Thursday, November 16, 2017

மோடியைத் தோலுரித்த . . .




நேற்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான கட்டுரை இது. மோடியின் பொய்களை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தோலுரித்து காண்பிக்கிறார். 

ஆங்கிலத்தில் வெளியான நேர் காணலை தமிழாக்கம் செய்தவர் எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் தோழர் எஸ்.சிவசுப்ரமணியன் என்பது எங்களுக்கு ஒரு பெருமை.






மார்தட்டிக் கொள்ளாதீர்...

பொதுத்துறை வங்கிகளில் பெரிய அளவிற்கு கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கிற - இந்திய சமூகத்தின் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கு பட்டியல் கொடுத்தோம்; ஆனால் அந்த பட்டியல் என்னாயிற்றோ எனத் தெரியவில்லை என உண்மையை அம்பலப்படுத்துகிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் தலைசிறந்த பொருளாதார வல்லுநருமான டாக்டர் ரகுராம் ராஜன். பணமதிப்பு நீக்கம் முற்றிலும் மோடி அரசின் முடிவு என கடுமையாக சாடுகிறார்.தி வீக் இதழுக்காக பத்திரிகையாளர் பர்கா தத்துக்கு அவர் அளித்த நேர்காணலின் சில பகுதிகள் இங்கே.


பணமதிப்பு நீக்கம்பற்றி நீங்கள் சொல்லியுள்ளவை தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன. அந்த நடவடிக்கையில் நீங்கள் இல்லை. உங்களுடைய கருத்துகளுக்கு அரசு என்ன மதிப்பளித்தது?

அரசிடம் நான் எப்பொழுதும் வெளிப்படையாகவே கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளேன். நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு என்னுடைய கருத்துக்கள் பதிவாகியுள்ளன. பொது நலனுக்காகவே உண்மையான நிலவரத்தை நான் எடுத்துக் கூறியுள்ளேன். ஏதாவதொரு வகையில் உண்மை உணர்த்தப்பட வேண்டும் என்பது முக்கியமானது. பல்வேறு தளங்களிலிருந்து பெற்ற தகவல்களுக்குப் பின்னர் அரசானது நிதி அமைச்சகத்தில் ஒரு குழுவை நியமித்தது. நாங்கள் (ஆர்பிஐ) ஒரு துணை ஆளுநரை அக்குழுவிற்கு அனுப்பினோம். நாங்கள் (ஆர்பிஐ) இது குறித்து அனுப்பிய அறிக்கைக்குப் பின்னர் அக்குழுவானது பணமதிப்பு நீக்கம் குறித்த விவாதத்தை நடத்தியது. அரசானது பணமதிப்பு நீக்க நடவடிக்கையை உறுதியாக எடுக்குமாயின் நாங்கள் கூறியவைகளை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளும் என நம்பினோம்.

u ஆனால் அரசு, அவ்வாறு நீங்கள் கூறியவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையே?

ஆம். ஆனால் அந்நடவடிக்கையானது (பணமதிப்பு நீக்கம்) நான் ரிசர்வ் வங்கியை விட்டு வெளியே வந்த பின்னர் எடுக்கப்பட்டது. எந்தவொரு பொருளாதார நிபுணரும் தேவையான பணம் அச்சிடப்பட்டு வெளியே புழக்கத்திற்கு தயாரான பின்னரே இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லுவார். 

u என்ன தயாரிப்புகள் தேவை என்பதனை ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுக் காட்டியது? 

நீங்கள் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொள்கின்ற நாளன்று, எவ்வளவு பணத்தை நீங்கள் திரும்பப் பெறுகிறீர்களோ அவ்வளவு பணம் புதிய நோட்டுக்களாக புழக்கத்திற்கு வரவேண்டும் எனக் கூறுவார்கள். மின்னணு சாதனங்கள் மூலம் செலவு செய்வது என்பது ஒரே இரவில் நடந்து விடாது. பொருளாதார நடவடிக்கைகளை அது சுருக்கிவிடுகிறது. எவ்வளவு பணத்தை நாம் திரும்பப் பெறுகிறோமோ அவ்வளவு பணத்தை நாம் தயாராக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பொருளாதார நிபுணர்கள் கூறுவார்கள்.

u ஆனால் நாம் இப்போது விவாதிப்பது புழக்கத்தில் இருந்த 86 சதவீத பணத்தைத் திரும்பப் பெற்ற நடவடிக்கையைப் பற்றி...

அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பணத்தையாவது புதிய நோட்டுக்களில் அரசு உத்திரவாதப்படுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் தேவை உள்ளவர்களுக்கு ஏடிஎம்கள் மூலம் பணம் கிடைத்திருக்கும்.

u ரகுராம் ராஜனும், ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரிக்கவில்லை எனில் யாருடைய ஆலோசனையின் பேரில் அரசு, இந்த நடவடிக்கையை மேற்கொண்டது? அப்படியெனில் அரசு ஆர்பிஐயை புறக்கணித்துள்ளது. இது ஆர்பிஐ யின் சுதந்திரத்தைப் பறிப்பதாகாதா? 

 உண்மையில் இங்கு கேள்வி என்னவெனில் ஆர்பிஐ இல்லாமல் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமா என்பதுதான். 1978 அனுபவத்தைப் பார்த்தோமானால், அன்று இருந்த அரசு ஆர்பிஐயைக் கலந்தாலோசிக்காமலே ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆகையால் ஆர்பிஐயை புறக்கணித்து அரசு நடவடிக்கை மேற்கொள்வதற்கு சட்டத்தில் பல வழிகள் உள்ளன. ஆர்பிஐக்கு அரசு உத்தரவிடுவதற்கும் ஆர்பிஐயின் சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன. ஆனால் அவையெல்லாம் இதுவரை பயன்படுத்தப்பட்டதில்லை. ஆகையால் இதுபோன்ற சட்ட வழிமுறைகளெல்லாம் பயன்படுத்தப்படாதவரை உங்களது (ஆர்பிஐயின்) சுதந்திரமும் பாதிக்கப்படவில்லையென்றே நினைக்கின்றேன். ஒருவேளை பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வேனென்று ஆர்பிஐயின் முன்னாள் கவர்னர் டாக்டர் ஒய்.வி. ரெட்டி அவர்கள் கூறியது இங்கு குறிப்பிடுவதற்கு சுவையானது; ‘‘அவ்வாறு அரசு செய்திருந்தால் (ஆர்பிஐயை கலந்தாலோசிக்காமல்) நான் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்ந்திருப்பேன். பின்னர் கவர்னர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்.’’


u டாக்டர் மன்மோகன் சிங் போன்றவர்கள் வளர்ச்சியானது 1 அல்லது 2 சதவீதம் குறையும் என்றார்கள். இவ்வருடத்தின் முதல் காலாண்டிற்கான வளர்ச்சி 5.7 சதவீதமாகக் குறைந்து விட்டது. ஜிடிபி விகிதம் வெகுவாகக் குறையக்காரணம் பணமதிப்புநீக்க நடவடிக்கை என நினைக்கின்றீர்களா? 

ஜிடிபி வளர்ச்சியின் பாதிப்பில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு முக்கியமான அம்சம் என நினைக்கின்றேன். அந் நடவடிக்கையின் பாதிப்புக்களை நாம் சரியாக மதிப்பிடவில்லை. குறிப்பாக ஒழுங்குபடுத்தப்படாத பொருளாதாரத்தில் (Informal Economy) நாம் சரியாக மதிப்பிடுவதில்லை. நம்பிக்கைக்குரிய பொருளாதார நிபுணர்கள் ஜிடிபியானது 1லிருந்து 2 சதவீதம் வரை குறையும் என்றே கூறினார்கள்.

u நீங்கள் மிகவும் துல்லியமாக சொன்னதாக, செயல்பட்டதாக நினைக்கின்றீர்களா? 

நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது என்றுதான் சொல்ல விரும்புகின்றேன். நமக்கு நிறைய பிரச்சனைகள்உள்ளன. ஆனால் உண்மையில் பிரச்சனை எங்கு ஆரம்பமாகின்றது என்று சொன்னால், ‘நாம் எவ்வளவு நன்றாகச் செயல்படுகிறோம் பார்’ என்று நமக்கு நாமே மார் தட்டிக் கொள்ளும்பொழுதுதான். அவ்வாறு செய்யும்போது, நாம் செய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் மீது கவனத்தைச் செலுத்துவதில்லை. நான் சமீபத்தில் பெய்ஜிங் (சீனா) சென்றிருந்தேன். உலகிலேயே எந்த நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது எனக் கேட்கின்றார்கள். நமக்கு நாமே மார் தட்டிக் கொள்வதைப் போல இது போன்ற விஷயங்களும் தொடர்ந்து நம்மைத் துரத்தும். அச்சுறுத்தும். மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும். நமக்கு நாமே பாராட்டிக் கொள்ளக் கூடாது. ஊடகங்கள் சில நாட்கள் அதனைச் சொல்லும். ஆனால் முதலீட்டாளர்கள் மறந்து விட மாட்டார்கள். 

நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தோமானால் நாம் மெத்தனமாக இருந்துள்ளோம் என்பதுதான் உண்மை. அதற்குப் பிறகும் நாம் எதுவும் நன்றாகச் செய்யவில்லை. வளர்ச்சி 9லிருந்து 10 சதவீத அளவிற்கு அடைவதற்கு செய்யத் தவறியதை நாம் கண்டுணர்ந்து அதனைச் செய்ய வேண்டும். நம்மைவிட மேல்நிலையில் இருக்கின்ற பிரிக்ஸ் நாட்டின் வளர்ச்சியை எட்ட வேண்டுமானால்கூட நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. நம்மை நாமே புகழ்ந்து கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். எதைச் செய்ய வேண்டுமோ அதிலே கவனத்தைச் செலுத்த வேண்டும்.

u அன்று ஐஐடியில் பேசும்போது சகிப்புத் தன்மை பற்றிப் பேசியிருந்தீர்கள். உங்களுடைய புத்தகத்தில் இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுடைய பேச்சுகளுக்குப் பின்னர் சில அமைச்சர்கள் கோபமாக இருப்பதாகச் சொன்னீர்களே? 

அரசை நான் குறிப்பிடவில்லையெனினும்கூட, அது அரசாங்கத்திற்கெதிரான பேச்சாக பார்க்கப்படுவது சுவாரஸ்யமான ஒன்றுதான். இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தியாவில் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ள சகிப்புத்தன்மை அவசியமானது என்றுதான் நான் பேசினேன். இறுதியில் இந்தியாவின் பொருளாதார வல்லமையோடு அது இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. இந்தியாவுக்கென சில பிரத்யேகமான அம்சங்கள் உள்ளன. பேச்சு சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவையே அவை. இவையெல்லாம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவசியமானவை.

மாற்றத்தைப் படைக்கும் திறன் படைத்த இந்திய நடுத்தர வர்க்கமானது எவ்வித கட்டாயப்படுத்தலுமின்றி, நிர்ப்பந்தமுமின்றி வாழ விரும்புகின்றது. அப்படி ஒரு சூழ்நிலையை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் நாம் நம்முடைய பலங்களில் ஒன்றினை இழந்து விடுவோம். ஆகையால் அடக்க நினைப்பது சரியல்ல. இதுதான் அன்று எனது பேச்சின் பொருளாக இருந்தது. நிதி அமைச்சகத்திலுள்ள சஞ்சீவ் சன்யால் இது குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். எப்பொழுது இந்தியா அடக்குமுறைகளற்று இருந்ததோ அப்பொழுது நன்றாகச் செயல்பட்டது என அதில் அவர் சொல்கின்றார். இதைத்தான் நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்ல விரும்புகிறோம்.  ஒரு அரசு ஊழியனாக எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைத்ததோ அங்கெல்லாம் ஒரு நல்ல செய்தியை இந்த நாட்டின் இளைஞர்களுக்குச் சொல்ல விரும்பினேன். சகிப்புத் தன்மையற்ற இந்தியாவை உருவாக்குங்கள் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை.

u வாராக் கடன் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. நீங்கள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு ‘வங்கியிலிருந்து வாங்கிய கடனை வேண்டுமென்றே கொடுக்காமல் வைத்திருப்பவர்கள்’ பட்டியலை வெளியிட வேண்டுமென்று நீங்கள் உறுதியாகக் கூறியது எனக்கு நினைவிற்கு வருகிறது. விஜய் மல்லையா பிரச்சனையை எவ்விதம் பார்க்கிறீர்கள்? சமீபத்தில் நீங்கள் பேசியபோது சலுகை சார் முதலாளித்துவமும் (Crony Capitalism), பெரிய முதலைகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதும், டிரம்ப் போன்றவர்கள் மேலெழுந்து வருவதற்கு உதவுகிறது எனப் பேசியுள்ளீர்கள். இங்கு (இந்தியாவில்) பெரிய முதலைகள் இருப்பதைப் பார்க்கிறோம். ஒரு புறம் அவர்கள் உல்லாசமாக உள்ளபோது, மறுபுறம் அவர்களுடைய ஊழியர்கள் ஊதியம் கூடப் பெற முடியாமல் இருப்பதையும் பார்க்கின்றோம். இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வர முடியவில்லை என நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?

ரிசர்வ் வங்கிக்கென தனியாக புலனாய்வு அமைப்பு எதுவும் கிடையாது. இந்திய சமூகத்திலுள்ள உண்மைக் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டுமென நான் நினைத்தேன். அதனால்தான் பெரிய அளவில் மோசடி செய்தவர்களின் பட்டியலைத் தயாரித்தோம். அதை பிரதமரின் அலுவலகத்திற்குக் கொடுத்தோம். 4,5 வருடங்களாக இத்தகையவர்களை புலனாய்வு செய்துள்ளீர்கள். அதன் விளைவுதான் என்ன எனக் கேட்டோம். மோசடி செய்துள்ள பெரிய முதலைகளில் ஓரிருவரைப் பிடித்தால் கூட இந்த சமூக அமைப்பில் வெற்றியாகத்தான் பார்க்கின்றேன். செலவுக்கும் அதிகமாக பில் காட்டுவது இங்கு அதிகமாக உள்ளது. இந்திய அமலாக்கத் துறை இது குறித்து விவாதம் நடத்தியுள்ளது. ஏன் அதை நாம் விசாரணை செய்யவில்லை? அவ்வாறு விசாரணை செய்தோமானால் நாம் பல முதலைகளைப் பிடிக்க முடியும்.

u ஏன் அது நடைபெறவில்லை? நீங்கள் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது அதில் என்ன பிரச்சனையைச் சந்தித்தீர்கள்? 

இவற்றை விசாரணை செய்வது ரிசர்வ் வங்கி கவர்னரின் வேலையல்ல. ஆனால் இது போன்ற விசாரணைகள் என்ன ஆயிற்று என்கிற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. செலவுக்கு அதிகமாக பில் காட்டியதாக ஏன் ஒருவர் மீது கூட குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பு பணப் பரிவர்த்தனை சம்பந்தமாக ஒரு வங்கியின் மேலாளருக்கும், ஒரு நிறுவனத்திற்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்கள் குறித்து சிபிஐ விசாரணை செய்தது. அந்த விசாரணை என்ன ஆயிற்று? அந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவராக இறந்து போனார்கள். அது எப்படி? கடைசியில் அந்த விசாரணை குறித்து மக்களுக்கு எதுவுமே சொல்லப்படவில்லையே, ஏன்?

u வங்கியில் வாங்கிய கடனை வேண்டுமென்றே கொடுக்காமல் வைத்திருப்பவர்களை (Wilful Defaulters) என்ன செய்யலாமென்று நினைக்கின்றீர்கள்? 

அவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதை நிறுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும். சிலர் மீண்டும் மீண்டும் கடன் வாங்குகிறார்கள். நமக்கு என்ன பழக்கம் இருக்கிறது என்று சொன்னால் நாம் கடன் யார் வாங்குகிறார்கள் என்றும், அது வாராக் கடனாகிறதா என்றும் மட்டுமே பார்க்கின்றோம். நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், யார் வங்கியின் தலைவராகவோ, அதிகாரியாகவோ இருக்கும்போது அதிகக் கடன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது; வாராக் கடன்கள் அதிகமாகியிருக்கிறது என்று பார்ப்பேன். ஒரு சிஇஓ இருந்த காலத்தில் சில வங்கிகள் பிரச்சனைக்குள்ளானதை நாம் பார்த்தோம். நானாக இருந்தால் இது போன்றவர்களையே விசாரணை செய்வேன். 

u 1990களிலிருந்தே பெரும்பாலான ரிசர்வ் வங்கி கவர்னர்கள் ஐந்து வருடங்கள் பணியாற்றியுள்ளார்களே?


என்னுடைய பணிக்காலத்தை நீட்டிக்க வேண்டுமென்று அரசாங்கத்திற்கு எந்தவிதக் கட்டாயமுமில்லை. எனக்கும் ஐந்து வருடங்கள் கட்டாயம் கவர்னராக இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய ஊழியர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தில், நான் ஆரம்பித்து வைத்த வேலைகள் முடிகின்றவரை நான் தொடர்ந்து இருக்க விருப்பப்படுவதாக தெரிவித்திருந்தேன். ஆனால் அரசானது எனது பணிக் கால நீட்டிப்பிற்கான எந்த வாய்ப்பினையும் கொடுக்கவில்லை.

(செப்டம்பர் 17, 2017 தேதியிட்ட தி வீக்
இதழில் வெளிவந்த நேர்காணலில் இருந்து) 

தமிழில் : செ.சிவசுப்ரமணியன்

No comments:

Post a Comment