Thursday, November 2, 2017

பேராசிரியர் சொல்வது சரிதானே ஜெய்ட்லி?

வங்கிகளுக்கு மூலதனம் அளிப்பது தொடர்பான பல உண்மைகளை அம்பலப்படுத்தி  பொருளாதார  நிபுணர்  தோழர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதியுள்ள விரிவான கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.  மோடி அரசின் இன்னொரு மோசடி இது என்பதை இக்கட்டுரை விரிவாக விளக்குகிறது.

இது தொடர்பாக எனக்கு தோன்றிய ஒரு மீம் கீழே. 

நன்றி - தீக்கதிர் 30.10.2017

அருண் ஜெய்ட்லி - சொன்னதும் சொல்லாததும்

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா



அண்மையில் நிதி அமைச்சர் ஜெட்லி அறிவித்துள்ள வங்கிகளின் மூலதனத்தைக் கூட்டுவது தொடர்பானநடவடிக்கைகள் பற்றி பல குழப்பமான கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கம் சொல்லாத சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வோம்.ஏற்கெனவே மந்த நிலையில் இறங்கியிருந்த இந்திய பொருளாதாரம், செல்லாக்காசு பிரச்சனை, விலங்கு சந்தைகளில் அரசு ஏற்படுத்திய குழப்பம், தயாரிப்பின்றியும் மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதித்தும், சிறு,குறு தொழில் முனைவோரையும் வணிகர்களையும் மறைமுக வரிவலைக்குள் கொண்டுவரும் நோக்குடனும் அமல்படுத்தப்பட்டு வரும் ஜிஎஸ்டி ஆகியவற்றால், மேலும் கடுமையாக சீர்குலைந்துள்ளது

தொடர்ந்து மத்திய அரசு இதனை மறுத்துவந்தாலும் இதன் உண்மை கருதி மறுபக்கம் பல புதியதடாலடி அறிவிப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்பொழுது வந்துள்ள அறிவிப்புகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் அளித்தல் தொடர்பானதை மட்டும் இப்பதிவில் சுருக்கமாக காண்போம்.2.11 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளின் மறுமூலதனமயத்திற்கு செலவிட உள்ளதாக ஜெட்லி அறிவிப்பு கூறுகிறது.

 இதில் பட்ஜெட் மூலம் 19 ஆயிரம் கோடிகளுக்கு சற்றுக் குறைவாக மட்டுமே தரப்பட உள்ளது.   (இது ஏற்கெனவே பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட தொகையை விட மூவாயிரம் கோடி மட்டுமே அதிகம்.) வங்கிகள் பங்கு சந்தையில் பங்குகளை விற்று ஐம்பத்து எட்டாயிரம்கோடி ரூபாய் திரட்ட வேண்டும். இதுதனியார்மயம் தவிர வேறல்ல. மீதம்கணிசமான தொகையை அரசுமறுமூலதன பாண்டுகளாக வங்கிகளுக்கு விற்று வங்கிகளின் மூலதன அளவை உயர்த்தும். இது வங்கிகளின்போதுமான மூலதன விகிதத்தை , பாஸல் நெறிமுறைகள் – 3  என்ற பெயரில்பன்னாட்டு நிதி மூலதனம் பரிந்துரைக்கின்ற அளவிற்கு கொண்டுவரும். ஆனால் பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த நெறிமுறை அவசியம் அல்ல. ஏனெனில், அரசு வங்கிகள் என்பதால் மக்களின் முழுநம்பிக்கையை பெற்றுள்ள வங்கிகள் இவை

(தனியார் வங்கிகளையே பெரும்பாலும் கொண்ட முன்னணி முதலாளித்துவ நாடான அமெரிக்கா கூட பாஸல் நெறிமுறைகள் - 3 அமலாக்கத்தை ஏற்கவில்லை.) எனினும் இதை செய்துதான் ஆகவேண்டும் என்று கருதினாலும் பொதுத்துறை வங்கிகளுக்கு பாண்டுகள் விற்பதற்குப் பதில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு கடன் பெற்று இத்தொகையை வங்கிகளுக்கு கொடுத்திருக்க முடியும். இரண்டுமே பிஸ்கல் பற்றாக்குறையைக் கூட்டும் என்பதால் இதில் வேறு பிரச்சனை இல்லை.மாறாக வங்கிகளை காசு கொடுத்து பாண்டுவாங்க வைப்பது பொருத்தமானது அல்ல. உண்மையான பிரச்சனை என்ன? வாராக்கடன் பிரச்சனை பூதாகாரமாக ஆகியுள்ளதால் வங்கிகளுக்கு சிக்கல்ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின்வராக்கடன் ஏன் அதிகரித்ததுஇதற்கான மூலம் தாராளமயக் கொள்கைகளில் உள்ளது.

நாடு விடுதலை பெற்றவுடன் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் நீண்டகால கடன்களை குறைந்த வட்டியில் தருவதற்காக வளர்ச்சிசார் வங்கிகள் உருவாக்கப்பட்டன. IFCI, ICICI, IDBI  உள்ளிட்ட பல நிதி நிறுவனங்கள் மத்திய அரசாலும் இவை போன்றவை மாநில அரசுகளாலும் அமைக்கப்பட்டன. இவை நீண்ட காலம் எடுக்கும் கட்டமைப்புத்துறை முதலீடுகளை மேற்கொள்ள குறைந்த வட்டி கடன் அளித்தன. இந்நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி உள்ளிட்டு சில அரசு நிறுவனங்களிடம் இருந்து குறைந்த வட்டியில் கடன் பெறவும் ஏற்பாடு இருந்தது

ஆனால், தாராளமயக் கொள்கைகளின்படி நிதித்துறை படிப்படியாக முழுமையாக பன்னாட்டு, இந்நாட்டு ஏகபோகங்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. நரசிம்மம் கமிட்டி பரிந்துரையில் துவங்கி அடுத்தடுத்து வந்த அரசு கமிட்டிகள்  வளர்ச்சி வங்கி செயல்பாடுகள் தேவையில்லை, எல்லா வங்கிகளும் எல்லாவிதமான சேவை பணிகளையும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வணிக அடிப்படையில் அளிக்கலாம்  என்ற மாற்றங்களைக் கொணர்ந்தனர். கடந்த பல ஆண்டுகளாக அரசு பொதுத்துறை முதலீடுகளை குறைத்துவரும் சூழலில், பெரும் தனியார் நிறுவனங்களுக்கு கட்டமைப்புத்துறை முதலீடுகளை மேற்கொள்ள பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுத்துள்ளன. இவற்றில் பல இன்று வராக்கடன்களாக மாறியுள்ளன. மீண்டும் வளர்ச்சிசார் வங்கி நிறுவனங்கள் தேவை என்பதையும் அவை பொதுத்துறையில் இருக்க வேண்டும்என்பதையும் ஏற்க தாராளமய ஆதரவாளர்கள் தயாராக இல்லை. இந்த அடிப்படை விஷயங்களில் தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய அரசு தயாராக இல்லை. இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் புதிதாக உதித்தவை அல்ல, ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பே இந்த அரசே முன்வைத்தவை தான். இவை பிரச்சனைகளை தீர்க்காது.

வராக்கடனால் பாதிக்கப்பட்டிருக்கும் வங்கிகளின் ஊஹசு இவற்றின் மூலம் உயர்வதால் வங்கிகள் மீண்டும் கடன்கொடுக்கும் வாய்ப்புகளை இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் இப்பொழுதும் கூட கடன் கொடுக்க கணிசமான பணம்வங்கிகளிடம் உள்ளது. அவை கொடுக்கத் தயாராக இல்லை என்பதுபிரச்சனையின் ஒரு அம்சம். ஆனால்கடன் வாங்க தகுதி உள்ள வாடிக்கையாளர்கள் க்யூ வரிசையில் நிற்கவில்லை என்பதும் உண்மை. பொருளாதார மந்தநிலை, கிராக்கியின் வீழ்ச்சி ஆகியவற்றைஎதிர்கொள்ள அரசின் தொழில் மற்றும் கட்டமைப்பு மற்றும் வேளாண்சார் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். இப்பொழுது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் பலவீனமான ஊக்குவிப்பை  தான் அளிக்கும்.ஒருவகையில் நடப்பது ஒருநாடகம். வங்கிகளை காப்பாற்றுவதாகக் கூறி, அடிமாட்டு விலையில் பொதுத்துறை வங்கிகளை அவர்கள் பெற்ற வங்கிக்கடனை திருப்பித் தராத  திருடர்களிடமே விற்கும் வாய்ப்பே இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது.


1 comment:

  1. தீதும் நன்றும் பிறர் தர வார...என்பது இப்போது இவர்களுக்கு மிக நன்றாக பொருந்துகிறது.

    ReplyDelete