28 ம் தேதி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 27 வது பொது மாநாடு ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் துவங்குகிறது. இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர் தோழர் பேராசிரியர் பிரபாத் பட்னாயக் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
நாளை மாலை அகில இந்திய செயற்குழுக் கூட்டம் இருப்பதால் இதோ சென்னை நோக்கி என் பயணத்தை தொடங்குகிறேன். சங்க அலுவலகத்தில் இன்றிரவு தங்கி விட்டு நாளை அதிகாலை விமானத்தை பிடிக்க வேண்டும்.
புவனேஸ்வர் பல விதத்திலும் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். 1990 ல் கட்டாக்கில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலி கிளை தோழர்களோடு புவனேஸ்வர் சென்றுள்ளேன்.
அடுத்த முறை சென்றது மயக்க இயலாத பயணம். நான், மனைவி, மகன் மூவரும் விடுமுறைப் பயண சலுகையில் புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா சென்றோம். நாங்கள் சென்ற கொரமாண்டல் எக்ஸ்பிரஸ் இரவு எட்டு மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12 மணிக்கு சென்றது.
எல்.ஐ.சி விருந்தினர் விடுதி முன்பதிவு சென்றிருந்தேன். எல்.ஐ..சி கிளை அலுவலகம் 1 க்கு பின் பக்கம் உள்ளதாக எனக்கு வந்த கடிதம் சொன்னது. ஆனால் அந்த அலுவலகத்தின் பின்னால் எந்த ஒரு கட்டிடமும் இருப்பதாக தெரியவில்லை. கதவுகள் பூட்டப்பட்டிருந்தன.
இந்த பயணத்திற்காகவே புதிதாக ஒரு நோக்கியா மொபைல் வாங்கி, ஒடிஷா, கொல்கத்தாவில் செயல்படுமா என்று பல முறை கேட்டு உறுதி செய்தி கொண்டு வாங்கிய பி.பி.எல். இணைப்பு ஆந்திராவை தாண்டிய உடனேயே காணாமல் போயிருந்தது. எங்கள் டாக்ஸி டிரைவரிடம் போன் இல்லை.
ஒரு மருத்துவர்கள் மாநாடு நடந்து கொண்டிருந்ததால் எந்த விடுதியிலும் அறை கிடைக்கவில்லை. புவனேஸ்வரில் ஒரு உறவினரின் வீடு இருந்தது. அவர்கள் வீட்டிற்கு சென்று ஒரு ஹலோ சொல்லி காப்பி குடித்து விட்டு வரும் திட்டம் இருந்தது. இப்போது வேறு வழியில்லை. ஒடிஷா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் விடுதியிலிருந்து அவர்களோடு பேசினேன்.
தங்கள் வீட்டிற்கு உடனே வரச்சொன்ன அவர் டாக்சி ட்ரைவருக்கும் வழியை சொன்னார். அப்போது ஒடிஷா சுற்றுலா அலுவலர் அந்த டாக்சி ட்ரைவரின் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி வைத்துக் கொண்டு எங்களிடம் ஒரு அட்டையை கொடுத்தார். வீடு போய் சேர்ந்ததும் அதில் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும் என்றும் தொலைபேசியிலும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் எங்கள் மாநிலத்தின் விருந்தினர்கள். நீங்கள் செல்லும் வழியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சவுக்கு தோப்பு உள்ளது. அதனால் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு என்றார்.
கடைசியாக சென்றது புவனேஸ்வரில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள. அதற்கு முன்பாக அகில இந்திய மகளிர் மாநாடும் நடைபெற்றது. எங்கள் கோட்டத்திலிருந்து பிரதிநிதியாக பங்கேற்ற மகளிர் பொறுப்பாளர் ஒருவரும் நானும் சென்றோம். சிறப்பான ஏற்பாடுகளால் அந்த பயணம் இன்றும் நினைவில் உள்ளது.
பிகு" புவனேஸ்வர் செல்வதால் வலைப்பக்கத்திற்கு விடுமுறையா?
நோ, நோ, நோ
இதுவரை கலந்து கொண்ட அகில இந்திய மாநாடுகளைப் பற்றிய சிறு குறிப்புக்கள், காப்பீட்டு ஊழியர் இதழிற்காக எழுதிய நூல் அறிமுகங்கள், நீண்ட காலமாக ட்ராப்டிலேயே உள்ள பதிவுகள் என்று 03.01.2026 அன்று அதிகாலை வீடு திரும்பும் வரை பதிவுகள் தயாராகவே உள்ளது.

👍🌹
ReplyDelete