Wednesday, December 31, 2025

சங்கிகள் வெறுக்கும் "ஆலம்கிர் ஔரங்கசீப்"

 

நூல் அறிமுகம்

 

நூல்                          : ஆலம்கிர் ஔரங்கசீப்

ஆசிரியர்               : புலியூர் முருகேசன்

வெளியீடு              : குறி வெளியீடு,

                                    வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்

விலை                    : ரூபாய் 300.00

 

பிப்ரவரி மாத்த்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கலவரம் வெடித்தது. “சாவா” என்றொரு திரைப்படத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியை முகலாய மன்னர் ஔரங்கசீப் மிகவும் மோசமாக சித்திரவதைப் படுத்தி கொன்றார் என்று காட்சிப்படுத்தியதைத் தொடர்ந்து வெடித்த கலவரம். அந்த திரைப்படம் மட்டுமல்ல, நாம் பள்ளியில் படித்த பாடப்புத்தகங்கள் கூட ஔரங்கசீப் ஒரு கொடுங்கோல் மன்னர், இசை போன்ற கலைகளை வெறுத்தவர் என்றுதான் கற்றுக் கொடுத்துள்ளது.

 இந்த நூல் ஔரங்கசீப்பின் இன்னொரு பக்கத்தை காண்பிக்கும் நூலாக அமைந்துள்ளது. புனைவு நூலாக இருந்த பின்னும் ஔரங்கசீப் மீது வரலாறு வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர் தரப்பு விளக்கங்களை அளிப்பதாக உள்ளது. ஔரங்க்சீப் வரலாற்றோடு இந்த நூல் சுருங்கி விடவில்லை. கடந்த கால வரலாறு தொடங்கி நிகழ்கால சம்பவங்கள் வரை பலவற்றையும் விவரித்துள்ளது இந்த நாவல்.

 ஔரங்கசீப்பின் வரலாற்றை எழுத வந்த அயர்லாந்து விடுதலைப் போராளி லாவேஜ் மூலம் கதை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காலத்தை கடந்ததாக லாவேஜின் பயணம் முன்னும் பின்னுமாக அமைந்திருப்பது நூலை மிகுந்த கவனத்தோடு படிக்க வைக்கிறது.  ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த மறுநாள் அமிர்தசரஸில் தொடங்கும் நூல், கும்பமேளா நடக்கும் அலகாபாத் நகரின் யமுனை நதிக்கரையில் நிறைவு பெறுகிறது. இதற்குள்ளாக எத்தனையெத்தனை நிகழ்வுகள்!!!

 ஔரங்கசீப் பக்கம் வருவதற்கு முன்பாக வேறு எவற்றைப் பற்றியெல்லாம் இந்த நாவல் பேசியுள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.

 ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் காலித் தோட்டாக்களின் குவியல் மீது நிற்கிற லாவேஜிற்கு தன்னுடைய அயர்லாந்து நாட்டு விடுதலைப் போராட்டத்தையும் இங்கிலாந்து ஏகாதிபத்தியம் இப்படித்தானே ஒடுக்கியது என்ற துயரத்தையும் அளிக்கிறது. உத்தம்சிங் இதற்கு பதிலடி தருவான் என்று மைக்கேல் டயரிடமும் சொல்ல வைக்கிறது இந்த படுகொலைக்குக் காரணம் தேசப்பிதாதான் என்று ஒருவர் அங்கே மகாத்மா காந்தி மீது குற்றம் சுமத்துகிறார். யார் அவர் என்று பிறகு பார்ப்போம்.  .

 குஜராத்தில் மேற்கொள்ளும் ரயில் பயணத்தில் ஆச்சாரமான உணவிற்காக மண்ணெணெய் அடுப்பில் சமைப்பதையும் அதில் உள்ள அபாயங்களை விவரிக்கும் போதே கோத்ரா ரயில் விபத்தும் அதைத் தொடர்ந்த குஜராத் கலவரமும் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட்தும் விவரிக்கப்படுகிறது. ஒட்டு மொத்த குடும்பத்தையும் கொலையாளிகளிடம் பறி கொடுத்து கூட்டு பாலியல் வன் கொடுமைக்கும் உள்ளாகிய பில்கிஸ் பானுவிற்கு நிகழ்ந்த அராஜகம் இந்த நாவலில் தில்ரஸ் பானுவிற்கு நிகழ்ந்ததாக சொல்லப்பட்டு கண்ணீர் வரவழைக்கிறது.

 காஷ்மீர் நாடோடி இனத்தைச் சேர்ந்த ஆசிபா எனும் சிறுமிக்கு கோயிலுக்குள் நடந்த பாலியல் கொடுமை, கொலை பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.

 வெள்ளையர்களால் நாடு கடத்தப்பட்ட  சிவகங்கை மன்னன்  துரைசாமி பற்றியும் அவரது வீரத்தளபதி சேக் உசேன் பற்றியும் அவர்களின் துயரம் மிகுந்த இறுதி நாட்கள் பற்றியும்  இந்த நூல் விவரிக்கிறது.

 இப்போது ஔரங்கசீப் பற்றி வருவோம். மத வெறியர்களுக்கு அவர் மீது என்ன கோபம்? கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் “சதி” க்கு எதிராக உத்தரவிட்டதன் மூலம் பிரச்சினை தொடங்குகிறது. வாரணாசி விஸ்வநாதர் கோயிலை அவர் இடிக்க உத்தரவிட்டார் என்றொரு குற்றச்சாட்டு பேசப்படுகிறதே தவிர கோயிலுக்கு வந்த கட்ச் ராணி கோயில் புரோகிதர் ஒருவரால் கடத்தப்பட்டு கோயில் நிலவறையில் பாலியல் கொடுமைக்கு உள்ளானதன் எதிர்வினைதான் அந்த நடவடிக்கை என்பதைப் பற்றி பேசப்படுவதில்லை என்று இந்த நூல் சொல்கிறது. தன் மனைவிக்காக ருத்ர வீணை என்ற வாத்தியத்தில் ஆஹிர் பைரவ் எனும் ராகம் இசைக்கிற கலைஞராகவும் அவரை இந்த நாவல் காண்பிக்கிறது.

 தண்ணீரின் வேகத்தால் கோதுமை மாவு அறைக்கும் இயந்திரம், காப்பியின் அறிமுகம் போன்ற பகுதிகள் சுவாரஸ்யமான கற்பனைகள்.

 ஔரங்கசீப் – சிவாஜி உறவு பற்றியும் விரிவாக இந்த நூல் பேசுகிறது. சிவாஜி அரசனாக முடியேற்க முதலில் யார் ஆட்சேபித்தார்களோ, அவர்களேதான் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் வளர காரணமாக இருந்தார்கள் என்பதையும் சொல்கிறது. அது மட்டுமல்ல அதை செய்வதாக ஒரு பாத்திரம் வருகிறது. அந்த பாத்திரம் விக்ரம் ஜோஷி.

 இன்று இந்தியாவில் மக்களிடையே பிரிவினையை தூண்டும் பரிவாரத்தைத்தான் ஜாலியன் வாலாபாக்கில் மகாத்மா காந்தி மீது பழி போடுவதில் தொடங்கி காலம் தோறும் வரும் விக்ரம் ஜோஷியை சித்தரித்துள்ளார். லாவேஜ் யமுனை நதிக்குள்ளாக விக்ரம் ஜோஷியை கொலை செய்து புதைத்தாலும் அவன் மீண்டும் எப்போது எந்த வடிவில் வருவானோ என்ற அச்சத்துடன் நாவலை நிறைவு செய்கிறார். மத வெறி அபாயம் இன்னும் தொடர்கிறது அல்லவா! ஔரங்கசீப்பிற்கு நற்சான்றிதழ் கொடுப்பது போல இந்த நாவல் அமைந்துள்ளதோ என்றொரு சிந்தனை எழலாம். பல நூறு ஆண்டுகளாக பல்வேறு படைப்புக்கள் மூலம் அவர் அவதூறு செய்யப்பட்டுள்ள போது, அவர் புகழ் பாடத்தான் ஒரு நூல் இருக்கட்டுமே!

 சரியான சமயத்தில் சரியான படைப்பை நல்லதொரு மொழியில் வழங்கிய தோழர் புலியூர் முருகேசனுக்கு வாழ்த்துக்கள்.

-         வேலூர் சுரா


"காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதியது.  

-          

 


2 comments:

  1. what is his educational eligibility to write about Aurangazeb?
    Why he deviated from the book title? Is that because of his lack of education or to please his political masters

    ReplyDelete
    Replies
    1. Thank you for your decent comment. What is the need for educational qualification for writing a fiction? He studied more than the illiterate PM Modi.

      Delete