Sunday, March 27, 2022

ஏன் இன்றும் நாளையும் ???

சற்றே நீண்ட கட்டுரை. நீங்கள் உண்மையான தேச பக்தரென்றால் அவசியம் படியுங்கள். 

தேசத்தின் எதிரிகள் யாரென்றும் இன்றும் நாளையும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தம் ஏனென்றும் எளிதில் புரியும். 



விரிந்த வானத்தில் கைகோர்க்கும் நட்சத்திரங்கள்




தோழர் கே.சுவாமிநாதன்,
துணைத்தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

கூட்டு இயக்கங்கள்  காலத்தின் கட்டளை

அகில இந்திய வேலை நிறுத்தங்களின் தாக்கம் என்ன? ஏன் எல்லா தொழிலாளர்களின் ஒன்றுபட்ட குரல் தேவைப்படு கிறது?  இப்படியொரு கேள்வி சிலரின் மனங்களில் உள்ளது. மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தம், 1991 க்கு பிறகு நடைபெறும் 21 வது அகில இந்திய வேலை நிறுத்தம். 1990 களில் நவீன தாராளமய கொள்கைகள் அமலாகத் துவங்கிய போது “ஊதியத்தில் இருந்து விலைவாசி ஈடை விலக்குவது” (“De indexation of wages”) என்ற அபாயம் கதவுகளை தட்டியது. எதற்கு விலைவாசி உயர்வை அரசாங்கம் ஈடு கட்ட வேண்டும்? எதற்கு பஞ்சப்படி (DA) தரப்பட வேண்டும்? என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பியது. முன்னாள் ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக் தலைமையிலான ஒரு குழுவை போட்டது. அக் குழுவும் பஞ்சப்படி தருவது அரசின் கடமை அல்ல என்று கூறியது. இது பிஜு பட்நாயக் குரல் அல்ல. இந்தியாவுக்கு கடன் தந்த உலக வங்கி போட்ட நிபந்தனைகளில் ஒன்று. 

ஆனால் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு, வேலை நிறுத்தங்கள்தான் அந்த அபாயத்தை தடுத்து நிறுத்தியது. இன்றும் நிதித் துறை ஊழியர்கள் பஞ்சப்படியை  3 மாதங்களுக்கு ஒரு முறையும், ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிட்டு விலை வாசிக்கேற்ற பஞ்சப்படி உயர்வைப் பெற்று வருகிறார்கள். இன்று பிஜு பட்நாயக் மகன் நவீன் பட்நாயக் ஒடிசா முதல்வர் ஆகி விட்டார். இரண்டு தலைமுறைகள் கடந்து விட்டன. பஞ்சப்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய வேலை நிறுத்தங்களின் குறிப்பிடத் தக்க வெற்றி. அகில இந்திய வேலை நிறுத்தங்கள் இல்லாவிட்டால் இன்று எத்தனை பயன்கள் காவு போயிருக்கும், எத்தனை உரிமைகள் பறி போயிருக்கும் என்று சொல்ல முடியாது. இன்று நவீன மென் பொருள் நிறுவ னங்களில் பஞ்சப்படி எங்கே இருக்கிறது? இதே நிலைமையை அரசு துறை, நிறுவனங்களிலும் ஏற்படுத்தவே முயற்சி செய்தார்கள்.  அதுபோல இன்று நாடு தழுவிய எதிர்ப்பு தேவைப்படுகிற இன்னொரு பிரச்சனையாக புதிய பென்சன் திட்டம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும் தனியாக இக் கோரிக்கையை வெல்ல முடியாது. ஒன்றிய அரசு அல்லது மாநில அரசு மட்டங்களில் தீர்வுகள் ஏற்பட்டால் தான் உடைப்பு ஏற்படுத்த முடியும்.  தற்போது இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள் புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளன. இதன் பின்புலத்தில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வீதிகளுக்கு வந்ததால் இமாசலப் பிரதேச அரசும் இது பற்றி பரிசீலிக்க குழு ஒன்றைப் போட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்க ளில் இது புது நம்பிக்கையை தந்துள்ளது. 

இது போன்ற கோரிக்கைகள், விரிந்த இயக்கம் வாயிலாக மட்டுமே சாத்தியமாகும். இதுதான் அகில இந்திய வேலை நிறுத்தங்களின் முக்கியத்துவம். 

மூன்றாவது பொதுத் துறை பாதுகாப்பு. முந்தைய அரசுகள் தங்களது சித்தாந்த ரீதியான தாக்குதலாக  தனியார் மயத்தை முன் வைக்காமல் நட்டம், திறமைக் குறைவு, நுகர்வோர் விருப்பம் என்ற காரணங்களை சொல்லி வந்தன.  ஆனால் மோடி தலைமையிலான அரசு, தங்கள் சித்தாந்தமே பொதுத் துறை நிறுவனங்களுக்கு எதிரானது என்பதை ஒளிவு மறைவின்றி பிரகடனம் செய்துள்ளது. கேந்திரமான தொழில்களில் கூட பொதுத் துறை “குறைந்த பட்ச இருப்போடு” (Minimum Presence) இருந்தால் போதும் என்கிறது இந்த அரசு.  ஆகவே தற்போது எழுந்துள்ள தாக்குதல், ஏதோ ஒரு நிறுவனத் திற்கு ஆபத்து, ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு ஆபத்து என்ற நிலையை கடந்து விட்டது. ஆகவேதான் எந்த நியாயமும் இல்லா மல் எல்.ஐ.சி பங்கு விற்பனை அரசால் முன் வைக்கப்படுகிறது. அரசிடம் நியாயம் இல்லை என்பது மட்டும் காரணம் இல்லை.  நியாயம் தேவையில்லை என்ற இடத்திற்கு வெளிப்படையாக வந்து விட்டார்கள் என்பதுதான். ஆகவே இனி பொதுத்துறை யைப் பாதுகாக்கிற போராட்டம் ஒரு நிறுவனம், ஒரு தொழில் என்று சுருங்கி விடாமல் பரந்த போராட்டமாக மாற வேண்டி யுள்ளது. ஆகவேதான் அகில இந்திய வேலை நிறுத்தம் தேவை ஆகி றது. இது 21 ஆவது அகில இந்திய வேலை நிறுத்தம். ஆனால் 30 ஆண்டுகளுக்கு உலகமயத்திற்கு எதிராக நடந்தேறிய முதல் அகில இந்திய வேலை நிறுத்தத்தை விட பரந்த திரட்டலுக்கான அதிக முக்கியத்துவத்தை இந்த வேலை நிறுத்தம் பெறுகிறது.

ஒட்டுமா கோரிக்கைகள்? உறவாகுமா இதயங்கள்?

அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளும், ஒயிட் காலர் தொழிலாளர் கோரிக்கைகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டுமா ?கோரிக்கைகள் ஒட்டாமல் இல்லை.  ஆனால் அபாயங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டியவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டுகிறார்களா, இணைந்து நிற்கிறார்களா என்பதே கேள்வி. பி.எஸ்.என்.எல் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது. அதற்கு செல் சேவை அனுமதியில் தாமதம். டவர் நிர்மாண அனுமதியில் தாமதம். கேபிள் தருவதில் தாமதம். தற்போது 4 ஜி அனுமதியில் தாமதம். இப்படி சொந்த பிள்ளையை பட்டினி போடுகிற வேலையை அரசாங்கம் செய்தது. பி.எஸ்.என்.எல் சந்தைப் பங்கு வீழ்ச்சி அடைந்தவுடன் ஜியோ இன்று ரூ. 555 கட்ட ணத்தை ரூ. 666 க்கு உயர்த்திவிட்டது. எல்லா மட்டங்களிலும் 20 சதவீத உயர்வு. பி.எஸ்.என்.எல் இருப்பு என்பது கட்டணத்தி ற்கு கடிவாளம் ஆகும். அதை அவிழ்த்து விட்டால் என்ன ஆகும்? அப்புறம் விலைக் குதிரையை பிடிக்க முடியுமா? அதற்கு கடிவாளம் போட முடியுமா?  

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மட்டும் வணிக களத்தில் இருந்த காலத்தில் ஆட்டோவுக்கு எவ்வளவு இன் சூரன்ஸ் பிரீமியம்? இப்போது தனியார்கள் பொது இன்சூரன்ஸ் துறையில் வந்த  பிறகு எவ்வளவு பிரீமியம்? பல மடங்கு உயர்வு. இதே கதைதான் அரை பாடி லாரிகளுக்கும். முந்தைய காலங்களில் வாகன இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரித்தால் அரசு பொது இன்சூரன்ஸ் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடைபெறும். தனியார்கள் வந்த பிறகு அப்படி போராட்டம் நடத்த முடிகிறதா? 

பொதுத் துறையிடம் மக்கள் சலுகைகளை எதிர்பார்ப்பது பெற்ற தாயிடம் உணவு கேட்டு உரிமையோடு பசியாறுவது போல... தனியார் என்றால் ஊராரிடம் போய் நிற்கிற உணர்வுக்கு ஆளாகிறோம். அவர்களோ சலுகை தர வேண்டாம்; ஆனால் சந்தர்ப்ப சூழலைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடிக்கிறார் கள். நம் கோபம் வெளிப்பட வேண்டிய நேரம் இது. 

பொதுத் துறை நிறுவனங்கள் எனில் 
 _- எல்லோருக்கும் வங்கி சேவை_ 
- _எல்லோருக்கும் காப்பீடு_ 
- _எல்லோருக்கும் கல்வி_ 
- _எல்லோருக்கும் மருத்துவம்_ 
என்று பொருள்.

ஆகவே சாமானிய மக்களின் மனதோடு பொதுத்துறையை காக்கும் போராட்டங்கள் இயல்பாகவே ஒட்ட வேண்டும். ஒட்டும். 

ஒண்ணா குறி வைக்கப்படுகிறோம்! ஒண்ணா எதிர் கொள்வோம்!

பொதுத்துறை பாதுகாப்பு என்ற கோரிக்கை சில நேரம் மக்களிடம் ஈர்ப்பை உருவாக்குவதில்லையே! எப்படி அவர்களின் ஆதரவைப் பெறுவது? மக்களின் ஒரு பகுதியினரிடம் இப்படி எண்ணங்கள் இருக்கலாம்.  இரண்டு நாள் வேலை நிறுத்தம் இந்திய உழைப்பாளி மக்களின் மகத்தான சங்கமம். இதை வெற்றியாக்க அறிவார்ந்த பங்களிப்பை வழங்குவதும், மக்கள் கருத்தை திரட்டுவதுமான பொறுப்பு மத்திய தர ஊழியர்களுக்கு உண்டு.  பொதுத் துறை தனியார்மயத்திற்கு  நட்டம், திறமைக் குறைவு, நுகர்வோர் சேவை... இப்படி பல காரணங்கள் 1990 களில் இட்டுக் கட்டப்பட்டன. மக்களில் ஒரு பகுதியோ, சில பிரச்ச னைகளில் பெரும் பகுதியோ இந்த பிரச்சாரத்திற்கு இரையா னார்கள். இப்பவும் இதை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்.  ஏர் இந்தியா மீண்டும் டாடா கைகளுக்கு போனதும் ஒரு காணொளி சுற்றுக்கு வந்தது. அதில் விமானத்திற்குள் டாடா கைகளுக்கு வந்ததை மகிழ்ச்சியோடு அறிவிக்கப்படுகிற காட்சி இருந்தது. அமர்ந்திருந்த பயணிகள் கரவொலி எழுப்பு வார்கள். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே,  உக்ரைனில் இந்திய மாணவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தவித்து நிற்கும் போது அவர்களை கொண்டு போய் சேர்க்க அரசுக்கு சொந்தமான ஒரு விமானம் கூட இல்லை. தனியார் விமான நிறுவனங்கள் 26000 கட்டணத்தை 1,50,000 வரை ஏற்றி விட்டார்கள். டாடாவுக்காக கைதட்டியவர்கள் யோசிப்பார்க ளா? அவர்கள் உயர் தட்டு மக்கள். இயல்பாகவே தனியார் மயத்தை ஆதரிப்பவர்கள். அவர்களைக் கூட விடுங்க.

சாதாரண மக்கள் கூட வயர் மேன் மேல் உள்ள கோபத்தி லும், கண்டக்டர் மேல் உள்ள கோபத்திலும் இந்த இ. பி,  பஸ் எல் லாம் தனியார் கைக்கு போகனும் என்று சாபம் விடுகிறார்கள்.  அண்மையில் மதுரை சோக்கோ டிரஸ்ட் ஏற்பாடு செய்த மாணவர்கள் பயிலரங்கு ஒன்றில் கருத்துரையாளராக பங்கேற் றேன். நான் பேசத் துவங்குவதற்கு முன்பாக மாணவர்களிடம், யார் யார் தனியார் மயத்தை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டேன். ஐந் தாறு மாணவர்கள் கை தூக்கினார்கள். காரணம் கேட்டேன்.  - சேவை சரியில்லை, இழுத்தடிக்கிறார்கள், அரசு மருத்துவ மனைக்கு போனால் அலைய விடுகிறார்கள்... தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் இருக்கிறது... தனியார் நிறுவனங்களில் புன் முறுவலோடு சேவை செய்கிறார்கள் என்று பல காரணங்க ளை அடுக்கினார்கள்.  

நான் அவர்களிடம் கேட்டேன். 

செல்போன் வாங்குகிறீர்கள், வாங்குன அன்றே பழுது ஆகி விடுகிறது, வாங்குன கடைக்கு போனா விக்கிற வரைதான் இங்கே, அப்புறம் சர்வீஸ் சென்டருக்கு போங்க என்று அலைய விடுவதில்லையா? உங்க வீட்டுல வாசிங் மெஷின் பழுது ஆனா டோல் பிரீ நம்பர்ல போட்டு சர்வீசுக்கு புக் பண்ணுனா 24 மணி நேரத்துல எங்க டெக்னீசியன் வருவாருண்ணு சொல்லி விட்டு அப்புறம் ரெண்டு நாளு, மூணு நாளு அலைஞ்ச அனுபவம் இல்லையா?

 தனியார் மருத்துவமனையில சாதாரணமா போனா சிரிச்சு சிரிச்சு கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு டெஸ்ட் எடுத்து உங்க டெபிட் கார்ட பெரிசா தேய்க்க விடுறதில்லையா? உங்கள் நலத்திற்காக நாங்க காத்திருக்கிறோம்னு நாலைஞ்சு டாக்டருங்க விருந்துக்கு கூப்பிடுறது மாதிரி பண்ணுன விளம்பரம் எல்லாம் கோவிட் ஃபர்ஸ்ட் வேவ் காலத்துல காணாம போயிடுச்சே... சாதாரண டாக்டருங்க வீட்டுல கூட ஒரு சிவப்பு விளக்கு இரவு பூரா ஒரு காலத்துல எரியும், எந்நேரமும் அவசரத்துக்கு கதவ தட்டலாம்னு... ஆனா இவ்வளவு பெரிசு பெரிசா கார்ப்பரேட் ஆஸ்பிடல் வந்த பொறகு கோவிட் பெருந் தொற்று காலத்துல நோயாளிகளை உள்ளே விடாம கதவை மாதக் கணக்குல இழுத்து அடைச்சத பாக்கலியா! மிகவும் வசதி படைத்தவர்கள் கூட கவர்ன்மென்ட் ஆஸ்பிடல் வாசலில் அட்மிட் ஆக காத்துக் கிடைக்கவில்லையா?  

சிரிச்சு சிரிச்சு மக்கள் சேமிப்ப வாங்குன தனியார் நிதி நிறு வனங்கள் துவங்கி பெரிய தனியார் வங்கிகள் வரை திவால் ஆகவில்லையா? இப்பவும் என்ஜினீயரிங் கவுன்சிலிங் என்றால் முதலில் அரசின் கைவசம் உள்ள அண்ணா பல்க லைக்கழகத்தைதானே தெரிவு செய்கிறோம்! தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் கடைசி வரை நிரம்புவதில்லையே! அரசு வங்கி, அரசு போக்கு வரத்து, அரசு பள்ளிகள், அரசு காப்பீடு எல்லாம் இல்லாவிட்டால் இந்த சேவைகள் எல்லாம் சாதாரண மக்களுக்கு, கிராமங்க ளுக்கு போய்ச் சேர்ந்திருக்குமா? அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் இல்லாவிட்டால் ஏழைக் கர்ப்பிணிகளில் எத்தனை பேருக்கு சுகப் பிரசவம்  ஆகும்? 25 சதவீதம் தடுப்பூசிகளை நீங்க போடுங்கன்னு தனியார் மருத்துவமனைகள் கிட்ட அரசு கொடுத்தா 4 சதவீதம் கூட போடல... “பொணத்த கட்டிய ழும் போதும் தாண்டவக் கோனே! பணப் பொட்டி மீது கண் வையடா தாண்டவக் கோனே!” இப்படித்தானே கோவிட் காலத்துல கூட தனியார்கள் செயல்பட்டார்கள்? 

இதைப் பற்றி எல்லாம் என்ன நினைக்கிறீர்கள்! என்று கேட்டேன். ஆழ்ந்த அமைதியோடு கேட்டார்கள். ஆனாலும் அந்த மாணவர்கள் முகத்தில் முழு ஒப்புதல் தென்படவில்லை.  அப்புறம், நீங்க அரசுத் துறை பற்றிச் சொல்கிற குறைக ளை நான் மறுக்கவில்லை என்று சொன்னேன். அப்போது தான் அந்த மாணவர்கள் முகத்தில் கொஞ்சம் இசைவு தெரிந்தது. நான் அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன்.  அரசுத் துறையில் குறை என்றால் நமக்கு கோபம் வரு கிறது. ஆனால் தனியார் துறைகளின் குறைகள் பற்றி  அதிகம் கோபம் வருவதில்லை. யாரும் அதையெல்லாம் தேசியமயம் ஆக்கணும்னு சொல்றதில்லை. என்ன காரணம்! அரசு நிறுவனம்னா அது நம்ம சொத்துன்னு ஆழ் மனசில நினைக்கிறோம். உரிமை இருக்குன்னு நினைக்கிறோம். அதனால கோபப்படுறீங்க. சரியா?

அப்படின்னு சொன்னவுடனே மாணவர்கள் மத்தியில் கொஞ்சம் வெளிச்சம். தொடர்ந்து பேசினேன். இந்த குறைகள சரி செய்யனும். பணிக் கலாச்சாரம் வளர வேண்டும். தொழிற் சங்கங்கள் பொருளாதார கோரிக்கைகளுக்காக போராடும் போது பணிக் கலாச்சார மேம்பாடையும் சேர்த்து பேச வேண்டும். மின்னணு சேவைகளை பலப்படுத்தலாம். சேவைக ளுக்கான நேர வரையறை நிர்ணயிக்கப்படலாம். இப்படி சேவைகளை மேம்படுத்த வழிகளை சிந்திக்க வேண்டும். மக்களின் ஆதரவை பெற வேண்டும். ஆனால் சேவைக் குறைபாடுக்கு தனியார் மயம் மாற்று அல்ல என்று கூறினேன். மூட்டை பூச்சிக்கு பயந்து போயி வீட்டைக் கொளுத்த முடியுமா - என்று கேட்டேன்.  கடைசியில் ஒரு மாணவி பேசினார்.

அரசுத் துறைகளில் குறைகள் உள்ளன. அதை நீங்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அதைக் களைய வழிகளை சொன்னீர்கள். எப்படியானாலும் அப் பிரச்சனைகளுக்கு தீர்வு தனியார்மயம் அல்ல என்பதை நிறைய உதாரணங்கள் மூலம் பொறுமையோடு விளக்கினீர்கள். நன்றி! என்றார்.  இப்படி உரையாடல்கள் தேவை. அதை விட முக்கியம், மக்களின் நெருக்கத்தைப் பெற ஒவ்வொரு துறையிலும் முயற்சியும் வேண்டும். ஒன்றாக குறி வைக்கப்படுகிறோம். ஒன்றாக கோர்ப்போம் என்று மக்களிடம் சொல்ல வேண்டும். 

அரசு போக்குவரத்து பஸ்கள்  இனி பெட்ரோல் பங்கு வரிசையில்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மொத்த விலை க்கு வாங்க கூடிய டீசலை இனி சில்லரை விலையில் வாங்கப் போவதாக  தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதன் பின்புலம் என்ன?  பொதுவாக மொத்த விலை, சில்லரை விலையை விடக் குறைவாக இருக்குமென்று நினைப்போம். ஆனால் டீசல் மொத்த விலை ஏற்கெனவே சில்லரை விலையை விட லிட்டரு க்கு ரூ. 6 அதிகமாகவே இருந்தது. தற்போது லிட்டருக்கு ரூ .25 ஐ எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் உயர்த்த ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. சர்வதேச விலை உயர்வை ஈடு கட்ட என்று காரணம் கூறப்பட்டுள்ளது. சர்வதேச விலை இறங்கினால் இங்கே விலை இறங்குமா என்பது வேறு கேள்வி. 

தமிழ்நாட்டில் 21,700 அரசு போக்குவரத்து பேருந்துகள் 8 கழகங்களால் இயக்கப்படுகின்றன. இதற்கு ஒரு நாளைக்கு 16 லட்சம் லிட்டர் டீசலை தமிழக அரசு வாங்கி வருகிறது.  தற்போது மொத்த விலை லிட்டருக்கு ரூ .113. ஆனால் பங்குகளில் சில்லரை விலை லிட்டருக்கு ரூ .92. ஒரு லிட்டருக்கு ரூ .21 அதிகம் எனில் 16 லட்சம் லிட்டருக்கு எவ்வளவு இழப்பு பாருங்கள். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 3.50 கோடி. மாதத்திற்கு சுமார் 100 கோடி. இப்படியே வருடத்திற்கு போனால் 1200 கோடி. அதனால்தான் தமிழ்நாடு அரசு மொத்த விலைக்கு வாங்கா மல் சில்லறை விலைக்கு டீசல் போட்டுக் கொள்வது என்று இந்தி யன் ஆயில் கார்ப்பரேசன் உடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு பங்குகளின் வரிசையில் அரசுப் பேருந்துகள் நிற்க வேண்டியிருக்கும். இந்த முடிவை எடுக்காவிட்டால் தமிழ்நாடு அரசு கி.மீ க்கு ரூ. 6 அதிகமாக செலவிட வேண்டி வரும்.  சந்தையின் சுதந்திரம் இதுதான். அதற்கு சாமானிய மக்கள், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்... இது பற்றி எல்லாம் கவலை இல்லை. 

ஏற்கனவே மாநில அரசுகளுக்கு வர வேண்டிய வரி பங்கை வரியாக போட்டால் தர வேண்டுமென்று செஸ், சர்சார்ஜ் எனப் போட்டு மறுத்து வருகிறது. இப்போது எண்ணெய் வர்த்தக நிறுவனங்களுக்கு பச்சைக் கொடி காட்டி விலையை ஏற்றி பாடாய்ப்படுத்துகிறது.  கேட்டால் எண்ணெய் வர்த்தக நிறுவனங்களின் சுதந்திரம் என்பார்கள். ஆனால் ஏதாவது தேர்தல் வந்தால் மட்டும் விலை கள் ஏறாமல் ஆணி அடிச்ச மாதிரி அப்படியே நிற்கும். சர்வதேச சந்தையில் விலை கூடினாலும்... ஓட்டுப் போட்ட மை காய்வ தற்குள் மீண்டும் சுதந்திரம் வந்து விடும்.  மாநில அரசு பஸ்களை பங்குகளில் கியூவில் நிறுத்தி இருக் கிற ஒன்றிய அரசின் அணுகுமுறையை என்ன சொல்வது?

மறு தேசிய மயம் ஸ்காட்லாந்து அனுபவம்

உலகம் முழுவதும் தனியார் மயம் அமலாகும் போது அதை ஒரு நாட்டில், துறையில் மட்டும் தனித்து நிறுத்த முடியுமா? இப்படி சில பேர் கேட்கிறார்கள். உலகம் முழுவதும் தனியார்மயக் கொள்கைகள் ரிவர்ஸ் கியரில் போனதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. மறு தேசிய மயம் ஆன உலக அனுபவங்கள் உண்டு.  இதோ இன்னும் ஒரு வாரத்தில் உலகம் ஒரு மறு தேசிய மயத்தை சந்திக்கவுள்ளது. ஆம், தனியார்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட ரயில் சேவை ஏப்ரல் 1, 2022 அன்று முதல் மீண்டும் ஸ்காட்லாந்து அரசின் கைகளுக்கு வருகிறது. என்ன காரணங்களால் இம்முடிவு எடுக்கப்படுகிறது? 

நாடாளுமன்றத்தில் பேசிய ஸ்காட்லாந்து போக்குவரத்து அமைச் சர் ஜென்னி கில்ருத் கூறியிருக்கிற வார்த்தைகள் இவை.  “மக்கள் தாங்கக் கூடிய கட்டணம் - நீடித்த செயல்பாடு - நுகர்வோர் நலன்” அமைச்சர் இந்த மூன்று காரணங்களை கூறுகிறார் எனில் என்ன பொருள்? இந்த மூன்றையும் தனியார் கைகளில் இருந்த ஸ்காட் ரயில்வே நிறைவேற்றவில்லை என்பதுதானே. இதை விட இன்னும் ஒரு முக்கியமான காரணமும் சொல்லப்பட்டுள்ளது.  “பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்” - என்ன பொருள்? லாபம் தவிர தனியார்க்கு வேறு  எந்த கவலையும் இருக்காது என்று பொருள். 

இதை நடத்தி வந்த டச்சு தனியார் நிறுவனமான ஆபெல்லி யா மார்ச் 31 க்கு மேல் ஸ்காட் ரயிலை ஓட்டாது. மறு தேசிய முடிவு அதிகாரப் பூர்வமாக ஏப்ரல் 1, 2022 லிருந்து எடுக்கப்பட்டாலும் “கோவிட்” வந்தவுடனேயே தற்காலிக தேசிய மயம் ஆக்கப் பட்டது. பயணிகள் குறைந்தால் தனியார்கள் ரயிலை எடுப்பார்க ளா? ஆனால் பயணம் போக மக்கள் என்ன செய்வார்கள்! அதைப் பற்றியும் தனியாருக்கு என்ன கவலை! ஆகவே அரசாங்கம் எடுத்து நடத்த வேண்டி வந்தது.  ஆனால் கோவிட் காலத்திற்கு முன்பே தனியார் ரயிலுக்கு எதிர்ப்பு வர ஆரம்பித்து விட்டது. ரயில்கள் திடீர் என்று ரத்தா வது, மோசமான செயல்பாடு ஆகியன எல்லாம் மக்களை கோபப்படுத்தி இருந்தது.  தற்போது தேசிய மய முடிவு நிறைய எதிர்பார்ப்புகளை உரு வாக்கியுள்ளது. கட்டணங்கள் குறையும், சுற்றுச் சூழல் பாது காக்கப்பட இம்முடிவு உதவுமென்ற கருத்துக்கள் வந்துள்ளன.  ஸ்காட்லாந்து அமைச்சர் சொல்லியுள்ள இன்னொரு முக்கிய கருத்து,  “தொழிற் சங்கங்கள் மிகுந்த அக்கறையோடு இருப்பவை. அவர்களோடு பேசுவோம். நல்ல எதிர்கால செயல்பாட்டை உறுதி செய்வோம்”. - இந்த வார்த்தைகள் நமது ஆட்சியா ளர்கள் காதுகளில் விழுகிறதா?

கவச குண்டலம் இழந்தால்  கர்ணன் உயிர் நிலைக்காது

விலைவாசி உயர்வை இந்த ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த இயலாதா?உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிகிற வரை பெட்ரோலியப் பொருட்கள் விலைகள் உயரவே இல்லையே! தேர்தலில் மக்கள் கோபம் பிரதிபலிக்கும் என்பதால்... மக்களின் கவனம் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டது.  பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் வெற்றி யும் கிடைத்தது. தேர்தல் முடிந்தவுடன் ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் கருத்து என்பது சமூகத்திற்கு கவச குண்டலம் மாதிரி, அதை திசை திருப்பலில் இழந்தால் ஆட்சியாளர்களின் அம்புகள் தாக்க ஆரம்பித்து விடும்.

கடைசியாக அக்டோபரில் சமையல் கேஸ் விலைகளும்,  நவம்பரில் பெட்ரோலிய விலைகளும் உயர்த்தப்பட்டு இருந்தன. தேர்தல் காலம் கனாக் காலம். நாலரை மாதம் அம்பறாத் துணி யில் தூங்குவது போல நடித்த அம்புகள் இப்போது நாணில் தொடுக்கப்பட்டு மக்களை நோக்கி ஏவப்படுகின்றன. சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் அதிகரித்து விட்டது. பெட்ரோல் டீசல் விலைகள் லிட்டருக்கு 80 பைசா கூடி விட்டது. ஏற்கெனவே மொத்த டீசல் கொள்முதல் விலைகள் கடந்த வாரம் ரூ. 25 உயர்த்தப்பட்டன. தேர்தலுக்கு முன்பாக எக்சைஸ் வரிகள் குறைக்கப்பட்டன. முதுகில் விழுந்த காயங்களுக்கு கொஞ்சம் ஒத்தடம் மாதிரி. ஒத்தட சுகத்தில் ஓட்டு போட்ட மக்களுக்கு இதோ சவுக்கு மீண்டும் தயார்.

இந்த பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுகள் ஏற்கெனவே 6 சதவீதத்தை கடந்த சில்லரை விலை பண வீக்கத்தை இன்னும் அதிகமாக்கும். நுகர்வை சுருக்கும். பொதுப் போக்குவரத்தை சீரழிக்கும். அரசு சாமானியர் மீது கைவைப்பதற்கு காரணம் பெரும் கார்ப்பரேட்டுகள், பணக் காரர்கள் மீது கை வைக்க திராணியும், அரசியல் உறுதியும் இல்லாததுதான். கார்ப்பரேட் வரிகள், செல்வ வரிகள், வாரிசுரிமை வரி... இப்படி நிறைய வழி இருந்தும்... 

ஆகவே வலி தாங்காமல் அலறுவது தீர்வைத் தராது. மாற்று வழிகளுக்கான நமது குரல் களத்தில் ஓங்கி கேட்க வேண்டும். கர்ணன் உயிர் போன்றது மக்களின் வாழ்வுரிமை. போராட்டமும், மக்கள் கருத்துமே கவச குண்டலங்கள்..  மார்ச் 28, 29 -  இரண்டு நாள் வேலை நிறுத்தம் அதற்கான குரல்... அதற்கான களம்.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. கருங்காலி நாயே, உனக்காகவும் சேர்த்துத்தாண்டா இந்த வேலை நிறுத்தம்

      Delete