*இது உங்களுக்கான - நமக்கான - தேசத்திற்கான வேலை நிறுத்தம்*
பெரியோர்களே! நண்பர்களே!
உங்களோடு ஒரு சில நிமிடங்கள் உரையாடுவதற்கே இந்த பிரசுரம்.
ஜனவரி 8 நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் 10
கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட இருக்கிறார்கள். இது அவர்களின் நலனுக்காக மட்டுமல்ல. பொது மக்களின் நலனுக்காகவும்...
* இந்த வேலை நிறுத்தம் எல்.ஐ.சி, அரசு வங்கிகள் போன்ற பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்காக... ஒரு காலத்தில் தனியார் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவால் திவால் என மக்கள் சேமிப்புகளோடு மாயம் ஆன போதே தேசியமயம் வந்தது. இன்றும் தனியார் நிதி நிறுவனங்கள் திடீர் திடீர் என நடையை கட்டவில்லையா? 4
ஆண்டுகளில் பிர்லா கம்பெனி உள்ளிட்ட 4 தனியார் பேமெண்ட் வங்கிகள் கடையை மூடவில்லையா? உங்கள் சேமிப்பு ரொம்ப ரொம்ப பத்திரம், உங்கள் பணம் தேச வளர்ச்சிக்காக என்ற நிலையை பாதுகாக்க வேண்டாமா?
* எல்.ஐ.சி இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ஒவ்வோராண்டும் தருவது
3,50, 000 கோடிகள். ரயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் திட்டங்களுக்காக எல்.ஐ.சியின் நிதி...
பாலிசிதாரர்க்கான உரிமப் பட்டுவாடாவில் 24
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை காட்டிலும் மிஞ்சிய முதல் இடத்தில்...
இப்படிப்பட்ட மக்கள் நிறுவனம் இருக்கையில் அந்நிய முதலீட்டை ஆதரிக்கிற மத்திய அரசு.
* கார்ப்பரேட் வரிகளை 33
சதவீதத்தில் இருந்து 22 சதவீதத்திற்கு 6 ஆண்டுகளில் குறைத்த மத்திய அரசு. ஆனால் எல்.ஐ.சி பிரிமியம் மீது 18
சதவீதம் ஜி.எஸ்.டி வரி... கார்ப்பரேட் கண்ணில் வெண்ணை... சாமானியர் கண்களில் சுண்ணாம்பு என்பதற்கு இது ஓர் உதாரணம்.
* குறைந்த பட்ச ஊதியம் 21000, பணிப் பாதுகாப்பு வேண்டும் எனபது கோரிக்கைகள். உங்கள் வீட்டு குழந்தைகள் பி.இ முடித்தாலும் கால் சென்டர்களில்
10000 க்கும் 12000 க்கும் அல்லாடுவதில்லையா? சம்பளம் அதிகம் கிடைத்தாலும் எப்ப சீட்டு கிழியுமோ என்ற அச்சத்தோடு...
மோட்டார் வாகனத் துறையில் லட்சக் கணக்கில் வேலை இழப்பு. நம் இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆவது?
* புதிய பென்ஷன் திட்டம் என்ற பெயரால் ஓய்வூதியத்திற்கு ஆபத்து. எவ்வளவு பென்ஷன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. கைம்பெண்களுக்கு, ஊனமுற்றோருக்கு. அடித்தள மக்களுக்கு தரப்படுகிற சமூக பாதுகாப்பு பென்ஷன் அற்ப சொற்பம் ஆகும். கௌரவமான வேலை கிடைப்பதும் குதிரைக் கொம்பு. பணியில் இருக்கும் போதும் பதறி...
பதறி... ஓய்வுக்குப் பிறகும் நிம்மதி இல்லை. இது என்ன வாழ்க்கை?
* ரயில்வேயில் கூட தனியார்களுக்கு பச்சைக் கோடி. டெல்லியில் இருந்து லக்னோவுக்கு முதல் தனியார் ரயில். கட்டணம் கூடுதல். மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து. ஆன்லைன் பதிவு மட்டுமே உண்டு. எல்லா துறைகளிலும் தனியார்களுக்கு வரவேற்பு கம்பளம். ஏழைகளின் பாடோ பெரும் நொம்பலம்.
* ஏழை எளிய தொழிலாளர், விவசாயிகள் நிலைமையோ மிக மிக மோசம்.
43 தொழிலாளர் டெல்லி தீ விபத்தில் சிக்கி, மூச்சுத் திணறி, கருகி உயிர் விட்ட கொடூரம் அண்மைய உதாரணம். சிறு வியாபாரம், சிறு தொழில்களும் சந்திக்கிற இன்னல்கள் நிறைய...
அரசோ மக்கள் கவனத்தை திசை
திருப்புகிறது. மக்கள் ஒற்றுமையை சிதைக்கிறது. நாடே இன்று எதிர்க்கும் குடியுரிமைச் சட்டம் ஓர் உதாரணம். மதம், சாதி கடந்து எல்லோரும் கை கோர்க்க வேண்டிய தருணம்.
பெரியோர்களே, நண்பர்களே இது உங்களின்- உங்கள் குழந்தைகளின் - பேரக் குழந்தைகளின் எதிர்காலம் காக்க நடைபெறுகிற வேலை நிறுத்தம்.
உங்கள் ஆதரவை நாடுகிறோம்.
_________________________________
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்.
வேலூர் கோட்டம்I
--------------------------------------------------------------------------------------------------------
இன்று நடைபெறும் ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் ஏன் என்று மக்களிடம் நேற்று வினியோகிக்கப்பட்ட பிரசுரம்.
No comments:
Post a Comment