Sunday, November 12, 2017

"அறம் - உயர்ந்த தரம்" - சுட்ட தலைப்பு




அறம் இன்று பார்த்தோம். மதிய வேளைக் காட்சி  - அரங்கு நிரம்பியிருந்தது. படம் பற்றிய நல்ல விமர்சனங்கள் பரவியதன் வெளிப்பாடு. 

துப்பறியும் படமல்ல, பேயோ, ஆவியோ யாரையும் பிடித்துக் கொள்ளவில்லை. ஆனாலும் முதல் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை நாற்காலியின் நுனியில் உட்கார வைத்த படம். 

"ஒளிரும் இந்தியா, துன்பத்தில் உழலும் இந்தியா" என்று இரு வேறு இந்தியாக்கள் இருப்பதாக தோழர் சீத்தாராம் யெச்சூரி சொல்லிக் கொண்டே இருப்பார். இப்படம் சொல்லும் செய்தியும் இதைத்தான். அறிவியல் முன்னேற்றம் என்பது ஏழை மக்களைக் காக்க இன்னமும் வரவில்லை என்பதை  கன்னத்தில் அறைந்து சொல்கிறது.

படத்தின் கதையை சிலர் பகிர்ந்தாலும் நான் அதைச் செய்யப் போவதில்லை. படம் பார்ப்பவர்களின் சுவாரஸ்யத்தை குலைக்கக் கூடாது என்ற ஒரு நல்லெண்ணம்தான். ஒரு சின்ன விஷயம்தான் மையக்கரு என்றாலும் அதை மோசமான அரசியல்வாதிகளின் சுய நலம், அதிகார வர்க்கத்தின் அலட்சியம்,  நசிந்து வரும் விவசாயம், எளிய மக்களின் கோபம் ஆகியவற்றோடு இணைத்து அழகாக அளித்துள்ளார் இயக்குனர் கோபி. அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 

மக்கள் பிரச்சினைகளை பல படங்கள் பேசினாலும் கடைசியில் தீர்வை தனி நபர் சாகசமாக முடித்து விடும் பாணியிலிருந்து மாறுபட்டதாக இருப்பதற்காகவே "அறம்" பாராட்ட வேண்டிய படம். 

படத்தின் சிறப்பம்சம் நிச்சயமாக நயன்தாரா.  இப்படி ஒரு மாவட்ட ஆட்சியர்  நம் மாவட்டத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்க வைக்கும் கதாபாத்திரம். அதனை கம்பீரமாக செய்துள்ளார். சிறந்த நடிகை விருதுக்கு தகுதியான நடிப்பு.

நயன்தாரா மட்டுமல்ல, மற்ற அனைத்து நடிகர்களுமே சிறப்பாக செய்துள்ளனர்.  "சத்யா" விற்குப் பிறகு இதில்தான் கிட்டிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. சதுரங்க வேட்டையில் வில்லனின் அடியாளாக வந்தவரா இது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார் புலேந்திரன் கதாபாத்திரத்தில் நடித்தவர். 

வசனங்கள் படு கூர்மை. உப்பங்கழியில் தொடங்கி, முள்காடு, வறண்ட நிலம் என கதைக்களம் அனைத்தையும் கேமரா நன்றாக படம் பிடித்துள்ளது.  ஜிப்ரான் பின்னணி இசையில் அசத்தியுள்ளார்.  

பார்வையாளர்கள் படத்தோடு ஒன்றி விட்டனர் என்பதை கிளைமாக்ஸில் அவர்கள் காண்பித்த எதிர்வினை உணர்த்தியது.  

"அறம்" அவசியம் தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டிய படம்.

பின் குறிப்பு : அறம் பார்த்து விட்டு அதைப் பற்றி முக நூலில் இரண்டே வார்த்தைகளில் பதிவு செய்த விமர்சனத்தை இப்பதிவின் தலைப்பிற்காக சுட்டு விட்டேன்

 

5 comments:

  1. நன்றி நண்பரே
    அவசியம் பார்ப்பேன்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. பட விமர்சனம் அருமை.உங்கள் பதிவு PNGS தோழர்களை படம் பார்க்க தூண்டியுள்ளது.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Yes, it is an excellent movie, Indian economy, democracy, education, Medicine every thing ruined by selfish politicians. People are very selfish and coward too. People are the main reason for poor politicians. India is not going to improve any more in my opinion, BJB also dragging down to ditch to their part.

    ReplyDelete