நூல் அறிமுகம்
நூல் : கையளவு கடல்
ஆசிரியர் : மதுக்கூர்
ராமலிங்கம்
வெளியீடு : பாரதி
புத்தகாலயம்
சென்னை – 18
விலை :
ரூபாய் 130.00
தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம், செம்மலர் இதழில் எழுதிய
கடைசி பக்க கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
கலை
இரவு மேடைகளிலும் பட்டிமன்றங்களிலும் எப்போதும் ஒளிரும் அவரின் நகைச்சுவை உணர்வு பெரும்பாலான
கட்டுரைகளிலும் மிளிர்கிறது. தன்னுடைய கிராமத்து வாழ்வனுபவங்களை பேசுகிற கட்டுரைகள் இந்த நூலில் அதிகம்.
காணாமல்
போன மதுக்கூர் மாட்டுச்சந்தையைப் பற்றிச் சொல்லும் “சந்தைக்கடை சங்கீதம்”, கிராமத்து
பஞ்சாயத்து சண்டைகள் பற்றிய “உள்ளூர் போர்க்களங்கள்”, சிறு வயது சாகசமான “எலி வளை தோண்டிய
படலம்”, உழைப்பாளி மக்களால் தோற்கடிக்கப்பட்ட நிலவுடமையாளரின் “ஜாமீன் இழந்த ஜமீன்” சர்க்கரை நோயாளிகளின் அவதியை விவரிக்கும் “இனிப்பை
தொலைத்த நிமிடங்கள்” என்று சிரிக்க வைக்கும்
கட்டுரைகள் விரிந்து கொண்டே போகிறது.
விழாக்களில்
கிராமபோன் ரெகார்டுகளில் பாட்டு கேட்பது, முதன் முதலாக மின்சாரம் வந்த தருணம், பள்ளிகளின்
மதிய உணவு, கிராமத்து விளையாட்டுக்கள், சினிமா கொட்டகைகள் என்று பல மலரும் நினைவுகள்
நமக்கும் வரும்படி சில கட்டுரைகள் உண்டு.
சமகால
அரசியல் பிரச்சினைகளான விலை கொடுத்து வாங்கப்படும்
வாக்குகள், விவசாயிகளின் இன்னல்கள், மாட்டிறைச்சி,
அதிகரிக்கும் சகிப்பின்மை பற்றிய கட்டுரைகளும்
பகுத்தறிவு விவாதங்கள் கொண்ட கட்டுரைகளும் மிக முக்கியமானவை.
மற்றவர்களை
காலமெல்லாம் சிரிக்க வைத்த நகைச்சுவை அரசி
மனோரமாவின் சொந்த வாழ்க்கை எவ்வளவு சோகமானது என்பதையும் கடுமையான உடல் நல பாதிப்பு
இருந்த போதும் மேடைக்கு வந்ததும் தன் பாத்திரத்தை கச்சிதமாக செய்கிற அவரது மன உறுதியையும்
விளக்குகிறது “மனோரமா எனும் மனுஷி”
ஒவ்வொரு
கட்டுரையையும் தன் கொள்கைக்கு ஏற்ப நச்சென்று கச்சிதமாக முடித்துள்ளது இந்த நூலின்
சிறப்பு.
ஒரு
பருக்கை உதாரணமாக “பணத்தை மையமாகக் கொண்ட சமூகத்திற்கு மாற்றாக மனிதனை மையமாகக் கொண்ட
சமூகத்தை அமைப்பதற்கான அறிவியல் வழிகளை கண்டறிந்து
சொன்னார் ஒரு மனிதர். அவர் பெயர் மார்க்ஸ்” என்று “பணமே . . . அட பணமே . . .” என்ற
கட்டுரை நிறைவடையும்.
நகைச்சுவையாக
எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் மனதில் ஒரு வலியோடுதான் படிக்க நேரிட்டது.
அதற்குக்
காரணம் நூலின் துவக்கத்தில் செலுத்தியிருந்த
காணிக்கை.
அது
“அப்பாவின்
முகம் அறியா எனக்கு அப்பனாய், நண்பனாய், தோழனாய், நல்லாசிரியனாய் விளங்கும் என் இளைய
மகன் ஆர்.தமிழமுதன் ஒரு கொடிய விபத்தில் இழந்த வலது கைக்கும் . . .
துயர்
சூழ்ந்த அந்த பொழுதில் ஆதரவாய் நின்ற அத்தனை கைகளுக்கும்”
பின்
குறிப்பு : கடந்த வாரம் ஒரு கூட்டத்திற்கு அவர் வேலூர் வந்திருந்த போது இந்த உணர்வை
அவரிடமே பகிர்ந்து கொண்டேன்.
“மகிழ்ச்சியும்
துயரமும் கலந்ததுதானே தோழர் வாழ்க்கை”
என்று
அவர் பதிலளித்தார்.
ஆம்.
அதுதானே யதார்த்தம் . . .
No comments:
Post a Comment