Friday, November 24, 2017

கிளப்புகள், திடீர் நகர் - ரத்தமும் தக்காளி சட்னியும்

 முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ள சட்ட நிபுணர் திரு ராஜகோபால் சுப்ரமணியம் அவர்களின் முகநூல் பதிவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

சொகுசு கிளப்புக்களின் ஆக்கிரமிப்பு அரசியலையும் வாய்தா கலாச்சாரம் மூலம் அவர்கள் அரசை எப்படி ஏய்த்து வருகிறார்கள் என்பதையும் மிகவும் அருமையாக விளக்கியுள்ளார்.

அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.



கிரீம்ஸ் ரோடு திடீர் நகர் குடியிருப்பை சேர்ந்த மக்களை ஆக்கிரமிப்பிற்காக அகற்றியதை எந்த வெகுஜன ஊடகமும் செய்தியாக்கவில்லை. விவாதிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை. அது மட்டுமல்ல, எதிர்ப்பவர்களை சில 'சமூக நீதி காவலர்கள்', 'ஏழைகளை 'ரொமாண்டிசைஸ்' செய்ய கூடாது', 'யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும்', 'நகருக்குள்காகவே இவர்களை மறு குடியமர்த்துவதற்கு இடம் கிடையாது' எனவே, இவர்களை ஆக்கிரமிப்பாளர்களாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். சென்னையின் மையப்பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலம் இருந்தாலும் கையகப்படுத்துவது சிரமம் என்கிறார்கள். வேறு வழியே இல்லையா..? 

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஹிண்டுவில் சென்னையின் பிரதான கிளப்களின் வங்கி கணக்குகளை வாடகை பாக்கிக்காக முடக்கியது குறித்து முதல் பக்கத்திலும் நான்காம் பக்கத்திலும் மூன்று விரிவான செய்தி கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. சாராம்சம் இது தான். சென்னை கிரிக்கெட் கிளப், சென்னை ரேஸ் கிளப்களுக்கு 'அநியாயமாக' 1553கோடியும், 730 கோடியும் வாடகை கேட்டு கொடுக்காததால் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதால் 'கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விட போகிறது', 'குதிரைகளுக்கு புல்லு கட்டு கூட வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்' என்று வருத்தப்பட்டு பாரம் சுமந்து எழுதியது. முதல் முறை படிப்பவர்களுக்கு இது மிகவும் அநியாயமாகவே தோன்றும். திடீர்னு இவ்வளவு பணத்தை கேட்டா எப்படி கட்ட முடியும்? ஆனால், இந்த தொகை இவ்வளவு ஏறியதற்கு காரணமே இவர்கள் தான் என்றால்? ஒவ்வொரு முறை குத்தகை தொகையை உயர்த்தும் போதும் நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை பெறுவது, வழக்கை இழுத்தடிப்பது, வழக்கு நிலுவையில் இருக்கும் போதே நீதிமன்றம், அரசுகளின் உதவியால் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வது, என்று தொடர்ச்சியாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள். 

சென்னை கிரிக்கெட் சங்கத்திற்கு அளிக்கப்பட்ட வரலாறை பார்ப்போம். 1936-ம் ஆண்டு அரசு சென்னை கிரிக்கெட் 12 காணி (1 காணி என்பது 1.32 ஏக்கர்) கிட்டத்தட்ட 288 கிரவுண்டுகளுக்கும் மேலே. 1965-ல் அதற்கு வருட குத்தகையாக முதல் பத்தாண்டுகளுக்கு ரூபாய் 5000, அடுத்த பத்தாண்டுகளுக்கு 7,500 ரூபாய், அடுத்த பத்தாண்டுகளுக்கு ரூபாய் 10,000 என நிர்ணயிக்கப்படுகிறது. பிறகு 1995-ஆம் ஆண்டு ஐந்து வருடங்களுக்கு வருட குத்தகையாக 50,000 ரூபாய் நிர்ணயித்தும் 2000-ம் ஆண்டிற்கு பிறகு அரசு குத்தகை தொகையை உயர்த்திக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம். அதாவது 2000-ஆம் ஆண்டு வரை 288 கிரவுண்ட் இடத்திற்கு ஒரு மாதத்திற்கு இவர்கள் கொடுத்த அதிக பட்ச தொகையே 4166 ரூபாய் தான். சேப்பாக்கத்தில் உள்ள ஒரு கிரவுண்ட் அரசு நிலத்திற்கு இவர்கள் கொடுத்த தொகை வெறும் 14 ரூபாய் மட்டுமே. 

2004-ஆம் ஆண்டு தான் சந்தை விலைப்படி 2000-2004-ஆம் ஆண்டுகளுக்கு உரிய தொகையாக 22.98 கோடி கேட்கிறது, அதாவது ஆண்டுக்கு 5.75 கோடி. சென்னை கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு வருமானம் 23லிருந்து 30 கோடி எனவும் செலவினங்கள் 22லிருந்து 23 கோடி என்று அவர்களே சொல்கிறார்கள். எனவே அப்போதே இந்த தொகையை கட்டியிருக்கலாமே? கட்டவில்லை. நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். நீதிமன்றத்திற்கு சென்றால் என்ன ஆகும், அப்படியே இழுக்கிறது. தற்போது 1553 கோடி என்று வாயை பிளப்பவர்கள் இது பதினேழு ஆண்டுகளுக்கான தொகை என்பதையும், வட்டி, அபராதம் என்றெல்லாம் சேர்த்திருப்பார்கள் என்றும் சொல்லத்தேவையில்லை. 

விளையாட்டை ஊக்குவிப்பதற்காக ஒதுக்கப்படும் நிலத்தில் எல்லாம் கணக்கு பார்க்கலாமா என்பவர்கள் தவறும் இடம் சென்னை கிரிக்கெட் சங்கம் என்பது அரசு அமைப்போ அல்லது அறம் சார்ந்த பெரியோர்களின் கட்டுப்பாட்டிலோ இருக்கும் அமைப்பல்ல என்பதை தான். இத்தனை ஆண்டுகளாக இவர்கள் இந்த விளையாட்டுக்காக என்ன கிழித்தார்கள், யார் பலனடைந்தார்கள், எத்தனை பேரை தமிழ்நாட்டிலிருந்து இந்திய அணிக்காக உருவாக்கியிருக்கிறார்கள், அவர்கள் எந்த வகுப்பை சார்ந்தவர்கள் என்பதை அறிந்தாலே தெரிந்து விடும் இது ஒரு சங்கர மடம் என்பது. கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான சில ஓசி பாஸ்களுக்காகவும், டிஷர்ட்களுக்காகவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் விலை போகிறார்கள். 


இப்போது சென்னை ரேஸ் கிளப்பிற்கு வருவோம். 730 கோடி என்பது 1994-2017ஆம் ஆண்டுகளுக்கு உரியது. 23 வருட பாக்கித்தொகை. தோராயமாக கணக்கு போட்டால் ஒரு மாதத்திற்கு 2.64 கோடி மட்டுமே. இதன் பரப்பளவு 160 ஏக்கர்கள். மெட்ரோ ரயில் விரிவாக்கம், பஸ் நிலைய விரிவாக்கம் அனைத்திற்கும் அளித்தது போக 100 ஏக்கர் நிலம் தங்களிடம் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படிப்பார்த்தால் ஒரு ஏக்கருக்கு ஒரு மாதத்திற்கான தொகை வெறும் 2 லட்சத்து 64 ஆயிரம் மட்டுமே. கிண்டியில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு குறைந்த பட்சம் 20 கோடிக்கு மேல் இருக்கும். எனவே, வாடகை 0.01% கேட்டதை தான் அநியாய வாடகை என்று நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள், நீதிமன்றமும் ஏழைகளின் கோரிக்கையை ஏற்று வங்கி கணக்கை முடக்கியதற்கு தடை விதித்து விட்டது. இந்த வழக்கு இன்னும் ஒரு 20 வருடங்களுக்கு அப்படியே புதைந்து விடும். 

இதே போல சென்னையின் மையப்பகுதியில் கோல்ப் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக 80 ஏக்கர் நிலம் காஸ்மோபாலிடன் கிளப்பிற்கு அரசு அளித்துள்ளது. கோல்ப் விளையாட்டு யார் விளையாடுவார்கள், இந்த விளையாட்டில் இதுவரை என்ன சாதித்துள்ளார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.சென்னையின் கோடீஸ்வரர்கள் முதல் நீதியரசர்கள் வரை இந்த கிளப்பின் அங்கத்தினர்கள். அவர்களில் எத்தனை பேர் கோல்ப் விளையாடுவார்கள், எத்தனை போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தந்திருக்கிறார்கள் என்பது குறித்தும் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் இந்த நிலத்திற்கான வருடாந்திர தொகை எல்லாம் அப்போதைய சந்தை மதிப்பை கொண்டு பார்த்தாலும் மிக மிக சொற்பமானது இந்த நிலத்தை தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு கழகத்திற்காக திரும்ப பெறும் அரசின் பல்வேறு முயற்சிகள் நீதிமன்றங்களின் உதவியோடு முறியடிக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு சுற்று வழக்குகளுக்கு பிறகு 2009-ம் ஆண்டு 80 ஏக்கர் நிலத்திற்கு ஒரு வருட குத்தகை தொகையாக 2026ஆம் ஆண்டு வரை 1.5 கோடி என நிர்ணயிக்கிறார்கள். அதாவது ஒரு ஏக்கர் நிலத்திற்கான மாத வாடகை தொகை ரூபாய் 15, 625 மட்டுமே! இந்த தொகையை கூட பரம ஏழைகள் உறுப்பினர்களாக இருக்கும் இந்த கிளப் கட்ட முடியாது என்று நீதிமன்றத்திற்கு சென்று இறுதியாக 2015-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் 25 கோடி கட்டுமாறு உத்தரவிட்டது. நிச்சயமாக கட்டியிருக்க மாட்டார்கள், உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீட்டிற்கு சென்றிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். தற்போதைய வழக்கு நிலவரம் தெரியவில்லை.

எனது கேள்வி ஒன்று தான். நகரின் பிரதான பகுதிகளான சேப்பாக்கத்திலும், ராயப்பேட்டையிலும், கிண்டியிலும்தான் கோல்பையோ, கிரிக்கெட்டையோ, குதிரை பந்தயத்தையோ இன்னமும் தொடர முடியுமா? உண்மையில் அது தான் காரணமா? கண்டிப்பாக கிடையாது. இந்த விளையாட்டு மேம்பாடு, ஊக்குவிப்பு என்பதெல்லாம் பம்மாத்து தான். வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் சென்னையின் உயர் குடியினரும், அதிகார வர்க்கத்தினரும் கூடி கும்மியடிப்பது தான் இந்த கிளப்களின் பிரதான நடவடிக்கை. அதற்கு தான் சென்னையின் பிரதான பகுதிகளில் இருக்கும் விலை மதிப்பில்லாத நிலங்கள் மானிய விலையில் ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நண்பர் ஒருவர் உறுப்பினராக இருப்பதால் சென்னை ரேஸ் கிளப்பிற்கு சில முறை டட்ச் விருந்திற்கு சென்றிருக்கிறேன். பத்து பேர் குழுவாக சென்று எவ்வளவு தான் குடித்தாலும், அளவுக்கதிகமாக சைவ, அசைவ சைட் டிஷ் சாப்பிட்டாலும் ஒருவருக்கான தொகை என்பது ஐநூறு ரூபாய்க்கு மேல் வராது! தி நகரில் இருக்கும் டென் டவுனிங் ஸ்ட்ரீட்டில் ஒரு பைண்ட் பியர் தோராயமாக 500 ரூபாய் இருக்கும் என்பதை ஒப்பிட்டு பார்த்தால் தான் வித்தியாசம் புரியும். பத்து ரூபாய் சர்க்கரை மானியத்திற்க்கு லபோ திபோ என குதிப்பவர்கள் இதை பற்றி எப்போதாவது பேசியிருக்கிறார்களா? வங்கி கணக்கை முடக்கியதற்கே மூன்று செய்தி கட்டுரைகளை கிளப்களின் சார்பாக வெளியிட்டிருக்கும் தி ஹிந்து பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றியதை பற்றிய ஒரு துண்டு செய்தி கூட வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் பிரதான பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களை சில குறிப்பிட்ட மேட்டுக்குடியினர் அரசு ஆதரவுடன் வாங்கி கொண்டு அதற்கான நியாயமான வாடகையையும் கொடுக்காமல் நீதிமன்றத்தின் துணையோடு இழுத்தடிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற வகையில் வர மாட்டார்கள். ஏனென்றால் நீதிமன்றம் துணைக்கு இருக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ நீதிமன்றம் உதவிக்கு வரும் வகையில் தவறாக உத்தரவிட தெரிந்த அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த கிளப்கள் இதே இடத்தில் தான் இருக்கும் . மெட்றாஸ் ரேஸ் கிளப்பின் கார் பார்க்கிங் மற்றும் திறந்த வெளி பார் இயங்கும் இடத்தை மட்டும் விட்டு கொடுத்தாலே சென்னையின் ஒட்டு மொத்த சேரியில் குடியிருப்பவர்களுக்கும், அதாவது 'ஆக்கிரமிப்பாளர்களுக்கும்', அடுக்கு மாடி வீடு குடியிருப்பு கட்டி கொடுத்து விடலாம். ஆனால், இந்த 'யதார்த்தம்' மட்டும் மீடியாக்களுக்கோ, தமிழ்நாட்டை ஆளும் கட்சிகளுக்கோ, சமூக நீதி காவலர்களுக்கோ உறுத்தாது.

4 comments:

  1. செங்கதிர் CPIMNovember 25, 2017 at 10:37 AM

    திராவிட ஊழல் ஆட்சிகள்/கட்சிகள் ஒழிக்கபட்டு சமத்துவ புரட்சி ஓங்க வேண்டும்

    ReplyDelete
  2. சென்னை நகருக்குள்ளிருந்து குப்பம் மற்றும் சேரிகளிலும், கூவம் மற்றும் அடையாறு நதியோரங்களிலும் ஆஸ்பெஸ்டாஸ் குடிசைகளில் வசிக்கும் மக்கள், ஓரளவுக்கு பாதுகாப்பான குடிசைமாற்றுவாரிய வீடுகளுக்கு இடம்பெயர்க்கப்படும் போதெல்லாம் ஃபேஸ்புக்கில் போராளிகள் பொங்குகிறார்கள். ‘சொந்த நிலத்தை விட்டு அகற்றப்படுவதின் வலி’ etc.,
    பொங்குபவர்களுக்காகதான் அவர்கள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதுதான் இப்பிரச்சினையின் நகைமுரண்.
    சுற்றி வளைக்காமல் பச்சையாகவே கேட்கிறேன். “போராளிகளே, உங்கள் ஊரில் இடமே இல்லையா? எதுக்கு கும்பல் கும்பலா மெட்ராசுக்கு வர்றீங்க? அப்படி வந்து இங்கே அப்படி இப்படி எப்படியோ லோன் போட்டு பிளாட் வாங்கி, கார் வாங்கி, கல்யாணம் பண்ணி, குழந்தைகள் பெத்துட்டு, டிராஃபிக் ஜாமில் சிக்கி, ரோட்டை எக்ஸ்டெண்ட் பண்ணச் சொல்லி தி ஹிண்டுவுக்கு லெட்டர் எழுதி, ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி கார்ப்பரேஷனுக்கு புகார் எழுதி...”
    இதையெல்லாம் செஞ்சிட்டு அப்புறமென்ன அவரவர் வாழ்விடத்திலிருந்து அகற்றப்படுபவனின் வலியெல்லாம்?
    மயிலாப்பூர் காவாக்கரை, சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஏரியாவில் இருக்கும் சேரிகளுக்கு எல்லாம் எப்போவாவது போயிருக்கீங்களா? அங்கே ஒரே ஒரு நைட்டு உங்களாலே தூங்க முடியுமா? உங்களாலே முடியாதுன்னா அவங்க மட்டும் காலத்துக்கும் ஏன் அங்கேயே கிடக்கணும்?

    ReplyDelete
  3. சென்னையில் ஒன்றரை லட்சம் குடிசைவாழ் குடும்பங்களுக்கு மாற்று இல்லம் அமைத்துத்தர வேண்டும். இதற்காக 5,000 புதிய குடியிருப்புகளை கட்ட வேண்டும். இன்றைய தேதியில் உத்தேச செலவு ரூ.75,000 கோடி. 2022க்குள் இந்த இலக்கு எட்டப்பட வேண்டும்.

    யோசித்துப் பார்த்தால் சாத்தியமே இல்லைதான்.

    ஆனால்-

    நடக்கும். நடந்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் பங்களிப்பு தவிர்த்து மத்திய அரசின் அத்தனை வீடு கட்டும் திட்டங்களில் இருந்தும் நிதி பெறுவதற்கு நம் அதிகாரிகள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழகம் தவிர்த்து வேறெந்த மாநிலமும் இப்படி கடினமான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அதை நோக்கி செயல்படாது.

    இப்படிப்பட்ட சூழலில் நாம் பேஸ்புக்கில் பேசிக்கொண்டிருக்கும் விளிம்புநிலை அறமெல்லாம், பிரும்மாண்டமான லட்சியத்துக்கு முன்பு தூசுதான்.

    Yuva

    ReplyDelete
  4. இன்றைக்கு ஒரு கோடிக்கும் அதிகமான ஆட்கள் இங்கே இருப்பதற்கான காரணம் இது தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்துக் கொண்டது தான். ஆனால் எதுவுமே தேவையில்லை, எல்லாமே பணக்காரர்களுக்கான இடமாக மாறுகிறது என்று இங்கே வாதிடும் எல்லோர் வீடுகளும் ஏதோ ஒரு ஏரியின் கரையோரமோ, ஏரியின் மீதோ கட்டப்பட்டு இருக்கின்றன. பார்க்கிங் லாட்டில் ஒரு ஹாட்ச்பேக்கோ, செடானோ நிற்கிறது. வீட்டில் இரண்டு ஏ.சிக்கள் இருக்கின்றன. எல்லோரும் சென்னையின் ட்ராபிக் ஜாமை நாளுக்கு ஒரு தடவையாவது திட்டுகிறார்கள். ஏதோ ஒரு அம்மாவோ, பெண்ணோ, ஆளோ அவர்களின் வீடுகளில், அலுவலகங்களில் எல்லா அடிமட்ட வேலைகளையும் செய்கிறார்கள். இவை எதுவுமே இல்லாமல் பல பேரால் சென்னையில் இயங்கவே முடியாது.
    எல்லா வளர்ச்சிகளுமே trade-off தான். லார்வா, ப்யூப்பாவிலிருந்து நான் வண்ணத்துப் பூச்சியாக மாறவே மாட்டேன் என்று அடம் பிடித்தால் சாவு நிச்சயம். Evolution is inherent. பொலிடிக்கல் கரெக்டென்ஸ் என்கிறப் பெயரில் பேசுவதில் பெரும்பகுதி இடது பக்கமாக இருக்கும் வலதுசாரி அயோக்கியத்தனம் தான். ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பதில் அரசியல்வாதிகளை விட ஆக்டிவிஸ்டுகளுக்கு தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது போல.

    ReplyDelete