Monday, November 13, 2017

கார்ட்டூன் - என்.டி.ஆரும் நெல்லை கலெக்டரும்






அரசு அலட்சியத்தால் நெல்லை மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த மரணங்கள் தொடர்பாக வரையப்பட்ட கார்ட்டூனுக்காக கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டு பின்பு பிணையிலும் வெளிவந்து விட்டார்.

சகிப்பின்மைக்கு உதாரணம் இந்த கைது. மத்திய, மாநில ஆட்சியாளர்கள் எவ்வழியோ அந்த வழியில்தான் நிர்வாகத்திலும் உள்ளவர்களும் செல்கிறார்கள் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது.

நெல்லைக் கொடூரம் நடைபெற்ற போது காவல்துறை பரப்பிய அதே கட்டுக்கதையைத்தான் மாவட்ட ஆட்சியரும் தனது முகநூல் பதிவில் சொல்லியுள்ளார். ஆகவே இந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்பதற்குப் பதிலாக திசைதிருப்பும் மோசமான உத்தியைத்தான் ஆட்சியர் பின்பற்றுகிறார்.

அதிகாரம் இருந்தும் அதனை மக்களுக்காக பயன்படுத்த அவர் தயாராக இல்லை. அதனால்தான் அவருக்கு கார்ட்டூன் மீது கைது செய்யுமளவு    கோபம் வருகிறது.

கார்ட்டூன் வரைந்தவர் மீது காண்பித்த கோபத்தை, ரோஷத்தை தன்னுடைய மாவட்டத்தில் நிலவும் கந்து வட்டிக்காரர்கள் மீது காண்பித்திருந்தால் அவரை பாராட்டியிருக்கலாம். கந்து வட்டிக்காரர்களால் உயிர்கள் பறி போவதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றெல்லாம் அவரால் கதைக்க முடியாது. முந்தைய ஒரு சம்பவத்தின் போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருடைய கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு போயுள்ளது.

அப்போதே அவர் ரோஷத்தைக் காண்பித்திருந்தால் நான்கு உயிர்களின் இழப்போ, கார்ட்டூனோ, கைதோ எதற்குமே அவசியம் இருந்திருக்காது.

கைது சமயத்தில்தான் ஹிந்து இதழின் கார்ட்டூனிஸ்ட் கலைஞர் திரு சுரேந்திரா தான் முன்பு வரைந்திருந்த ஒரு கார்ட்டூனை முக நூலை பகிர்ந்து கொண்டார். பாலா வரைந்த கார்ட்டூனுக்கும் அதற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால் அவர் வரைந்ததோ ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த திரு என்.டி,.ஆர் அவர்களை.

திரு சுரேந்திரா மீது திரு என்.டி.ஆர் கோபப்படவில்லை. மாறாக அந்த கார்ட்டூனை மிகவும் ரசித்ததாகக் கூறியுள்ளார்.

என்.டி.ஆருக்கு ரோஷம் இல்லை  என்று சொல்வாரோ நெல்லை மாவட்ட ஆட்சியர்?

பின் குறிப்பு 

ஒரு சட்டசபைத் தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி, என்.டி.ஆரை கிருஷ்ணனாக  சித்தரித்து பெரிய பெரிய கட் அவுட்கள் வைத்துள்ளனர். மத உணர்வுகளை அவர் தூண்டுகிறார் என்று காங்கிரஸ் புகார் சொல்ல அதனை ஏற்ற தேர்தல் ஆணையம், என்.டி.ஆர் கிருஷ்ணனாக தோன்றிய கட் அவுட்களை அனைத்தையும் அகற்ற உத்தரவிட்டது. இதைத்தான் கார்ட்டூனாக வரைந்ததாக திரு சுரேந்திரா குறிப்பிட்டிருந்தார்.  ஹைதராபாத் பத்திரிக்கையாளர் மன்றம் தேர்தல் முடிந்த பின்பு தேர்தல் காலத்தில் வரையப்பட்ட கார்ட்டூன்களை ஒரு கண்காட்சியாக வைத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரான என்.டி.ஆர் அக்கண்காட்சியை திறந்து வைத்துள்ளார். உங்களுக்கு எந்த கார்ட்டூன் பிடித்திருந்தது என்று கேட்ட போது அவர் திரு சுரேந்திராவின் கார்ட்டூனைத்தான் சொல்லியுள்ளார். 

பின் குறிப்பு 2

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ட்ராப்டிலேயே இருந்ததை இன்று பதிவு செய்துள்ளேன்.

6 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ஏண்டா மென்டல், உன் கமெண்டைத்தான் நான் டெலீட் செஞ்சுக்கிட்டே இருக்கேனே, எதுக்கு வெட்டித்தனமா உன் டைமை வேஸ்ட் செய்யறே?

      Delete
  3. பிரபு காளிதாஸ்November 14, 2017 at 1:19 PM

    சர்வாதிகாரி ஸ்டாலின் , மாவோ தன் மீதான விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார் என்பதை விளக்க முடியுமா ?

    ReplyDelete
  4. பிரபு காளிதாஸ்November 14, 2017 at 1:20 PM

    உலக வரலாற்றில் கம்யூனிச தலைவர் சகிப்புத்தண்மை அற்று செய்த கொலை வெறி ஆட் டங்களை என்னால் ஆதாரபூர்வமாக கூறமுடியும்

    ReplyDelete
  5. ஸ்டாலின் பற்றியும் மாவோ பற்றியும் கூறப்பட்டவையில் பல மிகையானவை. சரி அப்படியே இருக்கட்டும். அதனால் நெல்லை கலெக்டரின் செயல் நியாயமாகி விடுமா?

    கார்ட்டூனிஸ்ட் பாலா மீது கம்யூனிஸ்டுகளுக்கும் விமர்சனம் உண்டு. அதற்காக அவரது கைதை நியாயப்படுத்துவதோ கொண்டாடுவதோ சரியென்ற நிலைப்பாடும் கம்யூனிஸ்டுகளுக்கும் கிடையாது

    ReplyDelete