Tuesday, October 10, 2017

கடிதங்கள் - சில சுவையான நினைவுகள்

முக நூல் நினைவுபடுத்திய பதிவு. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதை  மீண்டும் பதிவிடுகிறேன். 

இன்றைக்கு அஞ்சல்துறை என்பது பெரும்பாலும் அலுவல்ரீதியான கடிதங்களை அனுப்புவது என்ற அளவில் குறைந்துள்ளது. எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்று அச்சமும் உள்ளது.

இப்போது பழைய பதிவை படியுங்கள். 

கடிதங்கள் – வந்ததும் வராததும்




இன்று உலக அஞ்சல் தினம் – புதுவை தோழர் சாய் ஜெயராமன் நேற்று முக நூலில் மீள் பதிவு செய்திருந்த நிலைத் தகவல் மூலமே அறிந்து கொண்டேன். அவருடைய பதிவு என்னுடைய நினைவுகளையும் தூண்டி விட்டது.

நான் பத்தாவது, பனிரெண்டாவது படித்தது தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில். நாங்கள் இருந்தது காரைக்குடியில். பத்தாவது, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களையே கடிதம் மூலமே அறிந்து கொண்டேன். அந்த கடிதங்கள் வந்து சேரும் வரை இருந்த படபடப்பு இருக்கிறதே, அதை உணர மட்டுமே முடியும், எழுத முடியாது.

கல்லூரி இறுதித் தேர்வின் போதும் அப்படித்தான் ஆனது. கடைசி செமஸ்டர் முடிவுகள் வந்ததும் அந்த செமஸ்டர் மதிப்பெண்களை மட்டும் ஒரு நண்பன் எழுதி அனுப்பியிருந்தான். அப்போது அடுத்த பதற்றம். மொத்தம் ஆறு செமஸ்டர்கள், ஒவ்வொரு செமஸ்டரிலும் ஐந்து தாள்கள். பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடையேயான வேறுபாடு தெரிவதற்குள், கல்லூரியில் பேப்பர் திருத்துபவர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்ற புரிதல் வருவதற்குள் இரண்டு செமஸ்டர்கள் ஓடி விட்டது. 

விளைவு? அரியர்ஸ் வைக்காவிட்டாலும் கூட முதல் இரண்டு செமஸ்டர்களில் வாங்கிய மதிப்பெண்கள் குறைவுதான். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டுமென்றால் மொத்தம் 1800 மதிப்பெண் பெற வேண்டும். முதல் இரண்டு செமஸ்டர்களில் சொதப்பியதை ஈடுசெய்ய அதற்கடுத்த செமஸ்டர்களில் முயன்றாலும் கடைசி செமஸ்டரில் 338 மதிப்பெண் வாங்கினால் மட்டுமே முதல் வகுப்பு பெற முடியும். ஆகவே நண்பனின் அஞ்சல் அட்டையில் எழுந்தியிருந்த மதிப்பெண்களை கூட்டுகையில் இதயத் துடிப்பு அவ்வளவு பயங்கரமாக இருந்தது. ஆஹா, மிகச் சரியாக 338. முதல் வகுப்பு. ஆனந்தத்திற்கு அளவேது! மிக்க மகிழ்ச்சி கொடுத்த கடிதம் அது.

கல்லூரியில் படிக்கும் போதே காத்திருந்த கடிதமும் ஒன்று உண்டு. அது பற்றி முன்பே எழுதியுள்ளேன். இருப்பினும் மீண்டும் நினைவு கொள்கிறேன். சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கான அனுமதிக்கடிதத்திற்கான காத்திருப்பு அது. நண்பர்களுக்கெல்லாம் வந்து எனக்கு மட்டும் வராததால் ஒவ்வொரு நாளும் தபால்காரருக்காக காத்திருந்து  அந்த காத்திருப்பு

ஞாயிற்றுக் கிழமை
வழி மீது விழி வைத்து
வராத கடிதத்திற்கு
ஏங்கி விடும்
ஏமாற்றப் பெருமூச்சு
இல்லாத ஒரே நாள்

என்று கவிதை எழுதி அது கல்கி இதழில் பிரசுரமுமானது. 

கல்லூரியிலிருந்து ஆவலாக எதிர்பார்த்திருந்த இன்னொரு கடிதம் பட்டமளிப்பு விழா. நேரில் பட்டம் பெறுவதற்கு அதற்கான பணமும் கட்டியதால் ஆவலோடு காத்திருந்த விழா அது. நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு என்பதோடு கருப்பு கவுன் தலையில் தொப்பி வைத்து புகைப்படம் எடுப்பதற்காகவும் அந்த விழாவை எதிர்நோக்கி இருந்தேன். 

ஆனால் கடைசி வரை அதற்கான கடிதம் வரவேயில்லை. பிறகொரு நாள் பட்டமளிப்பு விழா ஒரு மாதம் முன்பாகவே முடிந்து விட்டது என்று அறிந்தபோது கோபம் கொப்புளிக்க என் வாழ்வின் உன்னதமான தருணத்தை பறித்து விட்டீர்களே, இது நியாயமா என்று கடுமையான ஒரு கடிதத்தை கல்லூரி முதல்வருக்கு அனுப்பினேன். மூன்று நாட்களுக்குப் பின்பு “உங்களுடைய பட்டத்தை இத்துடன் இணைத்துள்ளோம். பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்த நகல் கடிதத்தில் கையெழுத்திட்டு அனுப்பவும்” என்ற சம்பிரதாயமான வாசகங்கள் அடங்கிய கடிதத்தோடு இரண்டாய் மடித்து பட்டமும் வந்து சேர்ந்தது. அப்போதும் கோபம் தணியாததால் “ வாழ்வில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மகிழ்ச்சியோடு பெற்றிருக்க வேண்டிய பட்டத்தை கல்லூரியின் அலட்சியம் காரணமாக பதிவுத் தபாலில் சாதாரணமான முறையில் பெற்றுக் கொண்டேன்” என்று எழுதி பதிலளித்தேன். 

கல்லூரி படிப்பு முடிந்ததும் வேலைக்காக விண்ணப்பிக்க அஞ்சல் நிலையத்திற்கும் எனக்குமான தொடர்பு பலப்பட்டது. ICWAI வேறு அஞ்சல் வழியில் இணைந்திருந்ததால் அதற்கான பாடப்புத்தகங்கள், திருத்தப் பட்ட விடைத் தாள்கள் என்று உறவு கெட்டித்தது. நல்ல ஒஸ்தி வழ வழ வெள்ளைக் காகிதத்தில் அச்சிடப்பட்ட கவரில் ஒரு கடிதம் வந்தது. படேல் ரோட்வேஸ் என்ற நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் ட்ரெய்னியாக சேர்வதற்கான தேர்விற்கான கடிதம் அது.

சென்னை எழும்பூரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோகுல் என்ற மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கு வரச்சொல்லி இருந்தார்கள். திரைப்படத்தில் மட்டும் பார்த்திருந்த அலங்கார விளக்குகள், ஆளை விழுங்கும் சோபா செட்டுக்கள் கொண்ட ஆடம்பர வரவேற்பரையை அன்றுதான் முதல் முறையாக பார்த்தேன். நூற்றி ஐம்பது பேரை அழைத்திருந்தார்கள். எழுத்துத் தேர்வு, குழு விவாதம் என்று நூற்றி இருபது பேரை வடிகட்டி விட்டு கடைசியில் முப்பது பேர் மட்டும் ஐந்து காலியிடங்களுக்காக நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டோம். கடிதம் வரும் என்றார்கள்.

நல்ல ஒஸ்தி வழ வழ வெள்ளைக் காகிதத்தில் அச்சிடப்பட்ட கவரில் இன்னொரு கடிதம் வரவேயில்லை. அப்போது நல்ல மழை வெள்ளத்தில் சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட சில தபால் பைகள் தண்ணீரில் நாசமாகி விட்டது என்ற தகவல் இருந்தது. நமக்கான கடிதம் கூட அப்படி நாசமாகி கிடைக்காமல் போயிருக்கலாம் என்று ரொம்ப நாள் மனதை தேற்றிக் கொண்டிருந்தேன். என் வாழ்வை மாற்றிய முக்கியக் கடிதம் பற்றி கடைசியில் சொல்கிறேன். 

நான் பொறுப்பாக எழுதியும் பதில் வராத கடிதமும் ஒன்று உண்டு. கல்லூரியில் படிக்கையில் National Loan Scholarship என்ற திட்டத்தின்படி ரூபாய் 2150 வாங்கியிருந்தேன். என் மூன்று வருட கல்லூரிக் கட்டணம், முப்பது தாள்களுக்கான தேர்வுக் கட்டணம் எல்லாமே இத்தொகையை விட குறைவுதான். என் படிப்பிற்காக என் குடும்பத்தினர் செலவு செய்தது என்பது விடுதிக் கட்டணமும் நெய்வேலி மதுரை பயணச் செலவுகளும் மற்ற செலவுகளும்தான். 

பணியில்  சேர்ந்த உடனேயே அக்கடனை எவ்வாறு திருப்பி செலுத்த வேண்டும் என்று விபரம் கேட்டு கல்லூரிகளின் இயக்ககத்திற்கு கடிதம் பதிவுத் தபால் மூலம் எழுதினேன். பல நினைவுறுத்தல் கடிதங்களும் அனுப்பினேன். ஆனால் எதற்கும் பதில் வரவேயில்லை. திடீரென்று ஒரு நாள் ஒரு கடிதம் வருகிறது. நீங்கள் வாங்கிய கடனை உடனே திருப்பி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கடிதம் மிரட்டியது. கடனை செலுத்தாமல் ஏமாற்றும் முதலாளிகளின் பட்டியலைக் கூட வெளியிட பயப்படும் தேசத்தில்தான் கடனை ஒழுங்காக செலுத்துகிறேன்  என்று சொல்பவன் மிரட்டப்படுகிறான். அந்த வருடம் அப்போதுதான் போனஸ் வந்திருந்தது. அப்படியே முழுத் தொகையையும் செலுத்தினேன். 

கல்லூரி படிப்பு முடிந்த பிறகு ஐ.சி.டபிள்யு.ஏ.ஐ படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே மற்ற நேரங்களில் நெய்வேலி என்.எல்.சி நூலகத்தில்தான் சரணடைவேன். நல்ல பெரிய நூலகம் அது. ஏராளமான புத்தகங்கள் கொண்டது. அந்த நூலகர் திரு ராகவனும் ஆர்வம் மிக்க ஒருவர். காலை வேளையில் பொது அறிவு, பொருளாதார புத்தகங்கள் என்றால் மாலையில் கதைப் புத்தகங்கள் என்று பிரித்துக் கொண்டு படிப்பேன். நாம் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை வேறு யாரும் எடுத்துச் சென்று படிக்கக் கூடாது என்பதற்காக சம்பந்தமில்லாத வரிசையில் ஒளித்து வைக்கும் உயர்ந்த பண்பு எனக்கும் உண்டு.

15.03.1986 – அன்றைய தினம் நூலகம் கிளம்பும்போது என் அப்பா நான் வெளியூர் செல்கிறேன். என்னை புதுக்குப்பம் ரவுண்டானாவில் இறக்கி விட்டு செல் என்று சொல்ல அவர் தயாராக காத்திருந்து அவரை இறக்கி விட்டு நூலகம் செல்ல புறப்பட்டால் சைக்கிள் டயர் பஞ்சர். சைக்கிள் ரிப்பேர் கடை வரை தள்ளிக் கொண்டு பஞ்சர் ஒட்டிக் கொண்டு பார்த்தால் மணி பனிரெண்டரை. இதற்கு மேல் எங்கே லைப்ரரி செல்வது என்று வெறுப்போடு வீடு திரும்பினால் வீட்டு வாசலிலேயே அம்மாவும் அக்காவும் அண்ணியும் நிற்கிறார்கள். கையில் ஒரு கவர். வழ வழ ஒஸ்தி காகிதம் எல்லாம் கிடையாது. சாதாரண காக்கி கவர்தான். 

ஆனால் அதிலிருந்த கடிதம் சொன்னது.

" எல்.ஐ.சி நிறுவனத்தில் தாங்கள் உதவியாளராக பணியில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் " 

No comments:

Post a Comment