Thursday, March 31, 2016

உத்தமரானார் குமாரசாமி




பாறைகளிடையே செடிகள் துளிர்க்கும்.
இது இயற்கையின் விளையாட்டு.

பதுக்கிய பாறைகள்
நீதியை அசைக்கும்
நிதியின் விளையாட்டு இது.

ஒரு பிடி ஊழல் சோற்றில்
பூசணிகள் அல்ல,
கிரானைட் மலைகளே
மறைந்து போகும்.

நரபலிக் கறையை
காந்தி நோட்டுக்கள்
சுத்தம் செய்யும்.

ஆள்பவரும் ஆண்டவரும்
பண பக்தி மேலோங்கி
மௌன விரதமிருக்க,
இரு கோடுகள் தத்துவத்தால்
குமாரசாமியை
உத்தமராக்கியது
மேலூர் மகேந்திர ஜாலம்,
நேர்மையின் முகத்தில்
கரி பூசி.

இனி என்ன . . .
நீதி தேவன் துணை கொண்டு
இயற்கையைச் சுரண்டு,
விதிகளை மீறு,
துணை நிற்கும் அரசை
இன்னும் ஏமாற்று,
எல்லாவற்றையும் கொள்ளையடி,
பார்ப்பவரை, கேட்பவரை
வெட்டிக் கொல்லு!

காசுள்ள பக்கம்
சாயும் தராசுக்கள்
கண்ணியவான் என
போற்றித் துதிக்கையில்
கவலைதான் ஏனோ?

No comments:

Post a Comment