Friday, April 15, 2016

போகையில் மூன்று, வருகையில் ஒன்று





கடந்த புதன் கிழமை விழுப்புரத்திற்கு முன்பாக இருக்கிற ஒரு கிராமத்திற்கு ஒரு தோழரது தாயார் மறைவிற்காக செல்ல வேண்டியிருந்தது.

வெயிலும் மோசமான சாலைகளும் பயணத்திற்கான வழக்கமான இடையூறு என்றால் தேர்தல் கால புதிய இடையூறு பறக்கும் படை. “குதிரைகள் ஓடிப்போன பின்பு லாயங்களை பூட்டுவது” என்ற சொல் இவர்களுக்குத்தான் பொருந்தும். முதலாளித்துவக் கட்சிகள் சேர்க்க வேண்டியதை எப்போதோ சேர்த்திருப்பார்கள். இவர்கள் இப்போது சோதனை செய்து கொண்டு அவர்களின் நேரத்தையும் நமது நேரத்தையும் சேர்த்தே விரயம் செய்கிறார்கள்.

ஆரணி தாண்டும் வரை எந்த சோதனையும் இல்லை. அதன் பின்பு முதலில் ஒரு இடத்தில் சோதனை போட்டார்கள். மெட்டல் டிடெக்டர் வைக்காத குறையாக அப்படி ஒரு சோதனை. பாவம் ஒரு மலர் மாலையைத் தவிர வேறு எதுவும் இல்லாததால் அதையே வீடியோவில் படம் பிடித்துக் கொண்டார்கள்.  ஒரு ஐந்து கிலோ மீட்டர் கடந்திருப்போம். அடுத்த “நிற்கும் படை” (ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பவர்களை எப்படி பறக்கும் படை என்று சொல்ல முடியும்? வழி மறித்தது.

“ஐந்து கிலோ மீட்டர் முன்பாகத்தான் சோதித்தார்கள். மறுபடியுமா? வாகனம் சோதனை செய்யப்பட்டது என்று ஒரு ஸ்டிக்கர் ஒட்டி விட்டால் உங்களுக்கும் வேலை மிச்சம். எங்களுக்கும் நேரம் மிச்சம்” என்றேன். ஸ்டிக்கர் ஒட்டுங்கள் என்பதிலிருந்த கிண்டலை அந்த போலீஸ்காரர் புரிந்து கொண்டு விட்டார்.

“ஸ்டிக்கர் ஒட்டின பிறகு நீங்கள் பணத்தை கொண்டு போனால் என்ன செய்வது?” என்று கடமை தவறாதவராக எதிர்க் கேள்வி கேட்டார்.

நாங்கள் செல்ல வேண்டிய கிராமத்துக்கு செல்லும் வழிக்கு முன்பாக இன்னொரு சோதனை. நாங்கள் அஞ்சலி செலுத்தி விட்டு வரும் போது அதே இடத்தில் மீண்டும் நிறுத்தினார்கள்.

“ஏன் சார் கொஞ்ச நேரம் முன்னாடி போற போதுதான் செக் பண்ணீங்க. இப்ப வரும்போதும் செக் பண்றீங்களே” என்று கேட்டேன்.

“திரும்பி வரும் போது பணத்தை எடுத்துட்டு வந்திருந்தீங்கனா” என்று அவர் கேட்க காரில் உள்ள எல்லோரும் சிரித்து விட்டோம்.

ஏனென்றால் முந்தைய நிமிடத்தில்தான் அவர்களிடமிருந்து இந்த பதில்தான் வரும் என்று சொல்லியிருந்தேன். அந்த போலீஸ்காரரும் சிரிப்பை அடக்க சிரமப்பட்டார்.

மற்ற இரண்டு “நிற்கும் படைகள்” இடத்தை காலி செய்திருந்தார்கள். அவர்கள் வேலை நேரம் முடிந்திருக்கலாம் அல்லது முக்கியக் கட்சிகளின் பணம் வரலாம் என்று தகவல் கிடைத்து வழி விட்டிருக்கலாம்.

எப்படியோ இன்னும் ஒரு மாத காலம் சாதாரண பயணிகளுக்கு அவஸ்தைதான்.

பின் குறிப்பு 1 : நாடாளுமன்றத் தேர்தலில் “நிற்கும் படை”  பெற்ற “பல்பை” அறிய இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்.

பின் குறிப்பு 2 : மேலே உள்ள படம் இணையத்திலிருந்து சுட்டது. எங்கள் வாகன சோதனையின் போதல்ல. 

2 comments:

  1. தாங்கள் கூறுவதுபோல சாதாரண பயணிகளுக்கு சிரமம்தான்.

    ReplyDelete
  2. //வாகனம் சோதனை செய்யப்பட்டது என்று ஒரு ஸ்டிக்கர் ஒட்டி விட்டால் உங்களுக்கும் வேலை மிச்சம். எங்களுக்கும் நேரம் மிச்சம்” என்றேன்.//
    வாய்விட்டு சிரித்தேன்.

    நீங்க ஒரு அப்பாவி தான்.ஆனா உங்க மக்கள் நலக்கூட்டணியின் பல்லாவரம் வேட்பாளர், தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர், வீர தமிழச்சி வீரலட்சுமி.ஆகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் முக்கியமானது.

    ReplyDelete