Wednesday, April 20, 2016

முதலைக் கண்ணீரை “நிறுத்துங்க டே”

திண்டுக்கல் தொகுதியில் தோழர் கே.பாலபாரதி அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை என்று வருந்தி பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருக்கு இரண்டு முறைதான் வாய்ப்பளிப்பது என்பது கட்சியின் விதி. மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில் மத்தியக்குழு விவாதித்து இந்த விதியை மாற்றியுள்ளது. அப்படி விவாதிக்கப்பட்டே தோழர் பாலபாரதி அவர்களுக்கு மூன்றாவது முறை வாய்ப்பளிக்கப்பட்டது.

இதனை பல தோழர்கள் விளக்கமாக சொல்லி விட்டார்கள். தோழர் பாலபாரதி அவர்களே “நிறுத்தங்க டே” என்றும் கடுமையாகச் சொல்லி விட்டார்.


ஆனாலும் பலர் இன்னும் பல புதிய வியாக்யனங்களை அளித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அப்படி திடீரென்று மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பாசம் பீறிட்டு எழுதுபவர்கள் யாரென்று ஆராய்ந்து பார்த்தால்

அவர்களெல்லாம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கான போராட்டங்களை நடத்தும் போது அதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.

ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது “இவர்களுக்கு வேறு பிழைப்பில்லை” என்று அலட்சியமாக கடந்து போவார்கள்.

நேர்மையான முதல்வர்கள், எளிமையான தலைவர்கள் என்று யாராவது பதிவிட்டால் அதை கண்டு கொள்ளாமலே போவதை கடமையாகக் கொள்வார்கள்.

உலகமயமாக்கல் கொள்கைகள் எப்படி தேசத்தை சீரழிக்கிறது என்று விவரித்து பக்கம் பக்கமாக எழுதினால் அதை புறக்கணிப்பதில் புளகாகிங்கிதம் அடைவார்கள்.

மதவெறிக் கூட்டத்தை அம்பலப்படுத்திகிறபோது பாராமுகமாய் இருப்பார்கள்.

நிதி தாருங்கள் என்று உண்டியலோடு முன் வந்தால் எச்சில் கையால் காக்கை ஓட்டாத கஞ்சர்களாய் ஒளிந்து கொள்வார்கள்.

நீங்கள் தனியாய் நின்றால் ஆதரிப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு மக்களவைத் தேர்தலின் போதும் ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் தனியாய் நின்ற போது தலை மறைவானார்கள்.

என்றே உள்ளார்கள்.

“முன்னாள் வேட்பாளர்கள்” என்ற புதிய இனத்தை அம்மையார் உருவாக்கியுள்ளது பற்றியோ ஐயா அறிவித்த வேட்பாளர்களுக்கு கிடைத்த அடி, உதை பற்றியோ, கொடும்பாவி எரிப்புக்களைப் பற்றியோ இவர்களெல்லாம் எழுதி உட்கட்சி ஜனநாயகத்தை அங்கேயெல்லாம் நிலைநாட்ட துரும்பைக் கூட நகர்த்தாதவர்கள் என்பது நாங்கள் அறிந்ததே.

கம்யூனிஸ்டுகளின் இருப்பை முதலாளிகள் விரும்பாததில் எந்த வியப்பும் கிடையாது. ஆனால் இன்று கம்யூனிஸ்டுகளுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பவர்களின் உள் மனதிலும் ஒளிந்திருப்பது அந்த விருப்பமே என்பதை நாங்கள் அறியாமல் இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறை சொல்வதற்கெனவே அவதாரம் எடுத்தவர்களும் கூட முதலைக்கண்ணீர் வடிக்கும் கூட்டத்தில் உண்டு.

அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்ள விரும்புவது இதைத்தான்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் ஜனநாயகபூர்வமாக விவாதிக்கப்பட்டே முடிவு செய்யப்பட்டவர்கள். அனைவருமே போராட்டங்கள் மூலமாக புடம் போடப்பட்டவர்கள்.   இவர்களில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் தங்கள் பணியை செம்மையாக நிறைவேற்றுவார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதான உங்களது அக்கறை நிஜமென்றால் உங்கள் தொகுதியில் போட்டியிடக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கோ அல்லது கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளருக்கோ வாக்களியுங்கள்.

அது உங்களுக்கு சாத்தியமில்லையென்றால் எங்களுக்காக உருகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

போலித்தனமான உங்களின் முதலைக்கண்ணீர் எங்களுக்கு அவசியமில்லை. எங்கள் கவனத்தை தேர்தல் பணியிலிருந்து திசை திருப்பி எங்களின் நேரத்தை விரயமாக்குவதுதான் உங்களின் திட்டம் என்பதும் எங்களுக்கு புரிந்துதான் இருக்கிறது.3 comments:

 1. Did not know communist party had term limit. Should have that for CM too. Every party should follow that.

  ReplyDelete
 2. உங்கள் கட்சியை விடுங்கள்.இந்திய கம்யுனிஸ்ட் கட்சியில்
  நாடறிந்த கொலைகாரன்,கொள்ளைக்காரன், தளி ராமச்சந்திரனுக்கு
  மீண்டும் வாய்ப்பு கொடுத்திருப்பது பற்றிய உங்கள் கருத்தை
  அறிய ஆவலாய் உள்ளேன்.ஒரே கூட்டணியில் இருப்பதால்.

  ReplyDelete
  Replies
  1. தவறு. கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்திலேயே மிக விரிவாக எழுதி இருக்கிறேன்.

   Delete