Thursday, March 10, 2022

இந்தியா . . . . . . . .தேசமா?

*சவலைக் குழந்தைகளின் தேசமா?*



 *நாளொரு கேள்வி : 09.03.2022*


தொடர் எண் : *646*
இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
##########################

*சவலைக் குழந்தைகளின் தேசமா?*

கேள்வி: வல்லரசு கனவு கண்ட தேசத்தின் குழந்தை உடல் நலம் எப்படி இருக்கிறது? 

*க.சுவாமிநாதன்*

இது *"நிதி அயோக்"* ஜூலை 2020 இல் வெளியிட்ட அறிக்கை அரசின் இணைய தளத்தில் கிடைக்கிறது.

2018, 2019, 2020 ஆண்டுகளின் அறிக்கைகள் மட்டுமே இணைய தளத்தில் உள்ளன. சத்துணவு குறைவு சம்பந்தமாக 2018 இல் கொண்டு வரப்பட்ட *"போஷன் அபியான்"* திட்டம் பற்றிய அறிக்கைகள் இவை. 2021 க்கு இன்னும் ஏன் இணைய தளத்தில் ஏற்றப்படவில்லை என தெரியவில்லை. 

சில திட்டங்களை கொண்டு வரும் போது அதன் தேவையை நன்கு விளக்குவதற்காக சில உண்மைகளை உருக்கமாக பேசுவார்கள். அப்படி 2020 *"Accelerating Progress on Nutrition in India"* அறிக்கையில் பக்கம் 13 இல் குறிப்பிடப்பட்டு இருப்பது இது. 

 _"சத்துணவு குறைவு என்பது பெருந்தொற்று காலத்தில் மிகுந்த கவனத்தைப் பெற வேண்டியுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் உடல்நலம். கோவிட் - 19 தொற்றின் இடர்களில் மற்ற நாடுகளின் - சீனா உட்பட - குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்படவில்லை. இந்த நாடுகள் சத்துணவுக் குறைவு எனும் சுமையை கொண்டிருக்கவில்லை. கூடுதலாக இந்தியாவில் நிமோனியா மரணங்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் நிகழும் இத்தகைய நிமோனியா மரணங்கள் சீனாவை விட ஐந்து மடங்கு அதிகம். இந்தியாவில் நிமோனியா அதிகம் இருப்பதற்கு காரணம் சத்துணவுக் குறைவு மிக அதிக அளவுகளில் இருப்பதுதான்."_ 

"போஷன் அபியான்" திட்டம் பெரிதாக பேசப்பட வேண்டும் என்பதற்காக வெளி வந்த உண்மைகள் இவை. 

2021 அறிக்கை இணைய தளத்தில் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு *"தகவல் உரிமைச் சட்ட கேள்வி"* (RTI) 2021 பற்றி பகிர்கிற உண்மை அதிர வைக்கிறது. இது *பெண்கள், குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம்* தந்துள்ள பதில் (தி இந்து நாளிதழ் 07.11.2021).

33 லட்சம் இந்தியக் குழந்தைகள் சத்துணவுக் குறைபாடுடன் இருக்கிறார்கள். அவர்களில் 17.76 லட்சம் பேர் மிகக் கடுமையான பாதிப்பு உள்ளவர்கள். 15.46 லட்சம் பேர் மிதமான பாதிப்பு உள்ளவர்கள். இது 14.10.2021 அன்றைய கணக்கு. 

இதில் *அதிர்ச்சி* என்னவெனில், கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களில் நவம்பர் 2020 - அக்டோபர் 2021 க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 91 சதவீதம் உயர்வு இருந்துள்ளது. அதாவது 9.27 லட்சத்தில் இருந்து 17.76 லட்சம் ஆக கடும் சத்துணவு குறைபாடு உள்ள குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் தகவல் திரட்டல் முறைமை இவ்விரு ஆண்டுகளில் வித்தியாசப்படுகிறது என்று விளக்கம் தரப்பட்டாலும் இரண்டு எண்ணிக்கைகளுமே அரட்டுகின்றன. 

இதில் *முதல் மூன்று* இடங்களில் மகாராஷ்டிரா, பீகார், குஜராத் மாநிலங்கள் உள்ளன. ஒன்று இவர்கள் ஆண்ட மாநிலம். இரண்டாவது இவர்களின் கூட்டணி ஆட்சி. மூன்றாவது அவர்களின் செல்ல மாநிலம். 

*நேருவால்தான்* இந்தியாவில் சவலை குழந்தைகள் உருவானார்கள் என்று வழக்கம் போல கூறி தப்பிக்கலாம். ஆனால் 2021 லிலும் இவ்வளவு சவலைக் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளார்களே. நேருவின் ஆவி காரணமாக இருக்குமோ என்னவோ! 

இந்த நிலைமைக்கும், 2021 அறிக்கை பொது வெளியில் காணப்படாததற்கும் நீங்களாக முடிச்சு போட்டால் கம்பெனி பொறுப்பல்ல. 

ஆனால் இத்தகைய லட்சணத்தில் *மாதம் 7500 ரூபாய் ரொக்க நிவாரணம்* ஏழை எளிய மக்களுக்கு தரவேண்டும் என்று தொழிற்சங்கங்கள், இடதுசாரிகள் கேட்டதை ஏற்றுக் கொள்ள மறுத்த மத்திய அரசை என்ன சொல்வது? 

*செவ்வானம்*

No comments:

Post a Comment