கடந்த வாரம் நிகழ்ந்த சம்பவம் இது.
ஈரோடு அருகே வெறும் ஒரு வழிப்பாதையில் டோல்கேட் அமைத்து கட்டணக் கொள்ளை நடந்து கொண்டிருந்ததை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி கண்டித்து அங்கே இருந்தவர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் டோல்கேட் ஊழியர்களில் ஒருவர் இரட்டைக்குழல் துப்பாக்கியோடு அவரை மிரட்டி உள்ளார்.
இன்றைக்கு பயணிகள் மீது அன்றாடம் நடக்கும் தாக்குதல் டோல்கேட் கட்டணக் கொள்ளை.
எனக்குத் தெரிந்து வாஜ்பாய் காலத்தில் சென்னை பெங்களூர் நாற்கர சாலை அமைக்கப்பட்டது. சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்குள்
ஸ்ரீபெரும்புதூர்,
வாலாஜாபேட்டை,
பள்ளிகொண்டா,
நாட்ராம்பள்ளி.
கிருஷ்ணகிரிக்கு முன்பாக,
கிருஷ்ணகிரி தாண்டி,
ஹோசூருக்கு முன்பாக,
ஹோசூரைத் தாண்டி
என்று ஏராளமான டோல்கேட்டுகள் உண்டு. காரில் ஒரு முறை பயணித்தால் இருவழி பயணத்துக்கு அறுநூறு ரூபாய்க்கு மேல் அழ வேண்டியிருக்கும்.
இது போலத்தான் சென்னை - மதுரை சாலையிலும் காணும் இடங்களில் எல்லாம் டோல்கேட்டுகள்.
இந்த சாலைகள் அமைக்கப்பட்டதற்கான செலவை விட பலப்பல மடங்கு டோல்கேட் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. வசூலிக்கப்படுகிறது. இன்னும் எத்தனை நாள் இந்த வசூல் கொள்ளை தொடரும்?
அப்படி வசூலிக்கப்படுகிற பணம் சாலையின் பராமரிப்புச் செலவுக்கு பயன்படுகிறதா என்று அறிந்து கொள்ள நினைத்தால் ஒரு முறை வேலூரிலிருந்து சென்னைக்கு நாற்கர சாலையில் செல்லுங்கள். அங்கங்கே குண்டும் குழியுமாகவும் வெறும் பேட்ச் வேலைகளாகவும் சாலை உங்களைப் பார்த்து பல்லிளிக்கும்.
டோல்கேட் கட்டணக் கொள்ளை தொடர அனுமதிக்க வேண்டுமா
என்ற கேள்வியை எழுப்பினால் துப்பாக்கியை காண்பித்து மிரட்டுவார்கள் என்றால்
அதிலிருந்தே அங்கே புரளும் பணத்தின் அளவை புரிந்து கொள்ளலாம்.
டோல்கேட் கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உரக்க குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.
No comments:
Post a Comment