Sunday, March 20, 2022

காஷ்மீர் – பண்டிட்டுக்களுக்கு மட்டுமா பிரச்சினை?

  


மோடி விளம்பர தூதுவராக செயல்பட்டு வரும் “காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தில் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறிய பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது.

 மணிரத்தினத்தின் “பம்பாய்” படத்தை விட மோசமான படமாகவே இப்படம் இருக்கும் போல இருக்கிறது.

 என்ன பம்பாய் மோசமான படமா?

 ஆம். நிச்சயமாக.

 அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு மும்பையில் சிவசேனாவும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களும் இஸ்லாமியர்களை தேடித் தேடித் தாக்கினார்கள். அதன் பின்புதான் மும்பை வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. முதல் கலவரத்தின் போது இஸ்லாமியர்கள்தான் தாக்கப்பட்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். ஆனால் இரு தரப்பும் கலவரம் செய்ததாகவும் பாதிப்புக்களைப் பார்த்து பால் தாக்கரே கண்ணீர் வடித்ததாகவும் பம்பாய் படத்தில் கதை விட்டிருப்பார்.

 அது போன்ற கதையாகவே “காஷ்மீர் ஃபைல்ஸ்” படமும் உள்ளது போல.

 பண்டிட்டுகள் வெளியேறிய சமயத்தில் காஷ்மீரில் ஜனநாயக அரசு செயல்படவில்லை. பாஜககாரர் ஆன ஜக்மோகன்சிங் தான். அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அது பற்றி ஏன் படம் பேசவில்லை?

 தீவிரவாதத் தாக்குதல்களில் அதிகம்  கொல்லப்பட்டது யார்?

 ராணுவத்தால் தொடர்ந்து கொல்லப்படுவது யார்?

 பேராசிரியர் தோழர் அ.மார்க்ஸ் அவர்களின் பதிவு இக்கேள்விகளுக்கு விடை தரும். அப்பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப் படமும் பிரதமர் மோடியும்

***** <><><> *****
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தைப் போய்ப் பார்த்துப் பாராட்டி மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி. பாராட்டியதோடு நிற்கவில்லை.பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்ட நிகழ்ச்சியில் இந்தத் திரைப்படத்தை விமர்சிப்பவர்களைக் கடுமையாகக் கண்டித்தும் உள்ளார். ”கருத்துச் சுதந்திரம் பற்றி முழங்கும் ’ஜமாத்தார்கள்’ அத்தனை பேர்களும் கடந்த ஐந்தாறு நாட்களாகக் கொதித்துக் கொண்டுள்ளனர்” எனக் கிண்டல் அடித்துள்ளார். படத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையா பொய்யா என்கிற அடிப்படையில் படத்தை விமர்சிக்காமல் ”அந்தப் பட்த்தை அவதூறு செய்யும் சதி ஒன்று நடக்கிறது” – என்று கருத்துச் சுதந்திரம் பற்றிப் பூரித்துப் பொங்கியுள்ளார்.

எப்படியோ ’கருத்துச் சுதந்திரம்’ என்றொரு சொல் உள்ளதை நினைவில் வைத்திருப்பதற்காக அவருக்கு நன்றி சொல்லும் நாம் இந்தப் படத்தை விமர்சிப்பவர்களைப் பார்த்து “ஜமாத்தார்கள்” என்கிற சொல்லைக் கேலியாகக் குறிப்பிட்டுள்ளதையும் நாம் பார்க்காது இஎஉக்க இயலாது. “ஜமாத்” எனும் சொல் முஸ்லிம் மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லிம் சமூகம் வாழும் நாடு நம்முடையது. அப்படியான ஒரு நாட்டின் ஆகப் பெரும் தலைவர் பிரதமர். அவர் தன் குடிமக்கள் பாவிக்கும் ஒரு சொல்லை, இந்த அளவிற்கு கீழிறங்கிக் கேலி செய்யும் ஒரு அபத்தம் எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும் சாத்தியமில்லாத ஒன்று என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை அவர்களின் பண்டிகை நாளில்பிரதமர் விருந்தளிப்பது எனும் ஒரு ஜனநாயக நெறியைத் தான் பதவி ஏற்ற கையொடு ரத்து செய்தவர் நம் பிரதமர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

காஷ்மீர்ப் பண்டிட்கள் வெளியேர நேர்ந்த சூழல் மிகவும் வருந்தத்தக்க ஒன்று. அவர்கள் மீதான ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் கடுமையாகக் கண்டிக்கத் தக்கவை. அதன் பின்னணி அதற்குக் காரணமான காஷ்மீர மக்களின் மீது இன்றளவும் மேற்கொள்ளப்படும் இராணுவ அத்துமீறல்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அப்பாவி மக்களை ஆயுதம் தாங்கியோர் கொல்லும் கொடூரத்தை யார் செய்தாலும் நாம் மனதார எதிர்க்கிறோம்.

இது தொடர்பாக மேற்கொண்டு பேசும் முன் இப்படி அந்த வன்முறையக் கண்டிக்க பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு இருக்கும் மனத்திடத்தை நான் மனதார வியக்கிறேன். இவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் இரண்டு நாட்கள் முழுவதும் அவரது ஆளுகையில் வாழ்ந்த அவரது முஸ்லிம் குடிமக்களில் சுமார் ஆயிரத்தும் மேற்பட்டோர் கொடூரமாக்க் கொல்லப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். கர்ப்பிணிகளின் வயிற்றிலிந்து கருக்கள் கீறி எடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. இல்லையா? சொல்லுங்கள். நான் ஏதும் மிகைப்படுத்திச் சொல்கிறேனா? முதலமைச்சராக இருந்த அவர் அந்த வன்முறைகளைக் கண்டிக்காத்தோடு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடிமக்களைப் பார்த்து ஆறுதல் சொல்வதை ஒரு சடங்காகக் கூட நிகழ்த்தவில்லை.

இல்லையா?

நான் சொல்லியுள்ளவற்றில் ஏதேனும் இம்மியேனும் மிகைப் படுத்தல்கள் உண்டா? இவர் இன்று இந்தத் திரைபடத்தை விமர்சிப்பவர்களைப் பார்த்துக் கேலி செய்கிறார். உண்மையிலேயே நம் பிரதமரின் நெஞ்சுரம் வியக்கத் தக்கதுதான்.

இருக்கட்டும் மேலே செல்வோம்.

காஷ்மீர்த் தீவிரவாதிகள் பண்டிட்கள் மீது மேற்கொண்ட வன்முறைகள் கண்டிக்கத் தக்கவை என்பதில் ஐயமில்லை என்றேன். அவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதில் எந்தக் கருத்து மாற்றமும் கிடையாது. ஆனால் இத்துடன் ஆக அடிப்படியான சில உண்மைகளை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இப்படியாக அவர்கள் வெளியேறியதில் அன்றைய ஆளுனர் – அப்போது அங்கு ஆளுநர் ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது – ஜக்மோகனின் பங்கு குறித்து நடுநிலையுடன் எழுதப்பட்ட எந்த ஒரு ஆவணத்தை வேண்டுமானாலும் படித்துப் பார்த்தால் ஒன்றை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். தீவிரவாதம்தான் பண்டிட்கள் வெளியேறக் காரணமாக இருந்தது என்றாலும் அதைப் பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியதில் ஜக்மோகனின் பங்கை எல்லோரும் பதிவு செய்துள்ளனர். அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பைக் காட்டி வாழ்ந்தவர் அவர். எனது “காஷ்மீர் – என்ன நடக்குது அங்கே” எனும் நூலில் நான் விரிவாக அவரது திட்டமிட்ட சதிகளைச் சொல்லியுள்ளேன். நேரடியாகச் சென்று மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட அந்த நூல் இதுவரை நான்கு பதிப்புகள் வந்துள்ளன. அதில் விரிவாக இதைப் பேசியுள்ளேன்.

அப்படி ஊக்குவிக்கப்பட்டு வெளியேறிய பண்டிட்களை காஷ்மீர முஸ்லிம் மூத்த தலைவர்கள் சென்று நேரில் சென்று சந்தித்து, “நீங்கள் போக வேண்டாம். உங்கள் பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம். தயவு செய்து வாருங்கள்” என வேண்டிக் கேட்டுக் கொண்ட வரலாறுகள் எல்லாமும் அங்கு உண்டு.

ஊக்குவித்துத்தான் அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என நான் சொல்ல வரவில்லை. ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளை, அவர்கள் நம்பாமற் போனதில் பொருள் இருந்தது. ஆனால் அரசே அப்படி ஆசை காட்டி ஊக்குவிக்கும் அபத்தம் எனக்குத் தெரிந்து உலகில் வேறெங்கும் நடந்ததாகத் தெரியவில்லை.'
இந்தப் பிரச்சினையில் நாம் இன்னொரு உண்மையையும் கவனத்தில் கொள்ளல் அவசியம். இந்திய அரசுக்கு ஏதிலியர் (அகதிகள்) கொள்கை என ஏதும் கிடையாது. இன்றுவரை கிடையாது. அதனால் பொது நெறிகள் ஏதும் இன்றி ஒரு நாட்டிலிருந்து வரும் அகதிகளுக்கு அதிகச் சலுகைகள் அளிப்பதும், இன்னொரு நாட்டிலிருந்து வருபவர்களை அடிப்படை வசதியற்ற முகாம்களில் அடைப்பதும் இங்கு சர்வ சாதாரணம். அவ்வாறு கொடுமையான முகாம்களில் அடைக்கப்பட்ட ஏதிலியர்களில் இலங்கைத் தமிழர்களும், வங்கதேச அகதிகளும் அடக்கம். ஆனால் திபெத்திலிருந்து அகதிகள் வரும்போது அவர்கள் ஒப்பீட்டளவில் சிறப்பாக கவனிக்கப் படுகின்றனர். ஏனெனில் திபேத்தியர்கள் இந்தியாவின் எதிரியான சீன அரசால் துன்புற்று வருபவர்கள். அதே போலத்தான் காஷமீர பண்டிட்கள் வெளியேறவும் ஊக்குவிக்கப்பட்டது மட்டுமின்றி ஒப்பீட்டளவில் அவர்கள் சிறப்பாக்க் கவனிக்கவும் பட்டனர். ஜம்முவிலும், டெல்லியிலும் ஒப்பீட்டளவில் ஓரளவு வசதியுடன் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர்,

இங்கு நான் ஒன்றை வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன். என்னதான் வசதிகள் அளிக்கப்பட்டாலும் அகதி வாழ்வு கொடூரமானது. பண்டிட்கள் இந்தச் சலுகைகளுக்காக விரும்பிச் சென்றார்கள் என நான் சொல்ல வரவில்லை. இந்த பண்டிட் அகதிகள் பற்றி அவர்களில் ஒருவரான ராகுல் பண்டிதா பதிவு செய்துள்ள சோகக் கதைகளை எல்லாம் நான் படித்துக் கண்ணீர் விட்டுள்ளேன். இதே முகநூல் பக்கங்களில் பதிவு செய்தும் உள்ளேன்.

பிரதமர் அவர்களே! நான் சொல்லவருவது இதுதான்.

பண்டிட்கள் வெளியேற்றப் பட்டதில் தீவிரவாதத்திற்கு உள்ள பங்கையும், பண்டிட்கள் மீள்குடியேற்றப் பட வேண்டும் என்பதையும் யாரும் மறுக்க இயலாது. ஆனால் பண்டிட்களை வெளியேறச் சொல்லி ஊக்குவித்ததில் இந்துத்துவ மனநிலையுள்ள அன்றைய காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகனின் பங்கை நாம் மறந்துவிட இயலாது. சொல்லப் போனால் அதற்கு நாம் ஜக்மோகனை மட்டும் சுட்டிக் காட்டியும் பயனில்லை. இந்திய அரசுகள் அதைச் செய்யன.

வெளியேறிய பண்டிட்களுக்கு டெல்லியில் முக்கிய கடைத்தெருக்களில் கடைகள் ஒதுக்கப்பட்டன. குடியிருப்புகள் அளிக்கப்பட்டன. அரசு ஊழியர்களாக அவர்கள் இருந்திருந்தால் அவர்களுக்கு முழு ஊதியமும் அளிக்கப்பட்டது.

ஆனால் குஜராத்தில் என்ன நடந்தது? கொலைகள் ஆட்சியாளர்களால் நியாயப்படுத்தப்பட்டன. மத்திய அரசு அளித்த உதவிகளும் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்காமல் திருப்பி அனுப்பப்பட்டன.

இடம்பெயர்க்கப்பட்டவர்கள் வேலைகளை இழந்தனர். குழந்தைகள் கல்வியை இழந்தன. முஸ்லிம் பெண் குழந்தைகள் பள்ளிக் கூடம் போவது நிறுத்தப்பட்டது, வழக்கு நடந்தபோது சாட்சி சொல்ல வந்த முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்திலேயே குண்டர்களால் மிரட்டப்பட்டனர்.

வன்முறைகளின் அளவும் கூட இரண்டிலும் ஒன்றல்ல. ஒரே நேரத்தில் பெரிய அளவு பண்டிட்கள் காஷ்மீர்த் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது என்பது நதிமார்க் படுகொலைதான., 24 பண்டிட்கள் அங்கு கொல்லப்பட்டனர். குஜராத்தில் இரண்டு மூன்று நாட்களுக்குள் 1000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட விதமும் அத்தனை கொடூரம். பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான ஈஷான் ஜாஃப்ரி அவர் குடும்பத்தின் முன் கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இல்லையா? சொல்லுங்கள். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நான் சொல்வதில் இம்மியும் மிகை உண்டா?

காஷ்மீரில் இது மட்டுமா நடந்த்து?. கொல்லப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டவர்கள் தவிர அங்கு காணாமலடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சம் பேர். அப்படிக் காணாமல் அடிக்கப்பட்டவர்கள் மரணக் கணக்கிலும் சேர்க்கபடாததால் அடுத்த ஏழாண்டுகள் வரை அரசு அளிக்கும் கொஞ்ச நஞ்ச இழப்பீடும் அவர்களுக்குக் கிடையாது. “அறை விதவைகள்” என்றொரு சொல்லாக்கத்தை நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்க்களா? உலகில் எந்த மொழியிலாவது அதற்கு இணையான சொல் உண்டா? ஆனால் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் உண்டு பிரதமர் அவர்களே. இப்படி செத்துப் போனவர்கள் கணக்கில் வராமல் உயிருடனும் இல்லாமல் போனவர்களின் விதவைகளுக்குத்தான் அந்தப் பெயர். என்னுடைய நூலில் அதையும் விரிவாகப் பதிவு செய்துள்ளேன். அப்படியானவர்கள் பங்குபெற்ற ஒரு ஆர்பாட்டத்தையும் நேரில் கண்டுள்ளேன்.

இறுதியாக மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். இவ்வளவையும் சொல்வது பண்டிட்களை வெளியேற்றியதை நியாயப்படுத்துவதற்காக அல்ல. குஜராத் வன்முறைகளை எல்லாம் மறந்துவிட்டு பண்டிட்களின் வெளியேற்றத்தைச் சொல்லி காஷ்மீர மக்களுக்கு அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் அழித்துத் துவம்சம் செய்ததையும் ஒன்றாகச் சமப்படுத்திப் பேச வேண்டாம். பண்டிட்களின் பிரச்சினையுடன் ஒப்பிட்டு காஷ்மீர் மக்களுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகத்தை நியாயப்படுத்த வேண்டாம்

பிரதமர் அவர்களே!
இந்தக் குடிமகனிடமிருந்து ஒரு வேண்டுகோள்.

தயவு செய்து இப்படி ”ஜமாத்தார்கள்” என்கிற சொல்லை எல்லாம் கேலியாகப் பயன்படுத்தி உங்கள் குடிமக்களில் ஒருசாரரை இழிவு செய்யாதீர்கள். அது உங்களுக்கு அழகாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அமர்ந்துள்ள நாற்காலிக்கு அது அழகல்ல.

 

மோடி வகையறாக்கள் ஒரு விஷயத்தை செய்கிறார்கள் என்றால் அது எப்போதுமே தேவையில்லாத ஆணியாகவேதான் இருக்கும் என்பதை தோழர் அ.மார்க்ஸ் அவர்களின் பதிவு உணர்த்துகிறது.

 வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலும் பின்பு மோடியின் ஆட்சிக்காலத்திலும் ஏன் பண்டிட்டுகள் காஷ்மீரில் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு சங்கிகளிடம் பதில் உண்டா?

 “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்பது இளம் புரட்சியாளன் பகத்சிங் எழுதிய நூல். காஷ்மீரில் இன்று தீவிரவாத இயக்கங்களில் உள்ளவர்கள் யாராவது “நான் ஏன் தீவிரவாதி ஆனேன்?” என்று புத்தகம் எழுதினால் அவர்கள் குற்றம் சுமத்துவது ராணுவத்தின் அராஜகமும் அடாவடியும் என்றே இருக்கும்.

 காஷ்மீர் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களின் அனுபவங்களை கேட்டதுண்டா? சோதனைச்சாவடிகளில்  வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை பரிசோதித்து விட்டு பயணம் செய்பவரில் ஒரு இந்துவும் ஒரு இஸ்லாமியரும் இருந்தால் இஸ்லாமியர் முகத்தில் மட்டும் டார்ச் அடித்துப் பார்க்கிற கொடுமை பற்றி கேட்டதுண்டா? சரியான புரிதல் இல்லாமல் ஒரு வாலிபன் இருந்தால் இந்த இழிவை அனுபவித்து ஆத்திரப்பட்டு எங்கே செல்வான்?

 மோடியை முட்டாள்தனமாக நம்புகிறவர்களை உசுப்பேத்தி விடவே எடுக்கப் பட்டுள்ள இந்த படத்தைப் பார்த்தும் சிந்திக்கும் திறனற்ற சில்லறைகள், சில்லறையை சிதறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தானும் கெட்டும் அடுத்தவரையும் கெடுக்கும் இந்த மதி கெட்டவர்கள் சாகும் வரை திருந்த மாட்டார்கள் என்பதுதான் துயரமான யதார்த்தம்.


2 comments:

  1. Pseudo-liberals are lamenting that Muslims have been portrayed negatively in it. Duffers, is there any law or SC order that it is mandatory to depict Muslims positively in every film or book? We have had enough of farcicalities vomited on-screen over the decades.
    if someone talks about kashmir, you divert with them with Gujarat narrative. funny guys. finally you are happy that justice is denied for both.

    ReplyDelete
    Replies
    1. அடடே, நீங்க ஏதோ நல்ல இந்தியன்னு நெனச்சேன். சங்கி இந்துத்துவா ஆசாமியா? இஸ்லாமிய வெறுப்பு நல்லா தெரியுதே! எத்தனை சினிமால சார் இஸ்லாமியர்களை நல்ல்படியா காண்பிச்சிக்கிட்டு இருக்காங்க? இஸ்லாமியர்கள் மீது பொதுப்புத்தியில் மோசமான சிந்தனையை வளர்த்ததே சினிமாக்கள்தான். உங்க பெயரை இந்தியன் என்று சொல்லாமல் இந்துத்துவ வெறியன் என்று மாற்றுங்கள்

      Delete