Tuesday, April 5, 2016

இன்னும் உடைக்கப்பட வேண்டிய சுவர்கள்


என்னை எளிமையானவன் என்று தலைமையுரையில் பேசும் போது தோழர் சொன்னார். நான் மாணவராக இருந்த போதும், வழக்கறிஞராக இருந்த போதும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தோடு இணைந்து பல பணிகள் செய்துள்ளேன். அங்கே கிடைத்த பயிற்சிதான் இது. என்னை உங்கள் சென்னைக் கோட்டத்தின் கௌரவ உறுப்பினராக இருபத்தி ஐந்து ஆண்டுகள் தேர்ந்தெடுத்துள்ளனர். அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம்.

வெண்மணி கொடுமையைப் பற்றி உள்ளூர் ஊடகங்கள் மிகச் சாதாரணமான அளவில் செய்தி வெளியிட்ட போது வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் பெரிய அளவில் வெளியிட்டன. அதுதான் இந்திய ஊடகங்களின் குணாம்சமாக உள்ளது. இருபது சதவிகித மக்களுக்கு ஜனநாயகத்தில் எந்த மதிப்பும் இல்லாமல் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். பிரச்சினை நடக்கும் போது நமக்கு ஏன் வம்பு என முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறவர்களாக பெரும்பான்மை மக்கள் இருக்கிற நிலைமைதான் இன்று உள்ளது.

குஜராத்தில் பர்திவாலா என்ற உயர்நீதி மன்ற நீதிபதி இட ஒதுக்கீடுதான் இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படைக்காரணம். ஆகவே இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு தீர்ப்பில் எழுதுகிறார். அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் ஒவ்வொரு நீதிபதியும் பதவியேற்கிறார். அப்படி இருக்கையில் அவருக்கு என்ன குழப்பம் என்று தெரியவில்லை. இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காகவே அரசியல் சாசனம் முதல் முறையாக திருத்தப்பட்டது. அதற்கான அவசியமும் கூட தமிழகத்திலிருந்துதான் எழுந்தது. அந்த நீதிபதி மீது கடுமையான கண்டனங்கள் எழுந்தது. அவரை பதவி நீக்கம் செய்வதற்கான மனுவில் நாற்பத்தி மூன்று எம்.பிக்கள் கையெழுத்திட்ட நிலையில் அவர் தனது தீர்ப்பிலிருந்து அந்த கருத்தை அகற்றி விட்டார். மக்கள் சக்தியின் வலிமை இது.

கல்லூரிகள்தான் விவாதத்திற்கான களம். ஆனால் அவசர நிலைக் காலம் போன்ற சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. “பேசாப் பொருளை பேசத் துணிகிற போது” அதை தடுக்க முயல்வது என்ன நியாயம்? 207 அடியில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் கொடிக்கம்பம் அமைக்க வேண்டும் என்று ஒரு அம்மையார் சொல்கிறார். கொடிக்கம்பத்தின் மூலம் தேச பக்தியை நிர்ணயம் செய்ய முடியாது என்பதை அவர் உணர வேண்டும்.

வியட்னாமை விட்டு வெளியேறு என்ற கோரிக்கையோடு அமெரிக்க மாணவர்கள் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமித்தார்கள். அங்கே கட்டாய ராணுவப் பணி என்ற சட்டம் இருந்தாலும் அதற்கு கட்டுப்பட மாட்டோம் என்று உறுதியாகச் சொன்னார்கள். மாணவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ராணுவம் என்பது மக்களாட்சிக்கு உட்பட்டதுதான் என்ற அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

ஜே.என்.யு மாணவர்கள் மீது அவர்களுக்கு என்ன அச்சம்? எந்த ஒரு அநீதிக்கும் எதிராகவும் ஜே.என்.யு மாணவர்கள் போராடுவார்கள். சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் தடை செய்யப்பட்டதற்கு எதிராக அவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவன் முன்பாக போராடினார்கள். ஒரு கண்ணையா குமார் அல்ல. ஆயிரம் கண்ணையா குமார்கள் அங்கே, டெல்லியில் இருப்பதுதான் அவர்கள் பிரச்சினை. உலகின் பல புரட்சியாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு கறுப்புச்சட்டம். அரசியல் எதிரிகளை பழி வாங்கவே இன்னும் நீடிக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த இடத்திற்கு அவரது பிறந்தநாளன்று போவதாக மோடி அறிவித்துள்ளார். சில முதலாளித்துவவாதிகள் காரல் மார்க்ஸை வானளாவ புகழ்ந்த போது “மார்க்ஸின் கருத்துக்களை புதைப்பதற்காகவே அவரை கையிலெடுத்துள்ளார்கள்” என்று லெனின் குறிப்பிட்டார். அது போலவே அம்பேத்கர் கருத்துக்களை புதைப்பதற்காகவே மோடி அவரை கையிலெடுத்துள்ளார்.

மோடி செல்ல வேண்டிய இடம் நாக்பூர். ஆ.ர்.எஸ்.எஸ் தலைமையகம் உள்ள நாக்பூரில்தான் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தீகஷா பூமியும் உள்ளது. அண்ணல் இந்து மதத்தை விட்டு ஏன் வெளியேறினார் என்பதை அங்கே போய் அவர் அறிந்து கொள்ளட்டும். அவருக்கு பலகோடி ரூபாய் மதிப்பில் நினைவுச்சின்னம் வைப்பது போன்றவற்றை விடுத்து அவரது புத்தகங்களை, கருத்துக்களை பரப்புகிற பணியைச் செய்யட்டும்.

அவர் எழுதியவற்றை நாம் வாசிக்க வேண்டும். மறு வாசிப்பு செய்ய வேண்டும். அரசியல் சாசனத்தின் முகப்பில் உள்ள சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து கையாண்டதாக சிலர் குறிப்பிட்ட போது அவற்றை தான் புத்தரின் போதனைகளிலிருந்துதான் படித்ததாக அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டார்.

ஜாதி ஆணவக் கொலைகள் இன்று அதிகரித்து வருகிறது. உடுமலைப்பேட்டை கொலை நடந்ததும் முக நூலில் அதனை போற்றி பல பதிவுகள் வந்ததும் அதனை பலர் பகிர்ந்ததும் அதற்கு பலர் விருப்பம் தெரிவித்ததும் நடந்தது. நீங்கள் கண்டனம் தெரிவித்தால் சிலர் அவற்றை அகற்றுவார்கள். ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டாம் என்று ஆட்சியாளர்கள் தெரிவித்தால் அவை தொடரட்டும் என அவர்கள் விரும்புவதாகத்தான் அர்த்தம். ஜாதி ஆணவக்கொலைகளுக்கு மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளருமே பொறுப்பு. அப்படி அவர்கள் செய்யத் தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து அவை அனைத்து மாநில அரசுகளுக்கும் மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அலட்சியப் போக்கு தொடர்கிறது.

உடைக்கப்பட்ட உத்தப்புரம் தீண்டாமைச் சுவரிலிருந்து இரண்டு செங்கற்களை நான் எடுத்து வந்து பத்திரமாக வைத்துள்ளேன். உடைக்கப்பட வேண்டிய சுவர்கள் பல இன்னும் உள்ளது. தீண்டாமைச் சுவர்கள் மட்டுமல்ல. மனச்சுவர்களும் கூட.

மதம் ஒழியாமல் சாத்திரங்கள் ஒழியாது.
சாத்திரங்கள் ஒழியாமல் ஜாதி ஒழியாது.
ஜாதி ஒழியாமல் தீண்டாமை ஒழியாது.

பொதுத்துறை நிறுவனங்கள் இல்லையென்றால் இட ஒதுக்கீடு பறி போய் விடும். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க நீங்கள் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு.

02.04.2016 அன்று தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் 125 வது பிறந்தநாள்  தமிழ்மாநில சிறப்புக்கருத்தரங்கில் நீதியரசர் கே.சந்துரு அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.

கீழேயுள்ள படத்தில் உள்ள வேலூர் கோட்டத்திலிருந்து பங்கேற்ற தோழர்கள்

 

7 comments:

 1. ரிஷபராஜ் ராஜேந்திராApril 6, 2016 at 7:30 AM

  ஜே.என்.யு மாணவர்களுக்காக போராடும் நீங்கள் , அதற்காக அமெரிக்க மாணவர்களை சாட்சிக்கும் அழைக்கும் தாங்கள் உங்கள் புண்ணிய பூமி ( கம்யூனிஸ்ட் ) சீனாவில் தினமென் சதுக்கத்தில் சீன அரசால் படுகொலை செய்யபப்ட்ட மாணவர்கள் பற்றி பேச மறுப்பது ஏன்? அப்படி பேசினாலும் நியாயப்படுத்தத்தான் போகின்றீர்கள் ... ஹஹஹஹா
  .
  ரிஷபராஜ் ராஜேந்திரா
  ( உங்கள் கலாச்சார படி என்னை காவி , பார்ப்பன அடிமை என்றேல்லாம வசை பாட வேண்டாம் ... நான் இந்தியன் அல்ல )

  ReplyDelete
  Replies
  1. எழுதப்பட்ட விஷயத்திற்கு பதிலாக வேறு எதையாவது எழுதுவதே பலருக்கும் வழக்கமாகி விட்டது. காவி என்பது கெட்ட வார்த்தை என ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

   Delete
  2. நான் கேட்ட கேள்விக்கு உங்களால் நேர்மையாக பதில் சொல்ல முடியாது
   .
   தினமன் சதுக்கத்தில் மாணவர்களை படுகொலை செய்த சீன கம்யூனிச அரசை கண்டிக்க முன்வராத , அந்த படுகொலைகளை நியாயப்படுத்துகின்ற இந்திய கம்யூனிச போராளிகளுக்கு இந்திய அரசின் மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டிக்க அருகதை இல்லை
   .
   சீன கொலைகளை கண்டிக்க நீங்கள் தயாராக இருந்தால் இதையும் கண்டியுங்கள்

   ரிஷபராஜ் ராஜேந்திரா

   Delete
  3. தியாமென் சதுக்கத்து நிகழ்வுகள் தவிர்த்திருக்கப்பட வேண்டிய ஒன்று. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிக்கு அவர்கள் இரையானார்க்ள் என்பதையும் சொல்லுங்களேன்

   Delete
  4. தியாமேன் சதுக்க மாணவர்களை அமெரிக்க கைப்பாவைகள் என்று நீங்கள் சொல்வதற்க்கும்
   .
   நேரு பல்கலைகழக மாணவர்களை பாகிஸ்தான் கைப்பாவைகள் என்று பாஜக சொல்வதற்க்கும் 1% கூட வித்தியாசம் இல்லை
   .
   "தவிர்த்திருக்கப்பட வேண்டிய ஒன்று"
   .
   எவ்வளவு கொடூரமான படுகொலையை கூட மென்மையாக சொல்ல கம்யூனிஸ்ட் களால் மட்டும் தான் முடியும்

   Delete
 2. இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தோடு இணைந்திருந்த மேலும் பல பணிகள் செய்ய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
  //அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிக்கு அவர்கள் இரையானார்க்ள்//
  தியனன்மென் சதுக்கத்தில் சீன அரசால் பலி எடுக்கபட்ட சீன மக்கள்,மாணவர்கள் தங்கள் நாட்டில் ஜனநாயக அமைப்பு முறை வேண்டும்,அரசியல் அமைப்பை திருத்தும் படியும் வேண்டி போராடிய நிராயுதபாணிகள். அவர்கள் யுத்தம் செய்வதிற்காக ஆயுதங்கள், குண்டுகள் வைத்திருந்த பயங்கரவாத அமைப்போ, அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபட்ட பயங்கரவாத அமைப்போ கிடையாது.

  ReplyDelete
 3. யார் விட்ட குசு அதிகமாக நாறுகிறது என்பதா பேச்சு? ஜே ன் யூவில் நடக்கும் அடக்குமுறை நாடெங்கும் நாறத்தானே செய்கிறது. இதற்கு வெட்கப்படுவதைவிட்டுவிட்டு... அசிங்கம்! கெட்டதை செய்வதும் அதை நியாயப்படுத்துவதும் நாகரீக மனிதர்களுக்கு அழகல்ல! சைனாவில் தியன்மனில் நடந்தது நியாயப்படுத்த முடியாது. இன்று அரசாங்கம் நடக்கும் விதமும் நியாயப்படுத்த முடியாது. சங்கடமாக இருக்கிறது. ஜனங்கள் மத்தியில் மதத்தை மையமாக வைத்தும் வெறுப்பை வளர்ப்பதே அரசாங்கத்தின் கொள்கை எனறால்... இது என்ன நாடா?

  ReplyDelete