Sunday, October 22, 2017

மெர்சல் - திசை திருப்பியதா பாஜக?




தமிழிசை, எச்.ராசா மற்றும் பாஜக  உருவாக்கிய அவசியமற்ற சர்ச்சையால் மெர்சல் படத்தை இன்று திரையரங்கிற்குச் சென்று பார்த்தோம்.

வழக்கமான  விஜய்யின் பழிவாங்கல் படம்தான். சுவாரஸ்யமான படமும் கூட.

விஜயின் நடனம், புரியாத பாட்டுக்கள், சில சண்டைகள்,  கொஞ்சம் பஞ்ச் வசனம்,  சும்மா வந்து போகும் கதாநாயகிகள், இத்தோடு கொஞ்சமா ஒரு கதை, சில மெஸேஜ்  என்று அமைந்த ஒரு பொழுது போக்குப் படத்தை ஏதோ புரட்சிகரப் படம் என்ற அளவிற்கு எடுத்துச் சென்றது நிச்சயமாக பாஜக ஆட்கள்தான். அதற்காக திரைப்படக்குழு பாஜகவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

விஜய் மூன்று பாத்திரங்களில் வருகிறார். முதல் முறையாக தாடியெல்லாம் வைத்துள்ளார். வழக்கத்தை விட பெட்டர் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பு உள்ளது.  ஐந்து ரூபாய் டாக்டரும் மேஜிக் நிபுணரும் ஒரே பாத்திரம்தான் என்று குழம்பும் அளவிற்கு சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளது. 

மருத்துவத்துறை பற்றிய கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் பணம் பார்ப்பதற்காக செய்கின்ற பல கொடுமைகள் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்படுகின்றன. நோயாளிகளை அதிக நாட்கள் தங்க வைக்கவே சுகப்பிரசவங்கள் கூட சிஸேரியனாக மாற்றப் படுகின்றன என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

நூறு நல்ல மருத்துவர்கள் இருந்தாலும் பத்து மோசமானவர்களால் எல்லோருடைய பெயரும் கெடுகிறது என்பதும் அரசு மருத்துவமனைகளின் மோசமான நிலையால் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள் என்பதும்  யதார்த்தத்தில் நடக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்?

ஒட்டு மொத்த உற்பத்தியில் சுகாதாரத்திற்கு ஐந்து சதவிகிதம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) ஒப்புக் கொண்டிருக்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இடதுசாரிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்த காலத்தில் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் இதனை அமலாக்க உறுதி சொன்னது. அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் நிச்சயமாக அரசு மருத்துவ மனைகளின் நிலைமையில் பெரும் முன்னேற்றம் வந்திருக்கும். இன்று கேரள அரசு இவ்விஷயத்தில் காண்பிக்கிற அக்கறையை அனைத்து மாநிலங்களிலும் இல்லை என்பதும் உண்மைதானே.

கார்ப்பரேட் மருத்துவமனைகள் எந்த ஒரு நோயாளியிடமும் முதலில் கேட்கிற கேள்வி "மெடிக்ளெய்ம் இன்சூரன்ஸ் உள்ளதா?" . சிகிச்சை என்பது அக்கேள்விக்கான பதிலின் அடிப்படையில்தான். மருத்துவம் என்பது சேவை என்ற நிலையிலிருந்து வணிகம் என்று மாறி விட்டது. அதை மாற்ற மருத்துவத்துறை அரசின் கட்டுப்பாட்டிற்கு வர வேண்டும் என்பதை சொல்கிறது இப்படம்.

"மெர்ஸல்"  படத்தின் இந்த அடிப்படைப் பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்ப  "ஜி.எஸ்.டி" யை மருத்துவர் தமிழிசை கையில் எடுத்துள்ளாரோ என்று சந்தேகம் வருகிறது.   

ஏனென்றால் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா இதெல்லாம் போகிற போக்கில் வரும் வசனங்கள். சாதாரணமாக விட்டிருந்தால் அவ்வளவாக கவனம் ஈர்த்திருக்காது. இப்போது அவை பரபரப்பாகியுள்ளது. மருத்துவ வணிகமயம் பின்னுக்குப் போய் விட்டது.

பல மருத்துவர்கள் கோபமாக பொங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் விஜய் மீதும் அட்லீ மீதும் பொங்குவதற்குப் பதிலாக தங்கள் துறையில் உள்ள கறுப்பாடுகள் மீது பொங்குவது மக்களுக்கு நலன் பயக்கும். 

சரி, திரைப்படத்திற்கே மீண்டும் வருவோம்.

மூன்று கதாநாயகிகளில் நித்யா மேனனுக்காவது கொஞ்சம் நடிக்க வாய்ப்பு இருந்தது. காஜல் அகர்வாலும் சமந்தாவும் பாவம். ஒரு பாட்டு, இரண்டு சீன். அவ்வளவுதான்.

வடிவேலு மீண்டும் திரும்பி இருக்கிறார். வருகிற காட்சிகளில் தன்னை நிரூபிக்கிறார்.  சத்யராஜிற்கு பெரிய வேலை இல்லை.  எஸ்.ஜே.சூர்யாவை இனி பல படங்களில் வில்லனாக பார்க்க முடியும்.

பாடல்கள், பின்னணி இசை பற்றி ஏதாவது எழுதினால் "நீ இளையராஜா ரசிகன். அதனால்தான்" என்று யாராவது சொல்வார்கள். எதற்கு வம்பு?

துப்பாக்கி, கில்லி போல இல்லாவிட்டாலும்  சுறா அளவு மோசமும் இல்லை. 

சுவாரஸ்யமான படம்தான். ஒரு முறை பார்க்கலாம்.  

பின் குறிப்பு 2 : ஜோசப் விஜய் என்று எச்.ராசா வழக்கம் போல விஷம் கக்கினார். அவர் திருட்டுத்தனமாக இந்த படத்தைப் பார்த்த போது விஜய் நெற்றி முழுதும் வீபூதியோடு வருவதை பார்க்கவில்லை போலும். ஒரு நல்ல கண் டாக்டரை பார்ப்பது நல்லது. நல்ல டாக்டர் யார் என்று மருத்துவர் தமிழிசையிடம் மட்டும் யோசனை கேட்க வேண்டாம்.

பின் குறிப்பு 2: யப்பா ரசிகக் கண்மணிகளா, கொஞ்சம் அமைதியா படத்தைப் பாருங்கப்பா, உங்க ஆரவாரத்தில காது வலிக்குது.

பின் குறிப்பு 3 : ஏழு ரூபாய் டாக்டர் - நாளை





No comments:

Post a Comment