நெல்லை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடந்த கொடிய சம்பவம் மனதை வாட்டுகிறது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் மன வலிமை எனக்கில்லை.
இந்த துயரத்திற்கு யார் பொறுப்பு?
வாங்கிய கடனைப் போல இரு மடங்கு வட்டியாக அளித்த பின்பும் அசலை திருப்பிக் கொடு என்று மிரட்டப்பட்ட அந்த குடும்பத்தலைவன் காவல்துறையை நாடிய பின்பும் அலட்சியம் காண்பித்த அல்லது கந்து வட்டிக் கும்பலுக்கு துணையாக நின்ற காவல்துறை அதிகாரிகளைத் தவிர இந்த துர் மரணங்களுக்கு வேறு யாரை காரணமாகச் சொல்ல முடியும்?
கந்து வட்டிக் கொடுமைகள் என்பது தமிழகம் முழுதும் நடந்து கொண்டிருக்கிறது. இசக்கி முத்து குடும்பம் என்பது முதல் பலி அல்ல. கந்துவட்டி வாங்கி விட்டு அதை திருப்பித் தர முடியாமல் அக்குடும்பத்துப் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலும் புகைப்படம் எடுத்தும் மிரட்டியது ஒரு கும்பல். அக்கும்பலுக்கு எதிராக போராடியதால் வெட்டிக் கொல்லப்பட்ட பள்ளிப்பாளையம் தோழர் வேலுச்சாமியை மார்க்சிஸ்டுகள் மறக்க மாட்டார்கள்.
இன்று துயரம் நடந்திருக்கிற அதே நெல்லையில் கந்து வட்டிக் கும்பலுக்கு எதிராக புகார் கொடுத்த காரணத்தால் நெல்லை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தலைவர் தோழர் கோபி கொல்லப்பட்டார். ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கீழேயுள்ள பத்திரிக்கைச் செய்தி உணர்த்தும்.
இந்த சம்பவத்திற்கும் பிறகும் காவல்துறை மெத்தனமாக இருந்ததன் விளைவே இன்று நான்கு உயிர்கள் மடிய காரணமாகி விட்டது.
இதை வெறும் காவல்துறையின் மெத்தனம் என்று மட்டும் சுருக்கி விட முடியாது.
கந்துவட்டித் தொழில் நடத்துபவர்கள் யாரென்று பார்த்தால் பெரும்பாலும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள்தான் அல்லது ஜாதிய அமைப்புக்களை நடத்துபவர்கள் அல்லது அதிலே ஆதிக்கம் செலுத்துபவர்கள். பல அரசியல் முதலைகளும் தங்களிடம் உள்ள திருட்டுப் பணத்தை மேலும் பெருக்க இந்த கந்து வட்டி பேர்வழிகளிடம்தான் அளிக்கிறார்கள். இவர்களுக்கும் காவல்துறைக்கும் உள்ள நெருக்கம் இயல்பானது.
அதனால்தான் பாதிக்கப்படுபவர்கள் புகார் கொடுத்தால் அதை உதாசீனம் செய்வார்கள். ஏன் உன் மீது இவர் புகார் கொடுத்துள்ளார் என்று காட்டியும் கொடுப்பார்கள். காவல்துறையின் ஆசி இருக்கிற போது கந்து வட்டிப் பேர்வழிகள் எந்த அராஜகத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள்.
இப்போது நெல்லை சம்பவம் மூலம் கந்துவட்டிப் பிரச்சினை மக்கள் கவனத்தைப் பெற்றுள்ளது. நால்வர் உயிரிழப்பிற்குக் காரணமான கந்து வட்டி ஆசாமியை கைது செய்தால் மட்டும் போதாது. இசக்கிமுத்து குடும்பத்தினர் கொடுத்த புகாரை அலட்சியம் செய்த காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் சேர்த்தே கைது செய்ய வேண்டும். அப்போதாவது காவல்துறை பொறுப்பாக நடக்கிறதா என்று பார்ப்போம்.
குடிசைகளில் பரவுகிற தீ,
வெண்மணியில் எரிந்த தீ,
எளியவர்களை கொளுத்துகின்ற தீ
என்றுதான் கொடியவர்களை தீண்டுமோ?
வர்க்க பேதம் பார்த்து
தயங்குகிறதோ சுட்டெரிக்கும் தீ?
No comments:
Post a Comment