(The Hindu தலையங்கம்)
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதல் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது .
முகமூடி அணிந்த கும்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியது.அதிரவைக்கும் கொடூரமான இத்தாக்குதலின் காட்சிகள் ஒரு கொடும் துயரமாக இந்திய மனச்சாட்சியில் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இந்த கும்பல் கல்லூரி விடுதிகளை நொறுக்கியுள்ளது. மாணவர்கள் பேராசிரியர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மிகக்கடுமையான காயங்களை ஏற்படுத்தி இருக்கிறது .
திட்டமிட்ட பைத்தியக்காரத்தனமான இந்த வன்முறை பல மணி நேரங்கள் நடந்திருக்கிறது .
புதுடில்லி காவல்துறை ஒரு குற்றவாளியைக்கூட இதுவரையிலும் கைது செய்யவில்லை . இத்தனைக்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மிக மோசமான
வார்த்தைகளால் முழக்கமிட்டுக் கொண்டு மிக சாவகாசமாக நடந்து போனதை பார்க்கிறபோது காவல்துறை குற்றவாளிகள் தப்பிப்பதற்கு பாதுகாப்பு அரணாக நின்றதாகவே தெரிகிறது .
குற்றம் செய்ய தூண்டியவர்கள் குற்றத்தை நடத்தியவர்கள் இவர்களை மிஞ்சுகிற விசுவாசத்தை குற்றவாளிகளிடம் டெல்லி காவல்துறை காண்பித்திருக்கிறது.
ஒரு ஜனநாயக நாடாக முழுமை பெறுவது மற்றும் அதனுடைய நிறுவனங்களைப் பொக்கிஷங்களாக போற்றுவது என்கிற இந்தியாவின் கனவில் இந்த இரவு ஒரு கொடும் நிகழவாக ஆட்டுவிக்கும்.
அவர்கள் முகமூடி அணிந்திருந்தார்கள் தான். ஆனால் இந்தத் தாக்குதலுக்கு பின்னே யார் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது கடினமல்ல. இது இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனம்.இந்த நிறுவனத்தில் கற்பதற்கு வாரிசுவழியோ அல்லது பணமூட்டைகளோ தேவையில்லை.
பொதுவாகவே ஹிந்துத்துவா வாதிகள் அறிவு வாதத்தையும. குறிப்பாக அறிவுத்துறை அமைப்புகளையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.2014 ஆம் ஆண்டிலிருந்து இதை வெளிப்படையாகவே அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அவர்களால் பிரதான தாக்குதலுக்கு இலக்கான தாகவே இருந்திருக்கிறது. இப்போது நடந்திருப்பதும் அதையே உறுதிப்படுத்துகிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் வேறுபட்ட தன்மைகள் உடைய மாணவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்கிறது .அந்த மாணவர்களுக்கு விமர்சன பூர்வமான சிந்தனை முறையையும் அதேபோன்று
அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் சிறப்பாக விளங்குவதற்கும் மிகச்சிறந்த வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும் கேள்வி கேட்பதற்கான உரிமை இரண்டையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இந்த இரண்டின் மீதும் அளவிடற்கரிய வெறுப்பும் கோபமும் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு இருந்து கொண்டே இருந்திருக்கிறது .
இப்போதைய ஆட்சியாளர்கள் புரட்டுக்கும் வரலாற்றுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள். நம்பிக்கைக்கும் வெறிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .அதேபோன்று விமர்சனத்துக்கும் விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .
மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குத் தாங்களே கடுமையான காயங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று நம்பினால் ஒழிய அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத் என்கிற ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பு தான் இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டு நம்பகத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது.
இந்த முகமூடிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்கிற பட்டியல் மிக நீளமானது .
அவர்களில் சிலரது முகங்களை நீங்கள் நினைவு படுத்த முடியும்.ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அதன் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தங்களுடைய கடமையில் தவறிவிட்டார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது .அவர்கள் ஆசிரியர் என்ற முறையிலும் பாதுகாவலர் என்ற முறையிலும் தவறு செய்திருக்கிறார்கள்;என்பதோடு தாங்கள் வகிக்கிற பொறுப்பின் புனிதத்தை சீரழித்து விட்டார்கள்.
தற்போது டெல்லி காவல்துறை கமிஷனராக இருக்கக்கூடிய அமுல்யா பட்நாயக், அவரின் கீழ் உள்ள காவல்துறை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் நூலகத்திற்குள் உள்ளே புகுந்து சட்டம் ஒழுங்கை எல்லாம் பாதுகாத்த கதை நமக்குத் தெரியும். ஆனால் இங்கு அவர்கள் பார்வையாளர்களாக இருந்தார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது. உண்மையில் முகமூடி அணிந்து தாக்கியவர்களின் கூட்டாளியாக இருந்தார்கள் என்பதே உண்மை. அவர்கள் முகமூடி அணிந்து இருக்கவில்லை ஆனால் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்துக் கொண்டனர். தங்கள் பெயர் பொறித்த இலச்சணைகளை(name batch) அணிவிக்காமல் விட்டதன் மூலம் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்திருந்தார்கள்.
டெல்லி நிர்வாகம் தங்களுக்கு எந்த பொறுப்பும் இந்தப் பிரச்சினையில் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள் .
மத்திய அமைச்சர்கள் சிலரும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் சிலரும் மிக மேலோட்டமாக சொல்லுகிற எதிர்ப்புகள் எந்தவித நம்பிக்கை தன்மையும் இல்லாதது.
மத்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் அவமானகரமான இந்த செயல் தங்களது ஒப்புதலோடு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்; முகமூடி அணிந்து கொலைத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளித்து நீதியை நிலை நிறுத்தவேண்டும்.
நன்றி - தோழர் கே.கனகராஜ்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
சி.பி.ஐ(எம்), தமிழ்நாடு மாநிலக்குழு
No comments:
Post a Comment