட்ட மோசமான அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. அது ராஜீவ் காந்தியின் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கிடைத்தது.

இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் ராஜீவ் காந்தி பிரதமராகிறார். தன் அன்னையின் மரணத்தால் கிடைத்த அனுதாபத்தை அறுவடை செய்ய மக்களவையைக் கலைத்து விட்டு தேர்தலைச் சந்திக்கிறார்.

எங்கள் குடும்பம் அப்போது நெய்வேலியில் இருந்தது. நான் மதுரையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தேர்தல் நேரம் கல்லூரிக்கு செமஸ்டர் விடுமுறை. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நெய்வேலிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள ராஜீவ் காந்தி வருகிறார்.

அவசரநிலைக்காலம் தொடங்கியே அரசியலில் ஆர்வம் இருந்தாலும் எந்த கட்சிக்கும் ஆதரவான நிலை என்பது அப்போது கிடையாது. அப்போது வாக்களிக்கும் வயது இருபத்தி ஒன்று. அதனால் வாக்கு கிடையாது. ஆனாலும் ராஜீவ் காந்தியின் பொதுக்கூட்டத்தைப் பார்க்கப் போனேன்.

இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங் என மூன்று பிரதமர்களை பார்த்துள்ளேன் என்று கல்லூரியில் பந்தா செய்வது உண்டு. அந்த பட்டியலில் இன்னும் ஒருவரை சேர்த்துக் கொள்வதுதான் முக்கியமான நோக்கமே.

மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு திரை அரங்கிற்குப் பக்கத்தில் (சுரேஷ்குமார் பேலஸோ, சண்முகா பேலஸோ அல்லது சந்தோஷ்குமார் பேலஸோ, சட்டென்று நினைவிற்கு வரவில்லை) கூட்டம் என்று சொன்னார்கள். ஆனால் அங்கே போனால் வேறு இடத்தை கைகாட்டினார்கள். சைக்கிளில் போகிறேன், போகிறேன், போய்க் கொண்டே இருக்கிறேன். மிகக் கடுமையான உச்சி வெயில் எதிர்காற்றில் சைக்கிளை என்ன மிதித்தாலும் பொதுக்கூட்ட மைதானம் வரவேயில்லை.

வானில் ஒரு ஹெலிகாப்டர் பறக்க, இன்னும் வேகமாய் மிதித்துச் செல்கிறேன். ஒரு வழியாய் மைதானத்திற்கு வந்து விட்டேன். சைக்கிளை நிறுத்தியதும் அப்படியே சுருண்டு விழுந்து விட்டேன். சிறிது நேரம் அப்படியே தரையில் படுத்துக் கொண்டு விட்டு, ஒரு சிண்டெக்ஸ் டாங்கில் தண்ணீர் இருந்தது. கைகளில் ஏந்தி அந்த தண்ணீரைக் குடித்து விட்டு மேடையைப் பார்த்தால் அங்கே ராஜீவ் காந்தி இல்லை. வந்தது செக்யூரிட்டி ஹெலிகாப்டர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்தே ராஜீவ் காந்தி வந்தார். அவரது உரை அப்படியொன்றும் ஈர்க்கவில்லை என்பது வேறு விஷயம்.

மீண்டும் வெயிலில் சைக்கிளை லொங்கு லொங்கு என்று மிதித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அப்படியே படுத்துக் கொண்டவனால் சாப்பிடக் கூட எழுந்து கொள்ள முடியவில்லை. வெயிலில் பட்ட அந்த அவஸ்தை பின்பு காய்ச்சலாக மாறியது. மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் இரண்டு நாட்கள் காண்பித்தும் குணமாகவில்லை. டைபாய்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி அவர் என்.எல்.சி பொது மருத்துவமனைக்குப் போகச் சொல்லி விட்டார்.

அங்கே அது டைபாய்ட்தான் என்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில தினங்கள் அங்கே இருக்க வேண்டியிருந்தது. அங்கே கிடைத்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை முன்பே எழுதியுள்ளேன். அந்த அனுபவம் என்னவென்று அறிய இங்கே செல்லுங்கள் 

அப்போது இள வயது என்பதால் டைபாய்டோடு முடிந்து போனது. இதுவே ஏற்கனவே உடல் உபாதை உள்ள வயதானவர்களாக இருந்தால் கண்டிப்பாக வாக்காளர் எண்ணிக்கை குறையும் நிலைதான் ஏற்பட்டிருக்கும்.

இப்போது வெயிலின் நிலைமை இன்னும் மோசம்.

ஆனால் மோசமான வெயிலில் மக்களைக் காக்க வைக்கும் அலட்சியம் மட்டும் தொடர்கிறது.

இப்படிப்பட்ட கூட்டங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

4 comments:

 1. siru vayadhil
  ungalukku irundha aarvam
  ippothu
  innorvarukku vandhaal
  thavaara

  ReplyDelete
  Replies
  1. நான் பட்ட அவதி மற்றவர் பட வேண்டாம் என்ற உணர்வை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

   Delete
  2. மக்கள வெயிலில் அலைகழித்த ஜெயாவை கடவுளே அலைகழித்து விட்டார்

   Delete
 2. Good sharing.Hope people will follow your advice

  ReplyDelete