சாகித்ய அகாடமி விருது சர்ச்சை நடப்பில் இருக்கும் போதே அடுத்த விருது சர்ச்சை வந்து விட்டது.
மியூசிக் அகாடமி இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருது வயலின் இசைக் கலைஞர் ஸ்ரீராம்குமார் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு விருதளிக்கப்பட்டதில் எந்த சர்ச்சையும் வந்ததாக நான் படிக்கவில்லை.
பின்?
விருது கொடுத்தவரை வைத்துதான் சர்ச்சையே!
யார் கொடுத்தது?
ஏ.ஆர்.ரஹ்மான்.
மியூசிக் அகாடமியின் அழைப்பிதழை முகநூலில் பார்த்த போதே சிக்கல் வரும் என்று எதிர்பார்த்தேன். அது போலவே நடந்து விட்டது.
மியூசிக் அகாடமி கம்மிகளின் கையில் போய் விட்டது, நாத்தீகர்கள் கையில் போய் விட்டது. ரஹ்மானுக்கு கர்னாடக இசை பற்றி தெரியுமா? கர்னாடக இசையின் அடிப்படை பக்தி. ரஹ்மானுக்கும் பக்திக்கும் என்ன தொடர்பு?
இதெல்லாம்தான் நான் பார்த்த கருத்துக்கள்.
முதல் கருத்து அபத்தம். மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி ஒன்றும் அவரது சகோதரர் என்.ராம் போல இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர் கிடையாது. அதனால் முதல் இரண்டு கருத்துக்களும் அபத்தம்.
"கண்ணோடு காண்பதெல்லாம்" "சௌக்கியமா கண்ணே சௌக்கியமா" ஆகிய இரண்டு பாடல்கள் போதும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கர்னாடக இசை தெரியுமா இல்லையா என்று சொல்ல . . .
ஆஸ்கர் விருது மேடையில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று சொன்னவருக்கா இவர்கள் பக்தி பற்றி பாடம் எடுக்கிறார்கள்!
பிறகு உண்மையில் என்ன பிரச்சினை?
திருவையாறு தியாகராஜர் ஆராதனையின் போது கே.ஜே.யேசுதாஸ் பாட வருகையில் மக்கள் திரள்கையில் ஒரு கூட்டம் "கிறிஸ்துவன் பாடறதை கேட்க இப்படி போறாங்களே" என்று திட்டிக் கொண்டு வெளியேறும். இது நான் நேரடியாக பல வருடங்கள் பார்த்த அனுபவம். முன்பே இதனை எழுதியிருக்கிறேன்.
இப்போது புரிகிறதா?
பிரச்சினை ரஹ்மானின் கர்னாடக இசை ஞானமோ, பக்தியோ கிடையாது.
அவரது மதம்தான் பிரச்சினை.
பிகு 1 : கடந்த வருடம் விருது பெற்றமைக்காக கடுமையாக திட்டப்பட்ட டி.எம்.கிருஷ்ணாவிற்கு பல கச்சேரிகளில் பக்க வாத்தியமாக வயலின் வாசிப்பவர் ஸ்ரீராம்குமார்.
பிகு 2 : கடந்த வருடம் பிரச்சினையை முதலில் உருவாக்கிய ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் ஏதாவது சொல்லியுள்ளார்களா என்று அவர்களின் முக நூல் பக்கம் பார்த்தேன். ராமர் கோயிலில் காவிக் கொடி ஏற்றுகையில் பாட வாய்ப்பு கிடைத்தமைக்காக புளகாங்கிதமடைந்திருந்தார்கள். அவர்கள் டி.எம்.கிருஷ்ணாவை எதிர்ப்பது இயல்பானது, சங்கி இயல்பானது.
பிகு 3 : தோழர் தமிழ்ச்செல்வனுக்கு இன்னும் விருது அறிவிக்கப்படவே இல்லை. அதற்குள்ளாகவே வன்ம வாந்திகளை எடுக்கத் தொடங்கி விட்டனர். அவர்கள் ஆசானின் அல்லக்கைகளாகவே இருப்பது யதேச்சையானதாக தெரியவில்லை.

No comments:
Post a Comment