Thursday, December 11, 2025

மகிழ்ச்சியளித்த கூட்டம்

 


நேற்று முன் தினம் போளூர் கிளைச்சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்றேன். பணி ஓய்வுக்குப் பிறகு சேலத்தில் தென் மண்டல மாநாடு, நெய்வேலி, வேலூரில் கோட்ட மகளிர் மாநாடு, சென்னையில் மாநில மகளிர் மாநாடு, இரண்டு தோழமைச்சங்கங்களின் கருத்தரங்குகளில் சிறப்புரை என்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் ஒரு கிளைச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டது முதல் முறை. பணி ஓய்வுக்குப் பிறகு கலந்து கொண்ட முதல் கூட்டம் மட்டுமல்ல, 1993 ல் கோட்டச்சங்கப் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு கலந்து கொண்ட முதல்  கூட்டம், போளூர் கிளைச்சங்கத்தின் துவக்கக் கூட்டம்தான். அன்றைய பொதுச்செயலாளர் தோழர் ஆர்,ஜகதீசனோடு நானும் சென்றிருந்தேன்.

இப்போது எதற்கு போளூர் பயணம்? இந்த பதிவில் எதற்கு நேருவின் படம்?

இதோ கேள்விகளுக்கு பதில்.

இம்மாத இறுதியில் அகில இந்திய மாநாடு புவனேஸ்வரில் நடைபெறுகின்றது. அதற்கு முன்பாக அனைத்து கோட்டங்களும் தங்களுக்கு பொருத்தமான ஒரு நாளில் புது வணிக இயக்கம் நடத்திட வேண்டும் என்பது தென் மண்டல கூட்டமைப்பின் முடிவு.

சங்கம் எதற்கு புது வணிக இயக்கம் நடத்திட வேண்டும்?

எல்.ஐ.சி யின் மீது தொடர்ந்து பல தாக்குதல்கள் நடந்து வருகிறது. அதன் உடமையாளராக ஆவணங்களில் உள்ள ஒன்றிய அரசு ( எல்.ஐ.சி நிறுவனத்தின் நாற்பது கோடி பாலிசிதாரர்கள்தான் உண்மையான உடமையாளர்கள் ) , தனியார் நிறுவனங்கள், எல்.ஐ.சி க்கு கட்டுப்பாட்டு ஆணையமாகவும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாகவும் உள்ள இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று 9IRDA) ஆணையம், கார்ப்பரேட் ஊடகங்கள் ஆகியோர்தான் அந்த தாக்குதல்களை நிகழ்த்தும் சுய நலப் பேர்வழிகள்.

அந்த தாக்குதலை சந்திக்க எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிதான் முக்கியமான ஆயுதம் என்பது சங்கத்தின் ஆயுதம். 

வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, முகவர்கள் மத்தியில் வேகத்தை உருவாக்க சங்கம் வருடத்திற்கு ஒரு முறையாவது புது வணிக இயக்கம் நடத்துவது வழக்கம்.

எல்.ஐ.சி யை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான 14.11.2025 அன்று புது வணிக இயக்கம் நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று வேலூர் கோட்டச்சங்கம் முடிவெடுத்தது. மோடியால் இன்றளவும் தூற்றப்படும் ஒருவரை முன்னிறுத்துவதும் ஒரு முக்கியமான நடவடிக்கை அல்லவா!

அந்த இயக்கம் வெற்றிகரமாகவே நடந்தது. அன்று மட்டும் 2775 புதிய பாலிசிகள் கிடைக்கப் பெற்றன. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் கிளைகள் முதல் மூன்று இடங்களை பெற்றன.

இதிலே போளூர் பெற்ற மூன்றாவது இடம் சிறப்பானது. மற்ற கிளைகளை ஒப்பிடுகையில் போளூர் மிகவும் சிறிய கிளை. வணிகத்திற்கான வாய்ப்பு தொடங்கி முகவர் எண்ணிக்கை, ஊழியர் எண்ணிக்கை வரை போளூர் சிறிய கிளைதான். 2023 ல் நாங்கள் நடத்திய புது வணிக இயக்கத்தில் கடைசி இடத்தில் வந்தது போளூர்தான் எனும் போது இப்போது அவர்கள் பெற்ற மூன்றாம் இடத்தின் மகத்துவம் புரியும்.

இப்போதைய திரைப்படங்களில் எல்லாம் TRANSERMATION SCENE என்று வரும். பாட்சா வின் "உள்ளே போ" விஸ்வரூபம் முதல் சண்டை போன்றவை உதாரணம்.

போளூர் கிளையில் வெற்றி பெற்ற முகவர்களுக்கு பரிசளிக்கும் கூட்டம் உள்ளது, நீங்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கர் அழைத்த போது கடைசி இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய இந்த TRANSFERMATION க்காவே ஒப்புக் கொண்டேன். இது சொல்லி அடித்த வெற்றி வேறு.

இந்த கூட்டம் மிகவும் மகிழ்ச்சியளித்தது. அதற்கு பல காரணங்கள் உண்டு.

முகவர்களின் பங்கேற்பு மிகவும் அருமையாக இருந்தது.  இதற்கு முன்பாக வேறு பல கிளைகளிலும் சங்கம் ஏற்பாடு செய்த முகவர் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். போளூர் கூட்டம் அளவிற்கு வேறு எந்த கிளையிலும் முகவர்கள் பங்கேற்பு அவ்வளவு அதிக எண்ணிக்கையில் இல்லை.

நான்கு மூத்த முகவர்கள் பேசினார்கள். போளூர் கிளையின் ஊழியர்களின் சேவை மிகவும் சிறப்பாக உள்ளது. எங்களின் வணிகத்தின் வலிமையே அவர்கள்தான் என்று பாராட்டுகையில் மனதிற்குள் மழை பெய்தது. அந்த மூத்த முகவர்கள் தங்கள் வெற்றி ரகசியங்களை பகிர்ந்து கொண்டு நீங்களும் இவற்றை முயற்சி செய்யுங்கள் என்று சொன்னது நெகிழ்ச்சியூட்டியது. போட்டியாளராக கருதாமல் சக முகவராக கருதுகின்ற சிறந்த மனப்பான்மை அது.

கோட்டச்சங்கத் தலைவர் தோழர் பி.எஸ்.பாலாஜி, பொதுச்செயலாளர் தோழர் எஸ்.பழனிராஜ், இணைச்செயலாளர் தோழர் பி.கங்காதேவி ஆகிய மூவருமே அற்புதமாக பேசினார்கள். "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்" ஃபீலிங்கில் இருந்தேன்.

போளூர் கிளை மேலாளர் தோழர் டி.கஜராஜும் (நீண்ட காலம் எங்கள் வாணியம்பாடி கிளையின் செயலாளராக இருந்தவர்) நன்றாக பேசினார். 


தோழர் பி.எஸ்.பாலாஜி


தோழர் எஸ்.பழனிராஜ்


தோழர் டி.கஜராஜ்


தோழர் பி.சங்கர்




அருமையானதொரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அவர்கள் பெற்ற வெற்றியால் விளைந்தது. அந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். புது வணிக வெற்றிக்கும் கூட்டத்தின் வெற்றிக்கும் அடித்தளமாக இருந்து செயல்பட்ட போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கருக்கு பிரத்யேக வாழ்த்துக்கள். 

 




1 comment: