Thursday, December 11, 2025

தி.குன்றம் தீர்ப்பாளரின் வழக்கு கணக்கு

 திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் அதி வேகமாக வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்ததாக பாஜக பொய்யன் நாராயணன் திருப்பதி பீற்றிக் கொண்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முகநூல் பதிவில் அட்டகாசமான விளக்கத்தை அளித்துள்ளார்.  நம்ம தீர்ப்பாளர் அளித்த தீர்ப்புக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் என்றால் எந்த லட்சணத்தில் அவர் வேலை செய்துள்ளார் என்பதையும் இப்பதிவு அம்பலப்படுத்துகிறது.



கணக்கு வழக்கல்ல; இது வழக்கு கணக்கு சார் !
2017 முதல் 2025 வரை 9 வருடங்களில் 1,20,426 வழக்குகளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் வழக்கை ஏற்று விசாரித்து தீர்ப்பையும் எழுதியதாக இன்று ஒரு செய்தி பகிரப்படுகிறது.
உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால் அது ஒரு அசாதாரணமான வேகம் . அதை பகிர்ந்துள்ள பாஜகவின் BJP Tamilnadu திரு நாராயணன் திருப்பதி Narayanan Thirupathy BJP அவர்கள் நீதிபதி சுவாமிநாதன் அவர்களை
"பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திராவிட மாடல் ஏன் துடிக்கிறது என்று இப்போது புரிகிறதா?"
என்று எழுதியிருக்கிறார்.
இதை உண்மை என்று கொண்டால் எந்த விதமான வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, மருத்துவ விடுப்பு, தேசிய விடுமுறை என எந்த விடுப்பும் எடுக்காமல் எல்லா நாட்களும் அதாவது வருடத்தில் 365 நாட்களும் பணி செய்ததாக கொண்டால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அதாவது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (அதுவும் சாப்பாடு டீ அல்லது வேறு எந்த ஓய்வுக்கும் செல்லாமல்) பணி செய்து இருந்தால் நாளைக்கு எத்தனை வழக்குகளை சராசரியாக தீர்ப்பு சொல்லியிருக்க முடியும் என்று கணக்கு போடலாமா ?
இந்த வருடம் முடிய இன்னும் ஒரு 20 நாட்கள் இருக்கிறது .
அந்த நாளையும் சேர்த்து நாம் கணக்கிடலாம் .
மொத்த வழக்குகள் -1,20,426
மொத்த வருடங்கள் -9
ஆண்டுக்கு சராசரி வழக்குகள்-13,380.6
நாளைக்கு சராசரி வழக்கு-36.66
ஒரு மணி நேரத்திற்கு சராசரி வழக்கு -4.58
அதாவது ஒரு வழக்கிற்கு ஆன சராசரி நேரம்-13.1 நிமிடங்கள் .
அதாவது சராசரியாக ஒவ்வொரு வழக்கையும் ஏற்று விசாரித்து குறுக்கு விசாரணை செய்து அதன் பிறகு அதை பரிசீலித்து தீர்ப்பு எழுதுவதற்கு 13 நிமிடங்கள் ஒரு நொடிதான் சராசரியாக எடுத்திருக்கிறார்.
உண்மையில் மந்திரவாதிகளால் மட்டுமே சாத்தியமானதை நீதிபதி ஜிஆர் சாமிநாதன் அவர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்.
நம்முடைய பாராட்டுக்களை அவருக்கு உரித்தாக்குவோம்.

No comments:

Post a Comment