1994 ன் துவக்கத்தில் அகமதாபாத் நகரில் நகரில் நடைபெற்ற பதினைந்தாவது மாநாடு, நான் கலந்து கொண்ட இரண்டாவது அகில இந்திய மாநாடு.
மாநாட்டுக்கு புறப்படும் நாளன்று எங்கள் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அவர்களின் தாயார் காலமாகி விட அவரால் வர இயலவில்லை. தலைமையகத்திலிருந்து கலந்து கொண்ட ஒரே பொறுப்பாளர் நான் மட்டுமே. இந்த மாநாடு 1993 ஜனவரியில் நடந்திருக்க வேண்டும். 6, டிசம்பர், 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் வட இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்பே நடந்தது.
மும்பை தாதர் வரை ஒரு ரயில், பிறகு அகமதாபாத் வரை இன்னொரு ரயில். மாநாட்டு அறிக்கைகளை தாதர் ரயில் நிலையத்தின் ஒரு ப்ளாட்பார்மிலிருந்து நீண்ட தூரத்திலிருந்த இன்னொரு பிளாட்பார்மிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்த பணி எங்கள் கோட்டத்திற்கு கொடுக்கப்பட்டது. ட்ராலியில் எடுத்துச் செல்ல சொத்தயையே கேட்க மறைந்த தோழர்கள் சிவகுமாரும் மனோகரும் காலியாய் இருந்த ஒரு ட்ராலியை எங்கிருந்தோ எடுத்து வர நாங்கள் தள்ளிக் கொண்டு சென்றோம்.
அந்த மாநாட்டில் ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ந்தது. ஆமாம். நிகழ்ச்சி நிரலில் தோழர் என்.எம்.எஸ் அவர்களுக்கு நன்றியுரை என்று சொல்லப்பட்டிருந்தது. இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்று மல்கோத்ரா குழு பரிந்துரை அளித்திருக்க தோழர் என்.எம்.எஸ் ஒரு மணி நேரம் நன்றியுரை ஆற்றினார். மாநாட்டை துவக்கி வைத்தவர் (பெயர் நினைவில் இல்லை) ஒரு பொருளாதார டாக்டர். அந்த டாக்டரையும் அன்றைய நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கையும் ஒப்பிட்டு தோழர் என்.எம்.எஸ் பேசியதை கேட்டிருந்தால் மன்மோகன்சிங் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடியிருப்பார்.
பணி ஓய்வுக்குப் பிறகும் நீண்ட காலம் தலைவராக செயல்பட்ட , இன்றைக்கும் பிதாமகராக வழிகாட்டி வரும் தோழர் சந்திரசேகர் போஸ் அந்த மாநாட்டில் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தோழர் சரோஜ் சவுத்ரி புதிய தலைவரானார்.
மாநாடு நிறைவுற்ற மறு நாள் நாங்கள் சபர்மதி ஆஸ்ரம் சென்றோம். காந்தியடிகள் கொல்லப்பட்டபோது அணிந்திருந்த உடை என்று ரத்தக்கறையுடன் ஒரு ஆடை அங்கே இருந்தது. இது போலவே மதுரை காந்தி மியூசியத்திலும் இருக்கிறதே, இது எப்படி சாத்தியம் என்று அருகில் இருந்த எங்கள் கோட்டத் துணைத்தலைவர் தோழர் புதுவை ஆர்.பி.எஸ் அவர்களிடம் கேட்க ஒரு வாலிபர் அங்கே வந்து "பாபு இங்கே இன்னமும் உயிருடன் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். தயவு செய்து சத்தம் போடாதீர்கள்" என்று மென்மையாக கடிந்து கொண்டார்.
இப்போதைய மத்தியரசு மகாத்மாவின் பெயரை வேலை உறுதிச் சட்டத்திலிருந்து நீக்கியதை அறிந்திருந்தால் அந்த வாலிபர் என்ன செய்திருப்பாரோ!
அடுத்தது மதுரையில் பதினாறாவது மாநாடு, 1996 ன் இறுதியில்.
மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்க மதுரை, கோவை, சென்னைக் கோட்டங்கள் போட்டியிட தென் மண்டல செயற்குழுக் கூட்டத்தில் அதிக வ்பாக்குகளைப் பெற்று வென்றது மதுரை. அந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற கிளை 1 வளாகத்தில்தான் இப்போது தீ விபத்து ஏற்பட்டு முதுநிலை கிளை மேலாளர் திருமதி கல்யாணி நம்பி இறந்து போனார்.
இந்த மாநாட்டிற்கு முன்பாக நான்கு முனைகளிலிருந்து வேன் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதில் இரண்டு வேன்கள் எங்கள் கோட்டம் வழியே பயணித்தது. அரக்கோண்த்திலிருந்து அரியலூர் வரையிலான பிரச்சாரத்திற்கு பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் பொறுப்பேற்க நானும் கோட்டத் துணைத்தலைவர் ஆர்.முருகேசனும் திண்டிவனத்திலிருந்து சீர்காழி வரை சென்றோம்.
கொட்டும் மழையின் ஊடே பிரச்சாரம் நடைபெற்றது. மக்கள் மத்தியில் எப்படி பேசுவது என்ற பயிற்சிக் களமாக அந்த பிரச்சாரம் அமைந்திருந்தது.
மேற்கு வங்க நிதியமைச்சர் டாக்டர் அசிம்தாஸ் கப்தாவும் மக்களவை உறுப்பினர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யாவும் துவக்க நிகழ்வில் பேசி இருக்க வேண்டும். மழை காரணமாக விமானங்கள் ரத்தானதால் இருவராலும் வர இயலவில்லை. முதுபெரும் பொது உடமை இயக்கத் தலைவர் தோழர் ஆர்.உமாநாத் மாநாட்டை துவக்கி வைத்தார்.
இம்மாநாட்டில் தோழர் சரோஜ் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள பஞ்சாப் சிங்கம் தோழர் ஆர்.பி.மான்சந்தா புதிய தலைவரானார். அன்றைய தேதியில் மிகவும் இளையவரான தோழர் கே.வேணுகோபால் இணைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"இந்த இளைஞன் அகில இந்திய செயலகத்தில் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று நான் சொன்னவுடனேயே தன் இணைச்செயலாளர் பொறுப்பை துறக்க முன்வந்த தென் மத்திய மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் சுகுனாகர் ராவ்வை நாம் பாராட்ட வேண்டும்" என்று தோழர் என்.எம்.சுந்தரம் சொல்ல, அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது.
![]() |
முதல் இரண்டு மாநாடுகளில் பார்வையாளராக கலந்து கொள்ள இம்மாநாட்டில்தான் முதல் முறையாக பிரதிநிதியாக கலந்து கொண்டேன். என் மனைவி பார்வையாளராக பங்கேற்றார். எங்கள் மகனை கும்பகோணத்திலிருந்த மாமனார் வீட்டில் விட்டு விட்டு நாங்கள் மாநாட்டில் பங்கேற்றோம்.
அடுத்த மாநாடு ஹைதராபாத் நகரில். இந்து ஆசிரியர் தோழர் என்.ராம் துவக்கி வைத்தார். ஒரு நாள் முன் கூட்டியே வந்து விட்டதால் கோல்கொண்டா கோட்டை, சாலார் ஜங் மியூசியம் எல்லாம் சென்றோம். இன்சூரன்ஸ் மசோதாவிற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று இம்மாநாட்டில்தான் முடிவெடுக்கப்பட்டது. எண்ணற்ற செயல்வீரர்களை அடையாளம் காண்பித்தது இந்த கையெழுத்து இயக்கம்தான்,
மாநாடு முடிந்து திரும்பும் போது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் ஏற்பட்டது.
வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய காலத்தில் அந்த சம்பவத்தை எழுதியுள்ளேன். வழி மறித்த உளவுத்துறை என்ற அந்த பதிவை இணைப்பின் மூலம் படித்து விடவும்.



.jpg)
.jpg)
No comments:
Post a Comment