Wednesday, October 25, 2017

ஏழு ரூபாய் டாக்டர் இங்கேயும் கூட . . .





1993 அக்டோபரில் என் மகன்  கும்பகோணத்தில் பிறந்தான். 1994 ஜனவரியில் அவனை  வேலூருக்கு அழைத்து வந்தோம். அதன் பின்பு அவனுக்கு உடல் நலத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் வேலூர் தென்னமரத் தெருவில் இருந்த டாக்டர் பிரகாசம் என்ற குழந்தைகள் நல நிபுணரிடம்தான் அழைத்துச் செல்வோம்.

சின்ன இடத்தில்தான் அவரது கிளினிக் இருந்தது. மருத்துவர் பார்வையிட ஒரு அறை. அதற்கு முன்பாக நோயாளிகள் அமர ஒரு அறை அவ்வளவுதான். அதிகபட்சமாக ஒரு இருபது பேர் உட்காரலாம். எப்போதுமே கூட்டம் அலைமோதும். முன் கூட்டியே சென்று டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளை பரிசோதனை செய்து விட்டு அவரே மூன்று வேளைக்கான மாத்திரைகளை அவரே கொடுத்து விடுவார். ஐந்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொள்வார். அவசியமேற்பட்டால் மட்டுமே ஊசி போடுவார். அதற்காக கூடுதல் பணமும் வாங்க மாட்டார்.

நாம் சொல்வதை முழுதாகக் கேட்பார். ஆனால் அவர் அதிகம் பேச மாட்டார்.  வெள்ளை சட்டை, வெள்ளை பேண்டோடுதான் எப்போதும் பார்த்திருக்கிறேன். வேலூரைப் பொறுத்தவரை குழந்தைகள் நிபுணர் என்றால் அவர்தான். தனியாக மருத்துவமனை எதுவும் அவர் நடத்தவில்லை. குழந்தைகளின் நிலைமை மோசமாவது போல தோன்றினால் சி.எம்.சி மருத்துவமனைக்குப் போகச் சொல்லி விடுவார்.

நீண்ட நாட்கள் வரை ஐந்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தார். 1995 மத்தியில் ஏழு ரூபாய் வாங்கத் தொடங்கி இருந்தார்.

ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

ஆம்.

வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் ஒரு சுரங்கம் தோண்டி தப்பித்தார்கள் என்ற செய்தி நினைவுக்கு வருகிறதா?

அந்த நாள் 15.08.1995. அன்று இரவு வேலூர் முழுதும் மின் வெட்டு. இரவு பத்து மணி அளவில் போன மின்சாரம் மறு நாள் காலை ஏழு மணி அளவில்தான் வந்தது.

மின்சாரம் போன நிலையில் அவர் கையில் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டு போர்ட்டபிள் ஜெனரேட்டரை இயக்கியுள்ளார். டீசல் அவர் மீது தெறித்து விழுந்து தீ பற்றிக் கொள்ள அந்த விபத்தில் அவர் காலமானார்.

வருடங்கள் பல உருண்டோடினாலும் அவரது சேவை மனப்பான்மை இன்னும் அவரை நினைக்க வைக்கிறது.

மருத்துவர்கள் நினைத்தால் எளிய கட்டணத்தில் சேவை செய்ய முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.

பின் குறிப்பு : இணையத்தில் எவ்வளவோ தேடியும் அவரது புகைப்படம் கிடைக்கவில்லை. ஆனால் என்ன, என் மனதில் அவர் படம் பதிந்துள்ளது. 

பின் குறிப்பு 2


இந்த பதிவைப் பார்த்து ஒரு நண்பர் பின்னூட்டமிட்டது அல்லாமல் மருத்துவர் பிரகாசம் அவர்களின் புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார். அப்படத்தை மேலே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அவரது மகன் வேறு ஒரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார். அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

4 comments:

  1. தடமின்றி மறைந்துபோன நல்ல ஆன்மாவைப் பற்றி பகிர்ந்துள்ளீர்கள். அவர் பலருடைய இதயத்தில் பதிந்திருப்பார். நன்றி.

    ReplyDelete
  2. Sharing a mail received here


    Read your message on Dr. Praskam...Thanks for sharing your experiences of the great man.

    your search for Dr.'s picture if it has not yielded any lookout for his son normally puts up obituaries in tamizh newspapers in the month of August for his parents together.


    Best Regards
    Muthu

    ReplyDelete
  3. Comment posted by the Son of Dr Prakasam in another post shared here

    Thanks for your acknowledgement sir...I'm really proud of my father..

    ReplyDelete
  4. குடியாத்தத்தில் அவருக்கு 3ரூபா டாக்டர் என்று தான்பெயர். மேலும்ஒவ்வொரு Sunday யும் குடியாத்தத்தில் இலவசமாக பிற்பகல் வைத்தியம் பார்ப்பார்

    ReplyDelete