Wednesday, November 15, 2017

ஒரு விஷமத்தனமான கேள்வியும் பக்குவமான பதிலும்




தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்கள் இன்று காவல்துறையை சந்தித்து தன் பதிவு தொடர்பான விளக்கம் அளித்த பின்பு அந்த வழக்கு முடிந்து விட்டதாக எழுதி இருந்தார். 

தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் தொடர்பாக நினைவுக்கு வந்த ஒரு சம்பவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 



எங்கள் கோட்ட மாநாட்டை ஒட்டி நடைபெறும் மக்கள் ஒற்றுமை கலை விழாக்களில் மூன்று முறை தோழர் சு.பொ பேசியுள்ளார்.

1999 ம் வருடம் திருவண்ணாமலையில் கோயிலுக்கு அருகேதான் கலை விழா நடத்த அனுமதி தரப்பட்டிருந்தது. தோழர் சு.பொ மத வெறி, மத நல்லிணக்கம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். 

ஒரு ஆர்.எஸ்.எஸ் பேர்வழி கேள்விகள் என்ற பெயரில் துண்டுச் சீட்டுக்களை அனுப்ப தோழர் அதற்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். 

அந்த சமயம் நாதஸ்வர ஓசையோடு அருணாச்சலேஸ்வரரின் உற்சவ விக்கிரக வீதி உலா அங்கே வந்தது. அந்த உலா முடியட்டும், பிறகு பேசுகிறேன் என்று தோழரும் ஒரு ஐந்து நிமிடம் இடைவெளி விட்டார். அவர் மீண்டும் பேசும் போது அடுத்த துண்டுச்சீட்டு வந்தது.

"கடவுள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது என்று சொன்ன உங்கள் பேச்சையே ஐந்து நிமிடம் நிறுத்தியது கடவுளின் சக்திதான் என்பதை இப்போதாவது ஒப்புக் கொள்கிறீர்களா?" 

என்பதுதான் அந்த துண்டுச்சீட்டில் இருந்த கேள்வி.

அடுத்த நொடியே தோழர் பதிலளித்தார்.

"அது கடவுளின் சக்தி அல்ல. மாற்றுக் கருத்துள்ளோரின் உணர்வுகளுக்கு மரியாதை தர வேண்டும் என்ற எங்கள் நாகரீகம். இதுதான் நாங்கள் சொல்கிற மத நல்லிணக்கம். ஒரு கடவுளை வழிபட்டுக் கொண்டே அடுத்த மதத்தின் வழிபாட்டுத் தளத்தை இடிப்பவர்களுக்கு இது புரியாது"  

இதைக் கேட்டதும் அந்த மனிதர் ஓடி விட்டார் போல. அதற்குப் பிறகு துண்டுச்சீட்டுக்கள் வரவில்லை.

பி.கு : மேலே உள்ள முதல் படம் இன்று காவல்துறைக்கு விளக்கம் கொடுத்து விட்டு தோழர் வெளியே வந்த போது எடுத்த படம்.

அடுத்த படம் 2006 ம் வருடம் வேலூரில் நடந்த கலை விழாவில் பேசிய போது எடுக்கப்பட்டது.

 

7 comments:

  1. 18 வருஷம் முன்னாடி பேசினது ஞாபகத்தில இருக்கா? சும்மா அடிச்சு விடாதே

    ReplyDelete
    Replies
    1. ஈராயிரம் வருசத்துக்கு முன்னாடி ராமரும் சீதையும் பேசியதெல்லாம் சிலர் சொல்லும்போது 18வருசமெல்லாம் ......

      Delete
  2. யப்பா அனானி, என்னுடைய பலமும் பலவீனமும் என்னுடைய ஞாபக சக்திதான். அனைத்தும் நினைவில் இருப்பது பலம்.
    மறந்து தொலைக்க வேண்டிய சிலதும் நினைவில் இருப்பது பலவீனம்.

    அடித்தெல்லாம் விடவில்லை. மறக்கக் கூடிய நிகழ்வா இது?

    ReplyDelete
  3. மாற்று கருத்துள்ளவர்கள் உணர்வுகளை கருத்தில் கம்யூனிச போராளிகள் கருத்தில் கொள்வார்கள் என்றால் எதுக்கு சீனாவில் அப்பாவி இஸ்லாமியர்கள் மீது கொடுமையை புரிகின்றது ?

    Ansari Muhammad
    D.M.K

    ReplyDelete