எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இருபத்தி ஐந்தாவது பொது மாநாடு வரும் திங்கட்கிழமை 27.01.2020 அன்று தொடங்கி 30.01.2020 வரை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் நகரில் நடைபெறவுள்ளது. இன்று இரவு சென்னையில் புறப்படும் ஹௌரா மெயிலில் பயணம்.
விசாகப்பட்டிணம் என்றால் மூன்று விஷயங்கள் நினைவுக்கு வரும்.
பாரத விலாஸ் திரைப்படத்தில் "இந்திய நாடு, என் வீடு" பாடலில் எம்.ஆர்.வாசு "கப்பல் கட்டற விசாகப்பட்டிணம் கடற்கரை உண்டு பாருங்கோ" என்ற பாடல்தான் முதலில் நினைவுக்கு வரும்.
எங்களின் அகில இந்திய மாநாடுகள் எல்லாமே "பாரத விலாஸ்"கள்தான். காஷ்மீர் தொடங்கி குமரி வரை, குஜராத்திலிருந்து அருணாச்சல பிரதேசம் வரை அனைத்து மாநிலங்களிலிருந்தும் இன்சூரன்ஸ் ஊழியர் என்ற ஒரே உணர்வோடு சங்கமிக்கிற ஒற்றுமைத் திருவிழா அகில இந்திய மாநாடு. அதனை பாரத விலாஸ் என்று சொல்வதும் பொருத்தமாகவே இருக்கும்.
1990 ல் கட்டாக்கில் நடைபெற்ற 14 வது அகில இந்திய மாநாட்டில்தான் முதல் முறையாக கலந்து கொண்டேன். அப்போது உருவான பிரமிப்பும் பரவசமும் உணர்ச்சிப் பெரு வெள்ளமும் இன்னும் குறையாமல் இருப்பதுதான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் மகத்தான அமைப்பின் சிறப்பு. அதே பரவசத்துடன் விசாகப்பட்டிணம் நோக்கிய பயணம் தொடங்குகிறது.
விசாகப்பட்டிணம் என்றவுடன் அடுத்து நினைவுக்கு வருவது
விசாகப்பட்டிணம் கோட்டத்தின் பொதுச்செயலாளராக இருந்து அகில இந்திய பொதுச்செயலாளராக உயர்ந்த தோழர் கே.வேணுகோபால் ஒரு மாநாட்டில் உரையாற்றுகையில் பகிர்ந்து கொண்ட ஒரு அனுபவம்.
ஹைதராபாத் ஆல்வின், ஹிந்துஸ்தான் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களை மூட மத்தியரசு முடிவு செய்கிறது. ஹைதராபாத் ஆல்வின் நிறுவன ஊழியர்களின் போராட்டம் நிறுவன எல்லைக்கு மேல் விரிவடையாமல் நிறுவனம் மூடப்பட்டு விட்டது.
ஆனால் ஹிந்துஸ்தான்ஷிப்பிங் நிறுவனத்தை தங்கள் நகரத்தின் பெருமையாக, சொத்தாக அந்நகர மக்கள் கருதியதால் அது விசாகப்பட்டிணம் நகரத்து மக்கள் இயக்கமாக உருவெடுத்து நிறுவனம் காப்பாற்றப்பட்டது.
இப்படிப்பட்ட சிறப்பு மிக்க நகருக்கு செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.
மூன்றாவதாக நினைவுக்கு வருவது.
சிந்து பைரவி உள்ளிட்ட பாலச்சந்தர் படங்களில் பார்த்த ஆக்ரோஷமான கடல் அலைகள். அவைகளை சந்திக்கத்தான் அவகாசம் கிடைக்குமா என்று தெரியவில்லை.
இந்த மாநாடு தனிப்பட்ட முறையிலும் மிகவும் முக்கியமானது.
ஏன்?
மாநாடு முடிந்து மீண்டும் சந்திக்கையில் சொல்கிறேன்.
பிகு 1 : அது வரை இடைவேளை என்றெல்லாம் போடப் போவதில்லை. நீண்ட காலமாக ட்ராப்டில் உள்ளது ஒவ்வொரு நாளும் வெளியாகும்.
பிகு 2 : முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய கட்டாக் மாநாட்டில் எடுத்த படம் கீழே உள்ளது
விடுகதைக்கு விடை காண ஆர்வமாக உள்ளேன்
ReplyDelete